தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கிடையில் நேற்று (22-06-2015) ராஜகிரியவில் அமைந்துள்ள சம்மேளத்தின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பா.உ, தலைவர் முத்துசிவலிங்கம் பா.உ, இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம், பா.உ, சட்டத்தரணி பி.இராஜதுரை பா.உ பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ் இராமநாதன், பிரதி தவிசாளர் சி.ஜி.சந்திரசேன ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் ரவி பீரிஸ் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதலாளிமார் சம்மேளனம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. மாறாக ஆயிரம் ரூபா கோரிக்கையை நிராகரிக்கும் வகையிலான கருத்துக்களையும் காரணங்களையே தெரிவித்தது.
முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் புதிய சம்பள முறை பற்றி தெரிவித்தனர். அதாவது தற்போது வழங்கப்பட்டு வருகின்ற சம்பள முறைமைக்கு பதிலாக அதாவது மாதமொன்றுக்கு 22நாட்கள் வேலை செய்தால் முழுமையான சம்பளம் என்பதற்குப் பதிலாக வாரத்தில் மூன்று நாள் வேலைக்கு 550 ரூபா அடிப்படை சம்பளம் என்றும் அதற்காக ஒரு தொழிலாளி 15 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அதற்கு மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 40 ரூபா வீதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற திட்டத்தை முன்வைத்தது
மேலும் வாரத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களை தவிர்ந்த ஏனைய நாட்களில் பறிக்கப்படும் தேயிலைக்கு மாத்திரம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபா என்ற ரீதியில் கொடுப்பனவு வழங்க முடியுமே தவிர அந்த நாட்களினல் அடிப்படை சம்பளம் என்று ஒன்று இல்லாதிருக்கும் என்று தெரிவித்தது.
அதாவது சம்மேளத்தின் புதிய முறைமையானது உற்பத்திக்கு ஏற்ற கொடுப்பனவு என்ற ரீதியிலேயே அமைந்துள்ளது. இந்தச் உற்பத்திக்கு ஏற்ற முறைமையானது பெண் தொழிலாளர்களை மாத்திரமல்லாது ஆண் தொழிலாளர்களையும் பாதித்துள்ளதாக தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் புதிய சம்பளத் திட்டத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பினை முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். கடும் வாக்குவாத பிரதிவாதங்களிலும் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். இத்தகைய புதிய சம்பள முறைமை திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும் முதலாளிமார் சம்மேளனத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தொகை என்ன என்பதை தெரிவிக்குமாறு வலியுறுத்தினர்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பிடிவாதமான தீர்மானத்திலிருந்து விடுபட முடியாத சம்மேளன பிரதிநிதிகள் இது தொடர்பாக தமக்கு தனியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாதென்றும் 22 கம்பனிகளின் நிர்வாக சபைகளுடன் கலந்து பேசி எதிர்வரும் 02-07-2015 முடிவினை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சம்பள கூட்டு ஒப்பந்த் பேச்சுவார்த்தையின் நான்காம் கட்டம் எதிர்வரும் ஜூலை 02 2015 வரை நீடித்துள்ளது.
எதிர்வரும் பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படாவிட்டால் அல்லது அதிகரிப்பு தொடர்பான தொகையை குறிப்பிடாவிட்டால் எதிர்வரும் 2015 ஜூலை 3ம் திகதியின் பின்னர் முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையையும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தோட்டத்; தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி விடயங்களைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனை புதுப்பிப்பதற்காக நேற்று இடம்பெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 3ம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.