Sunday, August 30, 2009

தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கை - தி.மு.ஜயரட்ன

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தரம் குறைந்த தேயிலை உற்பத்தியால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலையில் தரம் குறைந்த தேயிலையை கலப்பதால் சந்தைவாய்ப்பில் தடை ஏற்படுகிறது என்றும் அதனால் தரம் குறைந்த தேயிலை உற்பத்தி தொடர்பான முறையான திட்டம் ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனுமதிப் பத்திரம் பெற்ற 275 தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதேவேளை தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அனுமதிப்பத்திரம் இன்றி தரம்குறைந்த தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை சுற்றிவளைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட சேவையாளர்களுக்கு காணி கிடைக்குமா?

பெருந்தோட்ட சேவையாளர்கள் நீண்ட காலங்களாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் தமக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதற்கு தேவையான காணியை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் பி. இராமசிவம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெருந்தோட்ட சேவையாளர்கள் தோட்டங்களில் பணிபுரியும் காலப்பகுதியில் வசிக்கும் வீடுகளை ஓய்வுபெற்றுச் செல்லும்போது தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பபிக்கை நிதியம், சேவைக்காலப் பணம் என மிஞ்சும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அத்தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தமது நிரந்தரக் குடியிருப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் எதுவும் இருப்பதில்லை. ஓய்வுபெற்றுச் செல்லும் காலம் நெருங்கும் போதுதான் சொந்த வீடு, காணி, இருப்பு பற்றிய சுய சிந்தனை எழுகிறது. தோட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வோரில் சிலர் தமது வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லும் அதேவேளை பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் இறுதிக்காலத்தை கழிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தோட்ட சேவையாளர்களுக்கென சிறு துண்டு காணியை ஒதுக்கித் தருமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அரசாங்கங்களிடமும், தோட்டக் கம்பனிகளிடமும் விடுக்கும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தாலும், இறுதியில் அவை வெற்றியளிக்காத நிலையே தொடர்கிறது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க உட்பட அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் டி எம். ஜயரட்னவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிடக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். எனினும் இந்நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த போதிலும் இதுவரை காணி வழங்கப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை நேடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை, வழங்குமாறும் ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தோட்ட சேவையாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி
டி.வி. குமார்
சம்பளப் பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஒரு தொகையை நிர்ணயித்து அறிக்கை விடுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபாவாக இருந்தால் மாத்திரமே தற்போதைய வாழ்க்கை செலவை சமாளிக்க முடியும் என்பதை தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தன. எனினும் பன்னிரண்டரை வீத சம்பள உயர்வை மாத்திரமே வழங்க முடியும் என்று முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதி இடம்பெறவுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் சம்பள உயர்வை வழங்க முடியாததற்கான காரணங்களை முன் வைக்கும் என்பது நிச்சயம். இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத் தொழிற்சங்கங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் தொழிலாளர்கள் பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.