Friday, April 4, 2014

இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது  பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார். 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டவாது மாநாட்டில் ஆர். இராஜேந்திரன் சங்கத்தின் தலைவராகவும் எம். தியாகராஜா பொருளாளராகவும் மற்றும் ஏனைய புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் பலமான தொழிற்சங்கம் ஒன்றை கட்டுவதன் அவசியம், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் வென்றெடுக்கப்பட வேண்டிய தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அம்மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி இ.தம்பையா மேலும் தெரிவித்ததாவது;

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களின் அடிப்படை வர்க்க, இன,  உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது இணக்கப்பாட்டுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவது காலத்தின் தேவையாகும். இதனை நிராகரிக்கும் தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதுடன், அவர்களின் இருப்பு நீண்டதாக இராது.

எனவே, மலையகத்தின் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான, பொது இணக்கப்பாட்டையும் பொது வேலைத்திட்டங்களையும் வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்பார்க்கின்றது. அங்கத்துவ போட்டி மனப்பான்மையும் தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்களின் வாக்குகளை திரட்டிக் கொள்ளும் போட்டி மனப்பான்மையும் நீக்கப்பட வேண்டும். மாறாக  தொழிற்சங்கங்களிடையே பரஸ்பர தொடர்புகளும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனூடாகவே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும். தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று எதிரிகளாக செயற்படும் போது தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் முடியாது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடியாது.

தொழிலாளர்களை வலுப்படுத்த வேண்டுமெனின் தொழிற்சங்க இயக்கம் வலுவடைய வேண்டும். அவ்வாறு வலுவடைவதற்கு தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களுக்கிடையேயும் ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தொழிற்சங்கம் என்பது முதலீடு இல்லாத சுய தொழிலாகவும் பெரும் வியாபார கம்பனிகளாகவும் இருக்கும் நிலை மாற வேண்டும். அத்துடன் கம்பனிகளுக்கு எவ்வித இடையூறுமில்லாத வகையில் தொழிலாளர்களின் உழைப்பை வழங்குவதனையும், இருக்கும் உரிமைகளையும் கையுதிக்கும் சம்மதத்துடன் தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் நிலையை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கங்கள் இயங்குவதை அனுமதிக்க முடியாது. தொழில் உறவை பேணல் என்பது தொழிலாளர்களின் உரிமை மறுப்பிலும் தொழிலாளர்களின் அவலத்திலும் உற்பத்தி நடைபெற்று அதிக இலாபத்தை கம்பனிகளுக்கு சென்றடைவதை அடிப்படையாக கொண்டு இருத்தலாகாது; மாறாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி என்பவற்றில் தங்கி இருக்கிறது.

இவற்றை எல்லாம் மறுக்கும் உலகமயமாதல் சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் புதிய விதத்தில் செயற்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் இயங்கும். அதற்கான ஒத்துழைப்பை தொழிலாளர்களிடம் நாம் வேண்டிநிற்கின்றோம்.  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.



1. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

அ. தேயிலை, றப்பர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பருவத்திற்கு பருவம் வேறுபாடுடையதாகவன்றி மாதாந்த சம்பளத்தின் அடிப்படையில் நிரந்தரமான சூத்திரமொன்றினூடாக நியாயமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆ. வாழ்கை செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப வருடாந்த சம்பள உயர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. கூட்டு ஒப்பந்தம்

அ. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பும் அந்தஸ்த்தும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆ. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான நியாயமான, நிரந்தரமான திட்டமும் வருடாந்த சம்பள உயர்வுக்கான சூத்திரமும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இ. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தொழிலாளர்களின் ஓய்வூதி திட்டமும் முன்னேற்றகரமானவையாக பேணப்பட வேண்டும்.

ஈ. சம்பளம், சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் போன்றன குறைந்தபட்சம் இலங்கையில் தொழிற்சட்டங்கள் தராதரங்கள், சர்வதேச சட்டங்கள், தராதரங்களுக்கேற்ப கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும்.

உ. தொழிலாளர்களின் நாளாந்த தொழில் உறவு பிரச்சினைகள் பற்றி பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடல், இணக்கத்தீர்வு, நடுத்தீர்வு போன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட வேண்டும்.

ஊ. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வுரிமைகள் நேரடியாக சட்டவாக்கங்களினூடாகவோ மறைமுகமான நடவடிக்கைகளினூடாகவோ பறிக்கப்படகூடாது.

3. பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் உரிமை, வாழ்வு கட்டியெழுப்புவதன் அடிப்படையில் பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

4. தேயிலை, றப்பர் தென்னை பெருந்தோட்ட தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையும் ஏனைய மாற்று தொழிற்துறையும் பெருந்தோட்டத் துறைக்கு சமாந்திராக கட்டி வளர்க்க வேண்டும்.

5. தோட்டத் தொழில் துறையும் அதனோடு தொடர்புடைய மற்றும் மாற்று தொழிற்துறையினூடாக தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வழித் தோன்றல்களுக்கும் அத்தொழில்வாய்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

6. பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கென குடியிருப்புக்கு தேவையான காணி வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வீதி போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள், நிர்வாக பரவலாக்கல் மையங்கள் போன்றன நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக கிராம அல்லது நகர குடியிருப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும்.

8. நீண்ட கால இலக்காக பெருந்தோட்டங்களும் அதனோடிணைந்த வளங்களும் பல்தேசிய கம்பனிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு தோட்டங்களில் உற்பத்திக்கென பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகள், இயற்கை வளங்கள் போன்றன தொழிலாளர்களுக்கும் அவர்களினது வழித்தோன்றல்களுக்கும் உரித்தாக்கப்பட்டு  தொழிலாளர்களின் பங்களிப்புடனான கூட்டுப் பண்ணை அடிப்படையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. மலையக மக்;கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தேசிய அபிலாசைகள் உறுதி செய்யும் அடிப்படையில் சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்பன அடிப்படையில் அவர்களின் அரசியல் தன்னதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

10. தமிழ் தொழிலாளர்களுக்கு இன ரீதியான மத ரீதியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; மொழி உரிமைகள் பேணப்பட வேண்டும்.

11. தமிழ் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் வெளியிலும் இருக்கின்ற ஏனைய உழைக்கும் மக்களுடன் விவசாயிகளுடனும் ஐக்கியப்பட்டு மேற்கொள்ளகூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

12. பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள், சிறுவர்கள் போன்றோரின் இலகுவாக ஊறுபடக்கூடிய நிலை மாற்றப்பட்டு அவர்களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.