Sunday, December 25, 2011

தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன?

அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.

இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.

பிரதான பிரச்சினைகள் தான் என்ன?

தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.

குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.

இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.

எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.

மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்

இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.

இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் நிலை என்ன?

நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.

பிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.

எனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.

நட்புறவுடன் பழகும் நிர்வாகங்கள்

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.

இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.

ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

கடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
பெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

Wednesday, December 21, 2011

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ

தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

ஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.

அரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.

Friday, December 16, 2011

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் தெரிவித்ததையடுத்து அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, November 2, 2011

தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்பு

மாத்தளை அம்பதன்னை பிரதேச தோட்டங்களிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கமடுவ, மாகஸ்கந்த, கரக தென்னை, நாகல, லெகல ஆகிய தோட்டங்களில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அங்கிருந்த தொழிற்சாலை உபகரணங்கள் யாவும் தோட்ட நிர்வாகங்களால் எடுத்துச் செல்லப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இந்த தொழிற்சாலைகளில் தொழில் செய்த தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த தோட்டங்களில், பறிக்கப்படும் கொழுந்துகள் யாவும் அருகில் உள்ள கெலாபொக்க தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தேயிலை கொழுந்துகள் பழுதடைவதாகவும் இந்த தேயிலை தொழிற்சாலைகளையும் மூடியுள்ளதால் இது இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு எனவும் தோட்டமக்களும் அங்கு கடமை புரிந்த உத்தியோகத்தர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மாற்று தொழில்களை யாவது பெற்றுத்தருவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, October 17, 2011

உணவு விஷமானதால் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்த நிலையில் கொட்டகலை, நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, மஸ்கெலிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இரத்னகிரி, நோர்வூட், பார்மஸ்டன், லோகி, மிடில்டன், கிரேட்வெஸ்ரன் ஆகிய பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களே இச் சிறுவர்தின விழாவில் பங்குபற்றியிருந்தனர்.

உணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்றுவலியும், மயக்கமும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சிறியவர்கள், பெரியவர்களும் அடங்குவர்.

இந்த உணவை விநியோகித்தோர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிபர்கள் உட்பட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருக்க கால்நடை உற்பத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான அறுமுகன் தொண்டமான் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் சந்திப்பொன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகளில் தனிப்பட்டதாரர்கள் நிகழ்வொன்றை நடத்துவதாயின் சகல மட்டங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளில் தனிப்பட்ட நிறுவனங்களால் உரியவர்களின் அனுமதியின்றி எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாது. அனுமதி பெற்ற பின்னரே இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என்றார்.

மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியினால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு

கடந்த சில மாதங்களாக மலையகப்பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையகப் பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியினால் தேயிலைச் செடிகள் கருகியும் வாடியும் காணப்படுவதால் நிர்வாகம் தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்துள்ளது. அத்துடன் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள் மாத்திரம் வேலை வழங்கும் நிலையில் தொழிலாளர்கள் 18 அல்லது 25 கிலோ கொழுந்து பறித்தாலும் கூட அவர்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்பவே தீபாவளி முற்பணம் வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தோட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இது குறித்து அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்தைக் கூட இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி முற்பணமாக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா இம்முறை 4,500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இப் பண்டிகையை கூட சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Saturday, August 20, 2011

Wednesday, April 27, 2011

மலையகப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உணர்த்தும் உண்மைகள்

இலங்கையில் பெண்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று நோக்கி பார்ப்பது அவசியமானதாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும்; பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960ன் பிறகு 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள எனக் கூறலாம். அந்த வகையில் மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் காணப்படும் பெண்களின் கல்வி, சமூக, அரசியல் சமய நிலையுடன் ஒப்பிடும் போது சகல துறையிலும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக பெண்கள் என்று அடித்து கூறலாம். ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்கு காணப்பட்டாலும் ஏனைய சமூக பெண்ணின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும் போது இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை. என்பதை ஏற்றுக் கொண்டு தான் வேண்டும்.

போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தனக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறப்புச் சான்றிதழ் எடுப்பதந்கு தவறி விடுகின்றனர் என்றால் அதுவும் பொய் அல்ல என்பதற்கு சான்றாக அண்மையில் மலையகத்தின் நடமாடும் சேவையின்போது பிறப்புச்சான்றிதழ்; தேசிய அடையாள அட்டை இல்லாதோரே அதிக அளவில்; காணக்கூடியதாக இருந்தது. ஆதனால் சிலர் தனது ஓய்வூதியத்தைக்கூட பெறமுடியாமல தவிக்கின்றார்கள் அல்லது எடுக்காமலேயே மறணித்தும் போகின்றார்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இது ஆண்களையும் சார்ந்த ஓர் நிகழ்வும் கூட.

தனக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையூடான ஒரு சமூதாய கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில் நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தனது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் வறுமை. விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இப் பெண்கள் காணப் பட்டாலும் அண்மைக் காலமாக இந்த பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலை விட்டு கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும்.

எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இருந்த போதும் இந்த பெண்களின் சமூக கட்டமைப்பு சார்ந்த வாழ்க்கையில் குறிப்பிடுமளவில்; முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து.

இந்த பெண்களுக்கு, பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள்; வழங்கிவரும் சேவைகள் பூரணமாக சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன யுக உலகில் ஒரு அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும். மலையக பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடுஇ கல்விஇ கலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே இலங்கைக்கும் வெற்றி. –
ரேணுகாதாஸ்

நன்றி- வீரகேசரி

கினிகத்தேனை லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் கடவத்தை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் 27-04-2011 அதிகாலை 1.10 மணியளவில் சுமார் 150 அடி பள்ளத்தில் லொறி ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து மரக்கறி வகைகளை ஏற்றி வந்த இந்த லொறி பாதையை விட்டு விலகி பள்ளத்தில் புரண்டுள்ளது. இதன் பின்பு அயலவர்கள் கினிகத்தேனை பொலிஸாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போது படுகாயமடைந்த நிலையிலிருந்த மூவரை மீட்டு கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனையைச் சேர்ந்த 31 வயதுடைய முருகையா ஜெயரத்னம் என்பவரே உயிரிழந்தவராவார். படுகாயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday, April 11, 2011

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தவும்


புதிதாக செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று தமது தொழிற்சங்கத்தால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவற்றை சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதியின் தொழில் உறவுகள் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 285 ரூபாவும் மாதத்தில் 75 சதவீதத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மேலதிகமாக வழங்கப்படும் 90 ரூபா மற்றும் 16 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்காக வழங்கப்படும் 30 ரூபா என்பன போதுமானவையாக இல்லை.அத்துடன் 405 ரூபா சம்பளத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் முழுமையாக பெறுவதில்லை.தற்போது ஊ.சே.நி.,ஊ.ந.நி என்பன 285 ரூபா சம்பளத்திற்கே கணிக்கப்படுகின்றது.

அத்துடன் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானிய முறையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.சம்பள நிர்ணய சபையால் நிறுத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.அவர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது சங்கம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொழிலுறவுகள் செயலாளர் ஊடாக தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தொழிலமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்பல வருடங்களாக மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அதிகாரம் செலுத்துவதற்கானஊன்றுகோலாக இச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் இயல்பு வாழ்வு திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை என்கிற போர்வையில் அவல வாழ்க்கையே அங்கும் தொடர்கின்றது.

ஒரு தேசத்தின் இறைமை, அதன் உரித்துடைமை, Popular Sovereignty அங்கு வாழும் மக்களிடமே உள்ளது என்கிற கோட்பாட்டின் அடிப்படையை மறுக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஊடாக ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கிறது அரசு.
இதனைக் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை தாண்டும் அடுத்த வருடம் 10 வீதத்தை அடையும் என்கிற வகையில் பொருளாதாரப் புள்ளி விபரங்களை வெளியிட்டு அனைத்துலக நாணயச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக அவசரகாலச் சட்ட ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றன.

பண வீக்கத்தை குறைத்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) வரவழைத்தால் நாட்டின் தலைக்குரிய வருமானம் (Income per Capital) அதிகரித்து நாட்டில் வளம் கொழிக்குமென அறிவுரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.

Stand by Arrangement (SBA என்கிற திட்டத்தின் கீழ் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதால் 2188.3 மில்லியன் டொலர் மேலதிக கடனுதவியை வழங்கவிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கடந்த 4 ஆம் திகதி அறிவித்துள்ளது.
ஆகவே உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் கடனளிப்பில் ஏறத்தாழ 1.75 பில்லியன் டொலர்களை அந் நிதி நிறுவனம் வழங்கியுள்ளதெனலாம்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பல தரவுகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.அண்ணளவாக இலங்கையின் உள்ளூர் மொத்த உற்பத்தி (Gross Domestic Product) $49.55 பில்லியன் டொலராக இருக்கும் அதேவேளை, வருடாந்த பொருண்மிய வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கலாமெனக் கூறுகின்றது.

இதில் விவசாயத் துறையானது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 11 சதவீதமாகவும் (அரிசி, தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள் என்பன முக்கியமானவை) சேவைத் துறை 59 சதவீதமாகவும் (உல்லாசப் பயணத்துறை, போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறை, நிதி நிர்வாகச் சேவை உட்பட) கைத்தொழில் துறை 29 சதவீதமாகவும் (முக்கியமாக ஆடை உற்பத்தி, பதனிடப்பட்ட தோல் பொருட்கள் இறப்பர்) இருப்பதாக அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.8.3 பில்லியன் டொலராக இருக்கும் வர்த்தக ஏற்றுமதியில் தேயிலை, ஆடை, இறப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.

இதில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய சந்தைகளாக அமெரிக்கா (1.77 பில்லியன் டொலர்) பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விளங்குவதோடு 13.5 பில்லியன் பெறுமதியான இறக்குமதியில் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங், சீனா, ஈரான், மலேசியா, ஜப்பான், பிரித்தானியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா (178 மில்லியன் டொலர்) போன்றவை முக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை, ஐரோப்பிய நாடுகள் போன்று இலங்கையையும் வாட்டுவதை இப்புள்ளி விபரங்கள் புலப்படுத்துகின்றன.

உள்ளூர் மொத்த உற்பத்தியில் 29 விழுக்காட்டினுள் அடங்கும். ஆடை உற்பத்தியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் தடையால் பாதிப்புறும் அதேவேளை, பெருந்தோட்ட பயிர் செய்கையினால் பெறப்படும் தேயிலை, இறப்பர் போன்றவற்றிற்கான சந்தைப் போட்டியினால் 11 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் இத் துறையும் பாதிப்படைகிறது.

உல்லாசப் பயணத்துறையில் மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் தற்போது பெருமளவில் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகளைத் தேடி அலைகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகள், எண்ணெய் வளத்தை பங்கு போட அணு ஆயுத வல்லரசுகளின் ஊடாக பன்னாட்டுக் கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எரிவாயுச் சிலிண்டர்களின் விலையை மட்டுமல்லாது, இறக்குமதியாகும். உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்திவிடும்.

ஆகவே பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர் தரப்பிலிருந்து சம்பள உயர்வு கோரி, இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.

2009 மார்ச் 31 ஆம் திகதியன்று முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே தினச் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக 405 ரூபாய் வழங்கப்படுமென்ற கூட்டு ஒப்பந்தம் (ஊழடடநஉவiஎந யுபசநநஅநவெ) உருவாக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது நடைபெறும் சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை இழுத்தடிக்கப்பட்டு தீபாவளிக்கு “போனஸ்’ வழங்கும் நிகழ்வோடு இனிதே முற்றுப் பெறும் என்கிற கடந்த கால கசப்பான அனுபவங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார். 6 மாதங்களாக நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டங்களும் தீபாவளிக் கொடுப்பனவோடு மறைந்து விடுமென்பதே உண்மை.

தோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்களுக்கிடையே நிகழ்ந்த இந்த வார சந்திப்பு, வருகிற 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.யோகராஜன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபயசேகரா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ. 250 ஆக மொத்த நாட் சம்பளம் ரூ. 750 வை ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென மனோ கணேசன் முன்வைக்கும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தென்படுகிறது.

சம்பள உயர்வினைக் கேட்டால், கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வியாக்கியானம் செய்யும் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் மத்தியில் வறுமை அகன்று வாழ்வில் வளம் ஏற்பட்டுள்ளதாக பொய் உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மிகக் குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலையை விற்பனை செய்து, தொழிற்சங்கங்களுக்கு நட்டக் கணக்கைக் காட்டுவது முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையில் வழமையான விடயமே.
அந்த உற்பத்திப் பண்டம், தரகு முதலாளிகள் ஊடாக பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டு இதே தேயிலை பெரும் இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தினால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த முதலாளிமார் பேச்சுவார்த்தைகளின் போது எத்தனை மில்லியன் டொலர் வருமானம், இத் தேயிலை ஏற்றுமதியால் அரசிற்கு அந்நியச் செலவாணியாகக் கிடைக்கிறது என்பதனை தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூற மறந்து விடுவார்கள்.
அதேவேளை, தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமாரோடு சமரசப் போக்கில் நகர்ந்து கடும் குளிரிலும் வெய்யிலிலும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை தட்டி விட்டு கடுமையான உழைக்கும் அந்த அற்புதமான மனிதர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொல்வதில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

உழைக்கும் வர்க்கம், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை பெறும் உரிமையுடையவர்கள் என்கிற அடிப்படை ஜனநாயகத்தைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் மக்கள் அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.
வட, கிழக்கில் மட்டுமல்லாது, மலையகத்திலும் தமிழ் பேசும் இனமானது பல்வேறு பரிமாணங்களில் அரச ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருவதைத் தமிழர் தலைமைகள் புரிந்து கொள்வது நன்று.

உழைப்புச் சுரண்டலாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் அதிகாரமற்ற பொம்மைச் சபைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் தமிழ் பேசும் மக்கள் அடக்கப்படுவதை இனியாவது உலகிற்கு எடுத்துக் கூற ஜனநாயக விரும்பிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

-இதயச்சந்திரன்

Thursday, March 31, 2011

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வழக்கம் போலவே மலையக அரசியல் தலைமைத்துவங்களிடம் கோஷ்டி மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. மலையக மக்களின் மேல் தாம் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் மலையக அரசியல் தலைமைத்துவங்கள் முன்வைக்கும் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளும் நிபந்தனைகளும் எச்சரிக்கைகளும் இன்றுவரை அந்த மக்களின் வறுமை நிலையை மாற்றியமைக்கத்தக்க எந்த முடிவையும் பெற்றுக்கொடுக்கவில்லையென்பதே எமது நீண்டகாலக் கவலை. கூட்டு ஒப்பந்தத்தை இந்தத் தலைமைகள் சுயலாப அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதே அன்றிலிருந்து இன்றுவரை நடந்தேறி வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன ஒரு முகாமாகவும் ஏனைய மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இன்னொரு முகாமாகவும் நின்று செயற்படுவதை முதலாளிமார் சம்மேளனம் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பைத் தீர்மானிக்கின்றது. தற்போது கூட கூட்டு ஒப்பந்தத் திகதி; காலாவதியாகின்ற நிலையில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கிடையில் இழுபறிகள், கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இந்தவித இணக்கப்பாடற்ற தன்மைக்கு முடிவு காணப்படாத பட்சத்தில் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு வெறும் கானல் நீராகவே போய்விடும்.
கடந்தமுறை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 290 ரூபாவும் நாட்சம்பளமாக 405 ரூபாவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக மொத்தம் 750 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பல தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதுவிடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெறாத தொழிற்சங்கங்கள் இணைந்து செயற்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நஷ்டக் கணக்கைக் காட்டத் தொடங்கியுள்ளதுடன் தோட்டத் தொழிலாளர்களிடையே வறுமைநிலை குறைந்துள்ளதாகவும் அவர்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளதாகவும் கூறத் தொடங்கியுள்ளமை கடந்த முறையைப் போலவே இம்முறையும் கூட்டு ஒப்பந்த கைச்சாத்து பெரும் இழுபறியில்தான் முடியப் போகின்றது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்புக் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் மலையகத் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடுத்த இரு வருடங்களுக்குத் தீர்மானிக்கப் போகும் இந்த விடயத்திலாவது பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும். அதைவிடுத்து வறட்டுக் கௌரவம், பிடிவாதத்துடன் செயற்பட்டால் பாதிக்கப்படப்போவது இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே.

மலையகத் தொழிற்சங்கங்களை உடைத்து அதில் குளிர்காயாது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினையும் கருத்திற்கொண்டு நியாயமானதொரு சம்பள அதிகரிப்பை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டும். அத்துடன் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் செயற்படும் ஒருசிலர் தமது இந்தக் கபடத்தனத்தைக் கைவிட்டு தமது மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வழிவகைகளைச் செய்யவேண்டும். அத்துடன் தனியார் துறையினரின் சம்பள உயர்வுகள், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்படுத்தும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அரசுக்குள்ளது. ஆனால் தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாது நியாயமானதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசும் பொறுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

நன்;றி- தினக்குரல்

Tuesday, March 29, 2011

அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மொத்த நாட் சம்பளமாக 750 ரூபா -மனோ கணேசன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மேலதிக ஊக்குவிப்புச் கொடுப்பனவாக ரூபா 250 ரூபாவையும்; சேர்த்து மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க,தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் நஷ்டக்கணக்கு காட்டத் தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப்போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம், ஐக்கிய தேசியக் கட்சியின், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளத் தொகை தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றோம்.
சம்பள பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளாத அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தேசிய ஊடகங்களில் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் என்ற தகைமையையும் மீறிச்சென்று, தோட்டத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே வறுமை குறைந்துள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் வழமை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் துறையில் வறுமை விகிதம் அதிகரித்துச் செல்வது நாடறிந்த சங்கதியாகும். கடந்த 20 வருடங்களில் தேசிய ரீதியாக வறுமை விகிதம் சரிபாதியாக குறைந்துவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரம் அது அதிகரித்துச் செல்கின்றது. சில தேசிய ஊடகங்கள் மூலமாக முதலாளிமார் சம்மேளனம் முன்னெடுக்கும் இத்தகைய உண்மையற்ற பரப்புரையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மேலும், கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்ட நலவுரிமை சேவைகள் எதுவும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் சமூக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு தோட்ட கம்பனிகள் சட்டப்படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதில்லை. அத்துடன் தோட்ட கம்பனிகள் தனியார் உடைமையாக்கப்பட்ட பொழுது தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பங்குகளின் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தோட்ட நிறுவனங்கள் உற்பத்திக்கு ஒரு நிறுவனத்தையும், ஏற்றுமதிக்கு வேறு நிறுவனத்தையும் நடத்திவரும் தந்திரம் எங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்துவிட்டு மிகக்குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் இந்த தேயிலை பெரும் இலாபத்துடன் எற்றுமதி நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கணக்குகளையே சம்பள பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் பயன்படுத்துகின்றது.

அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் 6மாதங்களுக்கு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின்றார்கள். பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 6 மாதங்களுக்கான நிலுவைச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த நிலுவைச் சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படுகின்றது. கடந்த முறை இத்தகைய கொடுப்பனவாக சுமார் 25 கோடி ரூபா தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இது இந்நாட்டு தொழிற்சட்டங்களை மீறும் அத்துமீறிய சட்ட விரோத செயலாகும். இதற்கு கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணைபோகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்துக் கோணத்திலும் தங்களுக்கு அதிகபட்ச இலாபத்தைப் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்க மறுப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு நாம் இடந்தர முடியாது.இதற்கு உடன்பாடு காணப்பட முடியாவிட்டால், அதற்கான காரணங்களை முதலாளிமார் சம்மேளனம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பிலான அனைத்து விவகாரங்களையும் அவர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 138 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி


கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து தோற்றிய 156 மாணவர்களில் 145 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், இவர்களில் 138 மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளைவிட இம்முறை பாடசாலையின் அடைவு மட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங்கம் தெரிவித்தார்.
ஆர்.டிலாக்ஷன்,எம்.கௌசிக்,ஆர்.திலாக்சான்,ஏ.சிந்துஷா, ஜெ.லக்சாலினி ஆகிய 5 மாணவர்களும் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 4 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் 9 மாணவர்கள் 6 பாடங்களிலும் 9 மாணவர்கள் 5 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 156 மாணவர்களுள் 150 மாணவர்கள் 6 பாடங்களுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை, இச்சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களையும் மாணவர்களையும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களையும் பாடசாலையின் நிர்வாகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர் ஒன்றியம்,பாடசாலைச் சமூகம் என்பவற்றின் சார்பில் அதிபர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Monday, March 28, 2011

மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.

ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, March 23, 2011

தொழிற்சங்கங்கள்- முதலாளிமார் சம்மேளத்திற்கிடயிலான சந்திப்பு அடுத்தவாரம்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்திற்கிடயிலான பேச்சுவார்த்த எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு கூட்டொப்பந்தம் தொடர்பான கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடயிலான சந்திப்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் நடபெறவுள்ளது.

எதிர்வரும் 31-03-2011 ஆம் திகதியுடன் கூட்டொப்பந்தம் நிறைவு பெறுகின்ற நிலையில் எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற வகையிலான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் கோரிவருகின்றன.

அதாவது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவை இணைந்து அமைத்துள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரியுள்ளது. தோட்டத் தொழிலாளருக்கு நிபந்தனையற்ற குறைந்தபட்ச நாட் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்பாக 250 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இன்றைய வாழ்க்கை செலவு உயர்வுக்கு ஏற்ப நிபந்தனையற்ற நாட்சம்பளமாக 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது என்றுமில்லாத வகையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த 700 ரூபா சம்பள உயர்வு அவசியமானதென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தம் மூலம் நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக 500 ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக 750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்

கொழுந்து நிறுவைக்குப் பெண் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமைதோட்டத்தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கின்ற பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து தேயிலைத் தூளினை கொள்வனவு செய்வதில் வெளிநாடுகள் சில ஆர்வம் செலுத்தி வருகின்றன.

சில தோட்டக் கம்பனிகள் வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி சில நலனோம்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நவீனகால அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை இந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வதற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.

அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.

ஆனால் தெரேசியா தோட்டத்தில் இரண்டு பெண்கள் தமது தலையில் கம்புகளை தாங்கிக் கொண்டு கொழுந்தினை நிறுவை செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.இவ்விடயம் தொடர்பில் மலையகத் தொழிற்சங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன?

Monday, March 21, 2011

மலையகத் தமிழ்த் தலைமைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றனவா?

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்ததின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

தங்கக் காசும் தங்குவதற்கு இடமும் இலவசமாம். தேயிலைத்தூரில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம் என நம்பி வந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் மற்றும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை இவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் மறுபுறத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால் அவர்களின் கொள்கைகள் இறுதி வரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள் - சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது காலத்தில், பேசுவது போல் செயலிலும் தீரத்தைக் காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயம் எழுதப்படும்.

ஆனால், அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெறுகின்றன. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் எனக் காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் சரி மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் சரி அவற்றுக்கென்று தனித்துவம், தனிக்கொள்கை உண்டு. அவற்றை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையகத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதை செப்பனிடுவதும், கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான நோக்கினை அரசியல் தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்து வைப்பதன் மூலம் மலையகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

அடுத்து மலையகக் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததால் அவர்களின் அறிவாற்றலிலும் மந்த நிலை காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல் கொடுக்காமைக்குக் காரணம் என்ன?

அதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்| என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கிய காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு வருமான(சம்பள) அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமைகள், வரலாற்றுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும் அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் மாறாத வடுவாகி விடும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது உண்மையான அரசியல் சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

மலையக மக்கள் மின்சாரம் பெற சலுகை

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள உள்ள மக்கள் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் கடிதம் அவசியமில்லை என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தாலே போதுமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2012 ஆண்டுக்கு முன்னதாக தோட்டங்களில் குடியிருக்கும் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை பூர்த்திசெய்யவும், நாடு தழுவிய ரீதியில் 4ஆயிரத்து 500 கிராமங்களில் 4ஆயிரத்து 500 மின்மாற்றிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுகள், மலைப் பிரதேசங்கள், வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் வசதிகளற்ற 40 ஆயிரம் குடும்பங்களுக்கு சூரிய சக்தி, காற்றலை மின் உற்பத்தி மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் மூலம் மின் இணைப்புகள் வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, March 16, 2011

வாக்குகள் சிதறாதிருக்க வழிசமைப்போம்

எந்தவொரு நாட்டிலும் பொது நிர்வாக கட்டமைப்பு மிக முக்கியமானது. இந்த நிர்வாகத்தை நாம் அரசு என்று அழைக்கின்றோம். இந்த அரசை முன்பு நடத்தியவர்களை அரசர்கள் என்று அழைக்கின்றனர். அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தை முடியாட்சி எனவும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தை காலனித்துவ ஆட்சி என்றும் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து தம்மை ஆளச் செய்யும் முறைமை மக்களாட்சி என்றும் கூறுகின்றோம்.

இந்த மக்களாட்சியில் மிக பிரதானமான ஆட்சியே உள்ளுராட்சி என்பது இது மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு முறை என்பதோடு எப்போதும் தம்மோடு வாழும் ஒரு நபரை குறிப்பாகத் தமது பிரதேசத்தில் தமக்காக சேவை செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்வதே ஆகும். இலங்கையை பொறுத்தவரை உள்ள ஆட்சி மட்டங்களை நாம் பார்ப்போமேயானால் அரசியல் நிர்வாகத்தினை இலகுபடுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு மத்தி;ய அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தைத் தவிர இரு அரசியல் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன. மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்றங்கள். ஆகவே மாகாண சபையானது நடைமுறையில் உள்ள யாப்பிற்கு 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் விளைவாகத் தோற்றம் பெற்ற ஒன்றாகும். உள்ளுர் ஆட்சி மன்றங்கள் 1930களின் பின்னர் படிப்படியாக வளர்ந்த நிறுவன கட்டமைப்பாகவும் பேசப்படுகின்றது.

இலங்கையில் 09 மாகாணசபைகள் மாவட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணசபை கண்டி, மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துக் கொண்டால் அதில் மூன்று அமைப்புக்களாக நாம் பார்க்கலாம். 01. மாநகரசபை, 02. நகரசபை, 03 பிரதேசசபை. இதில் மாநகரசபை என்பது பெரிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும்.
இவைகள் நகரம் சார்ந்த கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும். நகரசபை என்பது சிறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே பிரதேச சபைகளும் கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றினை ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட பிரதேசசபைகளை எடுத்துக் கொண்டால் அம்பகமுவ, லிந்துல, நுவரெலியா, கொத்மலை, உடபலாத்த, போன்ற பிரதேச சபைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பிரதேச சபைகள் பற்றியும் அதன் சேவைகள் பற்றியும் ஆராய்வோமானால் முன்பு குறிப்பிட்டது போலவே இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான இம் மன்றம் 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். ஏனைய எல்லா உள்ளுராட்சி மன்றங்களையும் விட இச் சபை மக்களுக்கு மிகவும் அண்மையில் உள்ள அரசியல் நிறுவனமாகும்.

பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் பிரதானமானது யாதெனில் பிரதேசததில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதோடு அவ்வகையில் பிரசே சபையானது பிரசே சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்ட பிரஜைகளின் தேவைகளையும், பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளது என்பதேயாகும்.

அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேசசபைகளுக்கிடையில் வேறுபடலாம். அது தேர்தல்கள் ஆணையகத்தினால் பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் நிலப்பரப்பு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் அல்லது மாகாண சபையில் இருப்பது போன்ற பிரதேச சபைகளில எதிர்க்டசி என்று ஒன்று இருப்பதில்லை. மாறாக எல்லோரும் இணைந்து தமது பிரதேச மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டும் என்பதே பிரதேச சபையினூடாக எதிர்பார்க்கப்பட்டதாகும். மக்கள் இச்சபைக்காக வாக்களித்த போதிலும் வெற்றி பெற்ற கட்சியின் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் தலைவராக வருவதோடு சில சமயங்களில் தலைவர் யார் என்பதை வெற்றி பெற்ற அரசியல் கட்சியே தீர்மானிக்கின்ற நிலையும் ஏற்படுகின்றது.

இம்முறை 06-01-2011 அன்று வெளிவந்த 1687 இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி 4 மாநகர சபைகள், 39 நகரசபைகள், 258 பிரதேச சபைகளுக்கான 301 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மார்ச் மாதம் 17ம் திகதி 2009ம் ஆண்டு தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாகவே தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் கணிசமான அளவு தேர்தலில் போட்டியிட களம் இறங்கிய போதிலும் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் எவ்வித ஒற்றுமையும் இன்றி மக்களிடம் தங்களுக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். சிலர் தங்களுது குடும்பங்களை மையமாகவும், சொந்தங்கள் மட்டும் தமக்கு வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையில் இயங்குகனிறனர். இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படுமே தவிர இறுதியில் யாருமே வெற்றிபெற முடியாமல் போகும் அபாய நிலையே அதிகம் காணப்படுகிறது.

ஏலவே பிரதேச சபையின் 33வது சரத்திற்கமைய தோட்டக் குடியிருப்புக்கள் மற்றும் நிலப்பிரதேசம் பிரதேச சபைக்கு உள்வாங்கப்படாமையினால் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தோட்ட மக்களுக்கு சென்றடைவதில் தடை எற்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் தோட்ட மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே வாழும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஏதும் நம்மை உண்டா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தடுமாற்றத்துடன் இருக்கின்றனர்.

சில தோட்டங்களில் வேட்பாளர்கள் சென்று தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டபோது இம் முறை தேர்தலை பகிஷ்கரிக்கப்ப போவதாகவும் கூறியுள்ளனர். காரணம் இத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமக்கு எந்த நன்மையும் கிட்ட போவதில்லை என்பதனால். எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக தனது கவனத்தை செலுத்தி 33வது பிரதேச சபை சரத்தை பற்றி பரிசீலித்து மலையக மக்களையும் அவர் தம் அபிவிருத்தயின் பங்காளர்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த 33வது சட்டத் திருத்தம் தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் இதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய முடியும் என்பது உறுதி

சந்தனம் சத்தியானந்தன்

நன்றி - வீரகேசரி

Thursday, March 10, 2011

மரக்கறி செய்கையாளர்களுக்கு மானிய விலையில் பசளை. விரும்பிய இடத்தில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு; - ஜனாதிபதி


நாட்டில் வாழும் சகல மரக்கறிச் செய்கையாளர்களுக்கும் மானிய விலையில் பசளை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக நுவரெலியாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் படிவங்களை நிரப்பிக்கொண்டு அங்குமிங்கும் அலையாமல் திறந்த சந்தையில் எந்த இடத்திலும் மரக்கறி செய்கையாளர்கள் மானிய விலையில் பசளையைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்

கமத்தொழிலாளர்களுக்கு 350.00 ரூபா படி தொடர்ந்தும் பசளையை மானியமாகவும், தேயிலை செய்கையாளர்களுக்கும், இறப்பர் செய்கையாளர்களுக்கும் தென்னந் தோட்ட உரிமையாளர்களுக்கும் பசளையை மானியமாகவும் வழங்கும் அதேவேளை மரக்கறிச் செய்கையாளர்களுக்கு விதைகள் தான் மானிய விலைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் அவர்களுக்கும் பசளையை மானிய விலையில் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டா

மேலும், நாட்டில் பத்து இலட்சம் குடும்பங்களை பொருளாதார அலகுகளாக மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தை நாளை 12ம் திகதி முழுநாட்டிலும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் இத்திட்டம் மூலம் முழு நாடுமே வளம்பெறும் என்றார் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுமாறு நாம் மக்களை கேட்கின்றோம். அதற்கு முன்னர் நாம் வீட்டுத் தோட்டச் செய்கையை ஆரம்பித்து விட்டோம்.
நாட்டில் 28 இலட்சம் கித்துல் மரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று சதவீதமான பயன்களே பெறப்படுகின்றன. இதற்கு வெளிநாட்டவர்கள் தயாரித்த சட்டங்கள் தான் தடையாக உள்ளன. அதனால் இம்மரங்கள் மூலம் நூறு சதவீதம் பயன்பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் கித்துல் பாணியும், கித்துல் கருப்பட்டியுமே உற்பத்தி செய்ய இடமளிக்கப்படும் என்றார் ஜனாதிபதி.

உள்ளூராட்சி மன்றங்கள் கிராமங்களின் தேவைகளையும் குறைபாடுகளையும் நிறைவேற்றி வைக்கக் கூடிய நிறுவனங்கள். கிராமங்களில் நிலவுகின்ற குறைகளையும், தேவைகளையும் மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பும் அவற்றுக்குள்ளது. அதனால் இந்தப் பொறுப்பை ஐ. ம. சு. மு. உறுப்பினர்களாலேயே சரிவரச் செய்ய முடியும்.
பயங்கரவாதத்தினால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, ஜனாதிபதி அபேட்சகர் காமினி திஸாநாயக்கா, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட ஆயிரக்கணக்கானோரைப் பலி கொடுத்திருக்கின்றோம். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மலையகப் பகுதிகளிலுள்ள சகல தோட்ட ஆஸ்பத்திரிகளையும் அரசாங்கம் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வருகின்றது. நுவரெலியா ஆஸ்பத்திரியும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. முழு நாட்டிலுள்ள சகல கிராமங்களிலும் குறைந்தது ஒரு வீதியாவது கொங்கிரீட் இட்டு செப்பனிடப்பட்டிருக்கின்றது. சுகாதாரத் துறைக்கும் கல்வித் துறைக்கும் நாம் பாரியளவு நிதியை வருடா வருடம் செலவிடுகின்றோம் என்றார்

Tuesday, March 8, 2011

சர்வதேச மகளிர் தினம் இன்று

சம உரிமை சமவாய்ப்பு எதிலும் முன்னேற்றம் எனும் தொனிப் பொருளில் பொதுவாக சர்வதேசமகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ந் திகதியன்று உலகளாவிய ரீதியில்அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண் ஆதிக்கத்தினால்இ பெண்கள் பல் வேறு வன்முறைகளுக்கும்உபாதைகளுக்கும் உட்பட்டு தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தும் வேதனையில் மூழ்கியிருப்பதை உலகெங்கிலும் பரந்து வாழும் மக்களுக்கு ஞாபகப்படுத்தி பெண்களையும் சரிசமஉரிமையுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைப்பதற்கு இந்த சர்வதேச மகளிர் தினம் உதவுகின்றது. பெண்கள் யுத்தம் மற்றும் வன்முறைகளினால் பெரும் துயரத்தைஅனுபவிக்கிறார்கள். பொதுவாக பெண்களின் பாதுகாப்புஇ சமூக அந் தஸ்து என்பனபாதிக்கப்பட்டுஇ இளம் விதவைகள் என்று நாமம் சூட்டப்பட்டு சமூகத்தில் நிலவும் ஆண் ஆதிக்க அவலங்களில் சிக்கி அவர்கள் வேதனைக்கடலில் மூழ்கி அல்லல்படுகிறார்கள்.

உலகில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் மேற்கத்தைய நாடுகளில்தொழிற்சாலைகளில் பெண்கள் பணி புரிந்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைஎதிர்த்துஇ 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதியன்றுஇ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் பெண்கள்தங்களுக்கும் ஆண்கள் பெறும் வேதனத்திற்கு சரிசமமான வேதனத்தையும் ஏனைய சலுகைகளையும் கோரி ஆடைத்தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டநிகழ்வை நினைவு கூரும் முகமாகவே சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் யோசனையைமுதன் முதலில் முன்வைக்கப்பட்டது.

1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை கேட்டுஇ நடத்தியபோராட்டத்தை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி தியயோடர் ரூஸ்வெல்ட் நிலைகுலைந்து போனதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களின் உரிமை படிப்படியாகக் கிடைக்க ஆரம்பித்ததாகவும்அறிவிக்கப்படுகிறது. 1910 ஆம் ஆண்டில்இ ஹேகன் நகரில் சர்வதேச பெண்கள் மகாநாடு நடத்தப்பட்டது. அதையடுத்தே உலக நாடுகளில் சர்வதேச மகளிர் அமைப்பு கள் தோன்றின.பெண்களிடமும் மனித நேயம் இருக்கிறது. எனவே பாலியல் வேறுபாட்டிற்கு புறம்பாக ஆண்மைபெண்மை என்ற பாகுபாடு காண்பிக்காமல்இ தங்கள் உரிமைகளை வழங்கு மாறு பெண்ணினம் ஆணினத்திடம் அன்று அன்புக்கரம் நீட்டிய போது ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்தஅன்புக்கர த்தை பற்றிக் கொண்ட வேளையிலேயே ஆண் பெண் சமத்துவம் உலகில்சாத்தியமாகியது.

இலங்கையில் மார்ச் மாதம் 8ந் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.எனினும்இ அது பொதுவிடுமுறை தின மல்ல. உலகின் பல நாடுகள் இன்றைய தினத்தை விடுமுறைதினமாக அனுஷ்டிக்கின்றன. 1909 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதலாவது தேசிய பெண்கள்தினம் பெப்ரவரி 28ந் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் உலகெங்கிலும்இருந்து 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கோபெனேகளில் பெண் உரிமை குறித்துஇஒன்று கூடி கருத்துக்களை முன்வைத்தனர்.
பெண் உரிமையை பொறுத்தமட்டில் இலங்கை மற்ற நாடுகளை முந்திக் கொண்டு பெண்களின்உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை பாராட்டுக்குரிய ஒருவிடயமாகும். இந்தியாவுக்கு முன்னரே இலங்கைப் பெண் களுக்கு வாக்குரிமை கிடைத்தது.பாராளுமன்றம் பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு சரிசம வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும்என்பதற்கான சட்டம் இலங்கையில் இருக்கின்ற போதி லும்இ அது விடயத்தில் இலங்கையோ வேறுபல நாடுகளோ அந் தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வறிவிட்டன.

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியாக 1960 ஆம் ஆண்டில் திருமதி ஸ்ரீமாவோபண்டாரநாயக்கவை நியமித்துஇ இலங்கை உலக சாதனையை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர்இஅவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் நிறைவேற்று அதி காரத்தைக் கொண்டஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். எனினும்இ பாராளுமன்றத்தில் பெண்களுக்குஅளிக்கப்படும் விகிதா சாரம் மிகவும் குறைவாக இருப்பது வேதனையை அளிக்கின்றது.இலங்கையில் ஆண் ஆதிக்கம் வலுவிழந்து வருகின்ற போதிலும்இ பெண் உரிமைகளுக்குமுக்கியத்துவம் அளித்துஇ அவர்களுக்கு அரசியலில் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பது மிகவும்அவசியமாகும்.

இறுதியில் மலையக பெருந்தோட்டங்களில் பணிபுரியும் பெண்களு க்கு சம சம்பளம் அளிப்பதிலும்இலங்கை பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.தேயிலைத் தோட்டங்களிலும்இ இறப்பர் தோட்டங்களிலும் இந்த பெண்கள் சீரற்றகாலநிலையையும் பொருட்படுத்தாமல்இ நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காகமேற்கொள்ளும் பங்களிப்பை நாம் மறந்துவிடலாகாது.

தோட்ட மக்களுக்கு சேவையாற்ற தமிழ் உறுப்பினர்கள் தேவை


களுத்துறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு அமைச்சர் நிர்மல கொத்தலாவலவுடன் இணைந்து செயற்பட்டு வருவதன் காரணமாகவே கடந்த இரண்டு வருடகாலமாக களுத்துறை மாவட்ட தோட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க சேவையைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இப் பணியை இத்தோடு நிறுத்திவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும், பின்தங்கிய நிலையில் இருந்து வரும் தம் சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என புளத்சிங்கள பிரதேசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளரான ரி. ஜெயராஜா ஹல்வத்துறை,கோவின்ன குடாகங்கை, கூழ்கா,கல்லுமலை,மில்லகந்த,கொபவல ஆகிய தோட்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்

மாகாணசபை உறுப்பினராகவோ,பாராளுமன்ற உறுப்பினராகவோ,பிரதேசசபை உறுப்பினராகத் தானும் இல்லாது கடந்த இரண்டு வருட காலத்தில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு கணினிக் கருவிகள், பாடசாலை உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன்,அரச முதலீட்டு வங்கியினால் 1000 மாணவர்களுக்கு தலா 200 ரூபா வீதம் சேமிப்புக்கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு பாஸ் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான கீக்கியனகந்த பாடசாலைக்கென அமைச்சர் நிர்மலவுடன் இணைந்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையினால் 1 இலட்சம் ரூபா தற்காலிக கட்டிடத்துக்கு வழங்கப்பட்டு புதிய பாடசாலைக்கென காணி ஒதுக்கப்பட்டு 100 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் இரண்டு மாடிக்கட்டிடமும் கட்டப்பட்டு பூர்த்தியடையும் நிலையில் உள்ளது.

அரம்பஹேன,அலுக்கெட்டிய,கின்னஸ்லிகல்லுமலை,மில்லகந்த,மிஹிரிக்கெலே,குடாகங்கை,கூழ்கா,என்டர்சன்,எம்பரகல,கொபவல ஆகிய தோட்டங்களுக்கு சுமார் 4 கோடி ரூபா செலவில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பாதைகள் கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தோட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையக மக்கள் சுய சிந்தனையுடன் செயற்பட வேண்டும்


மலையக மக்கள் ஏனைய இதர கட்சிகளுக்கு ஏணியாக இருக்காது சுய சிந்தனையுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு உள்ளூராட்சித் தேர்தலில் தமது பிரதேச சபைகளுக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்ள முன்வர வேண்டுமென இ.தொ.கா. வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.டி.இராஜன் இரத்தினபுரி இ.தொ.கா.பணிமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்; கடந்த உள்ளுராட்சி சபை இ.தொ.கா. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பல பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டு அவர்களினூடாக பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டமையை யாரும் மறந்துவிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது மக்கள் தமக்கென பிரதிநிதிகளை இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு பெற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ஏனைய கட்சிகளின் ஆசை வார்த்தைகளையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் நாம் விலைபோனால் எதிர்வரும் காலங்களில் நாம் யாருமே இல்லாத அநாதையாக மாறி விடுவோம். இரத்தினபுரி மாவட்டத்தில் அவ்வப்போது இன வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அதனை தடுக்க கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்க முடியாது.தோட்டங்களில் எமக்கென உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவர் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை மேற்கொள்வார்.இதனை கவனத்திற் கொண்டும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் எமது பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

Thursday, March 3, 2011

தமிழ் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்


அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப்போட்டியின் போது கவரவில தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மீது பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள் (ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரி) தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

கவரவில தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட மாணவர் அணியினர் மீது மேற்படி பெரும்பான்மையின மாணவர் கூட்டம் ஒன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸார் இருவர், தாக்குதல் நடத்திய மாணவர்களில் இருவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன் போது அங்கு அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மீண்டும் அம்மாணவர் குழு குறித்த தமிழ் பாடசாலை மாணவர்களை தாக்க எத்தனித்துள்ளனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் உள்ளான கவரவில தமிழ் வித்தியாலய மாணவர்கள் போட்டிகளில் தமது திறமைகளை சரிவர வெளிக்காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வலயக்கல்வி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பாடசாலை கரப்பந்தாட்டக்குழுவுக்கு தலைமை தாங்கிய ஆசிரியர் கே.மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.