தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை, முறையாக பெற்றுக்கொள்ள முழுமனதுடன் தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்கான, நுவரெலியா மாவட்ட செயலணி படையின் இணை செயலாளர் வி.யோகேஷ்வரன் நுவரெலியா பொலிஸ் வீதியில் அமைந்துள்ள செயலணிபடை காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், 55 தொடக்கம் 60 வயதை பூர்தியாக்கி, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தொழில் விலக்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சேவைசெய்த காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ஈ.டி.எப்) ஆகியவற்றைப் பெற்றுகொள்வதில், பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.
“இந்த நிலையில், தோட்டத்தில் தொழில் புரியும் வயதெல்லயை அடைந்த உடன், தொழில் நீக்கம் செய்ய, சட்ட ரீதியாக தோட்ட நிர்வாகங்களுக்கு முடியும் என்றால், தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுடன் ஏன் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு உதவ முடியாது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும், “இந்த பிரச்சினை நமது நாட்டிலுள்ள அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
“இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றில் இருந்து, எமது செயலணி படைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில், தோட்ட நிர்வாகங்களை ஆராய்ந்த பொழுது, தொழிலாளர்கள் ஓய்வூதிய பணத்தை தொழில் திணைக்களத்துடன், மத்திய வங்கியில் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களை வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயற்படுவதில்லை என்பது, ஆரம்பக்கட்டத்தில் தெரியவந்தது.
“இதன் பின், தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குவதால், தோட்ட காரியாலயங்களில் ஓய்வூதியம் தொடர்பில் செயலாற்ற உத்தியோகஸ்தர்களும், அதற்கான தனி பிரிவு ஒன்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
“இதை விட தொழில் திணைக்களத்திற்குச் சென்று, தொழிலாளி ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பின் அதனை முறையாக நிரப்புவதற்கு, தோட்ட காரியாலயத்துக்குச் சென்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற விநாயகர் வேதம் ஓதப்படுகின்றது.
“இவ்வாறாக அழைக்களிக்கப்படும் தொழிலாளர்கள், கடைசி காலத்தில் தம் உழைப்பால் சேமித்த பணத்தை, அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“இந்நிலையில், தொழிலாளிகளான தனி மனிதர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடம் மனித உரிமைகள் மீறல் செயலணி படை செயலாளர் என்ற ரீதியில் கேட்டபொழுது, நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்றங்கள் எதுவும் காணவில்லை.
“எனவே, கொழும்பிலுள்ள தலைமை தொழில் திணைக்களத்தின், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான, தொழில் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று, தோட்டநிர்வாகங்களின் செயற்பாட்டை எடுத்துரைக்கப்பட்டது.
“தொழிலாளர்களின் ஓய்வூதிய விடயத்தில், தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயல்பட, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய ரீதியான தொழில் திணைக்களத்துடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உறுதி மொழி மீறும் பட்சத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின், எமது செயலணிபடை, இலங்கை மனித உரிமைகள் அமைப்புடன் பாரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தயாராகிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தரகர்கள் ஊடாக, கூடுதலான பணத்தை செலவு செய்து, ஓய்வூதிய பணத்தை பெற தொழிலாளர்கள் முயற்சிக்க, தோட்ட நிர்வாகங்கள் இடம்வழங்காது, தொழிலாளர்களுக்கு இந்த விடயத்தில் உதவ முன்வரவேண்டும் எனவும், அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.