Friday, August 10, 2018

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பு வேண்டும்

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ள மலையகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சுப்பிரமணியம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னணியின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம், 09-08-2018 ஹட்டனிலுள்ள முன்னணியின் காரியாலத்தில் இடம்பெற்ற போது சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது  குறித்து தெரிவித்த சுப்பிரமணியம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வாழ்க்கைப் புள்ளிச் செலவு நிறுத்தப்படாமல் இருந்திருந்தால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,500 ரூபாய்க்கு மேல் இருந்திருக்கும். 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும், வாழ்க்கைச் செலவு முறையை இல்லாதொலித்ததனால், தொழிலாளர்கள் தாம் பெற வேண்டிய வேண்டிய முழுமையான, நியாயமான சம்பளத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் பல்வேறு வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் செலவு குறைக்கப்பட்டாலும் கூட, கம்பனிகள் நட்டத்தில் இயங்கி வருவதாகவே, கூட்டு ஒப்பந்த பேச்சுக் காலத்தில் தெரிவிக்கப்படுகிறது இவ்விடயத்தில், அரசாங்கமும் பாராமுகமாகவே செயற்படுகின்றது என்றார்.

தேயிலையின் உற்பத்தியின் விலை உயர்ந்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், கணிசமான அளவு சம்பள உயர்வை மக்கள் எதிர்பார்ப்பதாகவும்,  கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இது குறித்து கவனம செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.