Sunday, July 25, 2010

பெருந்தோட்ட கல்வி நிலை

பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக் கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.

மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வுக்கு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமரசிங்க, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அமெரிக்க டுலேன் பல்கலைக்கழக மாணவர் மைக்கல் போல் மற்றும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவின் கல்வி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆய்வு மூலம்

மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது.

பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன.

இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டமொன்றினைத் தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம், மலையக அரசியல் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பெயர் மாறியுள்ளதே தவிர அபிவிருத்திப் பணிகள் அப்படியே தொடர்கின்றன- இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளரும், ஊடகப் பேச்சாளரும், எஸ். ஜெகதீஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்

பி. வீரசிங்கம்


கேள்வி: பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் மலையகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அமைச்சர்களாக வும் பிரதியமைச்சர்களாகவும் இருந்தி ருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்புக்கென தனியொரு அமைச்சு இல்லாததுடன் ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் என்ற நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு உட்பட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிய நீண்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இ. தொ.கா.வின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என்ற வகையில் உங்களது கருத்தென்ன


மலையகத்தில் கல்வி: சிலுவை வேண்டாம், சிறகு கொடுங்கள்!

சிக்கல்களும் சவால்களும் நிறைந்த பருவமே இளமைப் பருவமாகும். இந்த இளமைப்பருவம் நெருக்கீடுகளுக்கும் உளக் கொந்தளிப்புகளுக்கும் பாத்திரமானது. தமது வாழ்வில் அடையாளத்தை வெளிப்படுத்த உதவுவது. சிறகு கிடைத்தால் பறப்பது மட்டுமல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என்பதை தெளிவு படுத்துவதும் இளமைப் பருவம்தான்.

தமது வாழ்வில் அடையாளத்தை காணக்கூடிய இளையவர்கள் சுதந்திரமும் பொறுப்பும் மிக்கவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் என்பது மாத்திரமின்றி தமது வாழ்வின் இலக்கை அடைய பல தெரிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் என்ப தையும் எடுத்துக் கூறும் இந்த இளமைப் பருவத்தில் அவர்களை சரியான வழியில் இட்டு செல்ல வேண்டியதும், அவர்கள் காணும் சமுதாயத்தை படைப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலம் வாழ்வை அர்த்தமாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடம் மாத்திரமல்லாது வாண்மை விருத்தி கொண்ட கல்வியூட்டும் ஆசிரியர்களிடமும் காணப்பட வேண்டிய முக்கிய பங்காகும்.

இந்த அடிப்படை விடயத்தில் தவறு இழைக்கப்படுமேயானால் பின்தங்கிய கல்விக் கூட்டமான மலையக மாணவர்களின் கல்வியை விருத்தி செய்வதென்பது கனவுகளின் கற்பனையாக மாறிவிடும். ஒரு செடி வளர்வதற்கு என்னென்ன தேவையோ அதைப் போன்று மனிதன் பண்பாட்டையும், நாகரிகத்தையும் மேலான அறிவையும் பெறுவதற்கு கல்வி அவசியமென குறிப்பிடுகின்றார் ரூசோ. ஆகவே கல்வியும், அறிவு விருத்தியும் ஒரு மனிதனின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதும் அதற்கு தொட்டிலாகவும் துணையாகவும் பாடசாலைகளே விளக்குகின்றது என்பதனை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் தான் தன்னில் வளர்வதற்கும் முதிர்ச்சி பெறுவதற்கும் பல துறைகளில் சாதனை படைப்பதற்கும் பொதுவில் அனைத்து அம்சங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது கல்வியும் அந்த கல்வியை கற்றுத்தரும் பாடசாலையுமே என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஆனால் எந்த இளைமையைப் பற்றி பேசுகின்றோமோ அந்த இளமையின் வேராகவும் விழுதாகவும் விளங்கும் பாடசாலை பலவீனமான அம்சங்களை அடையாளப்படுத்துவதும் பெறுமதி மிக்க வாழ்வியலை வேறு திசைக்கு இட்டுச் செல்வதும் வாழ்வாங்கு வாழக் கூடிய சூழலிலிருந்து உண்மைத் தன்மைக்கு உரம் போடாமல் வெறுமனே வருமானம் சேர்க்கும் தொழிலாக கற்றுவித்தலை கடைபிடித்துக் கொள்ளுவதும் கவலைக்குரிய விடயமாகும். அப்புத்தளை பண்டாரவளை கல்வி வலயத்தில் பாடசாலைகளில் இடம் பெற்ற சில கசப்பான அனுபவத் திரட்டல்களேயாகும்.

மலையக சமுகத்தின் மேல் நோக்கிய அசைவியக்கத்திற்கு உந்து சந்தியாக விளங்குவது கல்வியே என்பதனையும் உலகில் பின்தங்கிய சமூகம் கல்வியினூடாகவே தமது சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியை முன்னேற்றிக் கொண்டார்கள் என்பதும் உணரப்பட்ட உண்மையாகும். லெனின் கூறுவது போல் போராடப் படியுங்கள் போராட்டத்தோடு படியுங்கள் என்ற கூற்று அடிமைச் சிலுவையில் அறையப்பட்டிருந்த இளமைக் கிறிஸ்துக்கள் வாழும் மலையகத்திலிருந்து நீக்கிவிட முடியாத ஒரு நிஜக் கூற்றாகும்.

அப்படியொரு சூழ்நிலையில் இளமை இரத்தம் ஓடும் இளசுகளான உயர் வகுப்பு மாணவர் களிடையே தூவப்படுகின்ற தீய எண்ணங்கள் அவர்களை ஒரு விதமான தன்னிணைப்புத் தன்மைக்கு தள்ளிவிடும் என்பதோடு நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற சவாலுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்கள் தனித்துவமான வர்கள். புனிதமானவர்கள், ஆளுமை மிக்கவர்கள்; தனக்கு வருத்தமோ, தோல்வியோ வருமென நினைக்காமல் உணர்ச்சிகளால் உந்தப்படுபவர்கள். அதனால் தோல்வியோ, துன்பமோ, புண்படுத்தலோ எவற்றையும் எதிர் பார்க்காமல் பிறருடைய பாராட்டை பெறவும் தட்டிக் கொடுத்தலை அடைய தன்னிணைப்பை (ஐனநவெகைiஉயவழைn) கையாளக் கூடியவர்கள் இவர்களிடம் காணப்படும் நம்பிக்கை மலையைக் கூட பெயர்க்க அடிகோலும், அப்படிப் பட்ட மாணவர்களை பிழையான திசைக்கு இட்டுச் செல்லுகின்ற சில துரதிஷ்டமான சம்பவங்கள் பெருங் கவலையைத் தருகின்றன.

அண்மையில் ஒரு பாடசாலையில் எவரும் எதிர்பாராத விதத்தில் ஆரம்பமான மாணவப் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததோடு குறித்த அந்த பாடசாலைக்கு இருந்து வந்த கௌரவத்திற்கும் கறைபடியச் செய்திருக்கின்றது. இவர்களது மனத்திடத்தின் முயற்சிக்கு அடிகோலியவர்கள் யார், ஒரு நொந்து போயுள்ள சூழ்நிலையை தோற்றுவித்தவர்கள் யார்? எனக் கவனமாக ஆராய வேண்டியது மலையகக் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களின அங்கலாய்ப்புமிக்க கடமையாகும்.

மாணவர்களின் போராட்டம் மந்திரி காதையும் எட்டியது போல் அவசரமாகக் கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள், நகர வாசிகள் என பலரும் கலந்து கொண்டமையும் அங்கு தொடுக்கப் பட்ட கேள்விகணைகள் கவலைப்படுத்தும் காரணிகளாக அமைந்தமையும் வேதனைக்குரிய விடயங்களாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் சூழ்ந்து கொண்டு மாகாண அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் அவர்களிடம் ஒரு அசட்டு தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். உணர்ச்சி வசப்பட்டு தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய பெற்றோர்கள் வரிசையில் பெண்களே அதிகமாக இருந்ததையும், தீர்வு கேட்போர் அல்லது திரும்பவும் வந்து ரோட்டில் அமர்வோம் என்ற முடிவு எட்டிய நிலையில் அங்கு பேசப்பட்ட பெட்டிசன் விடயம் ஒரு மனிதாபிமானமற்ற நிலையை அடையாளப்படுத்தியது எனலாம். சில ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களது குடும்பத்தாரையும், தனிப்பட்ட தகவல்களையும் அச்சாக்கி வெளியிட்டு அசிங்கப்படுத்தியவர்கள் பழைய மாணவர்கள் என்ற முத்திரையை குத்தி மாணவ ஒழுக்கத்திற்கு தீங்கு செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதை தயாரித்த பெருமை மாணவர்கள் அல்லாதவரையே சாரும். அதேபோன்று மத்திய கல்லூரி மாணவர்களினது கண்ணீர்த் துயரங்கள் என தயாரிக்கப் பட்டிருந்த பெட்டிகள் அறிக்கை ஊழலின் ஒப்பனைச் சான்றிதழாகவும் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விளப்பமுள்ள அறிக்கைகள் பல முக்கியஸ்தர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டதாகும். போதாக்குறைக்கு வகுப்பு வாசல்களில் ஒட்டப்பட்டதும் காட்சிப் படுத்தப்பட்டதும் கவலைக்குரிய விடயமாகும். இதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தவறுகள் செய்வது மனித இயல்பு. அதை பக்குவமாக தட்டிக் கேட்க வேண்டியது நல்ல குண இயல்பு. எனவே இனி மேலாவது இத்தகைய குற்றப் பத்திரிகைகள் எழுதப்படுவதற்கும் விமர்சிக்கப்படுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. என்பதை அனைத்து தரப்பினரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் நடைமுறையி லுள்ள பழமொழியான

“நாம் ஒவ்வொருவரும் ஒரு நேர்மையாளரை உருவாக்க முடியும். அந்த நேர்மையாளர், நான்” என்பதை நினைவிற்கொண்டு விவேகம், சீராக்கம், செயற்பாடுகள் மிக்க மாணவ சமூகத்தை உருவாக்க அனைத்து ஆசிரிய சமூகமும் இதய சுத்தியோடு முன் வருதல் வேண்டும். நினைவுகளை நினைத்தல் எவ்வளவு அவசியமோ மறுத்தலும் மனிதனுக்கு முக்கியமானது.

ஆகவே நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை யின் தேசிய கல்வி முறையில் பெரும் பின்னடைவைக் கொண்டுள்ள மலையக சமூகம் காலத்தை வெல்வதற்கு ஆசிரியர்கள் உதவினால் தான் அசாத்தியங்கள் மறைந்து அசைவியக்கம் உருப்படியாகும்.

கந்தையா வேலாயுதம்...-


புசல்லாவையில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்


மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது.

பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது.

குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக் காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாயம் கூறி, சமூகத்தின் பார்வையைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது.