Sunday, July 18, 2010

கிராம சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்

தேர்தல் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பொது மக்களிடமிருந்தும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் ஆலோசனைகளை கோரியிருக்கிறது.

இக்கோரிக்கைக்கு இணங்க மலையகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அரசுக்கு ஆலோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த தலைமைகள் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வாக்குரிமையற்றவர்களாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 7 ஆக இருந்தது. இந்திய வம்சாவழியினர் சார்பில் போட்டியிடாத தொகுதிகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஆதரித்தோம். இதனால் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சியால் பெறமுடியாமல் போனது. சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் டி.எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

ஐ.தே.க. அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் செய்த முதல் வேலை இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமையை பறித்ததுதான். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947 இல் பாராளுமன்றத்தில் நூறு ஆசனங்கள் இருந்தபோது அதில் ஏழு ஆசனங்களை இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் சார்பில் பெறக்கூடியதாக இருந்தது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 40 ஆயிரம் பேருக்கு 1 பிரதேச செயலகம் இருக்கிறது. ஆனால் அம்பகமுவ பிரதேச செயலப் பிரிவை எடுத்துக் கொண்டால் சுமார் 2 இலட்சம் மக்கள் உள்ளனர். இங்கு மேலதிகமாக 4 பிரதேச செயலகமும், 4 பிரதேச சபைகளும் அமைய வேண்டும். அதுபோலவே நுவரெலியா பிரதேச செயலக பிரிவிலும் சுமார் 2 1ஃ2 இலட்சம் மக்கள் உள்ளனர்.

இங்கு மேலதிகமாக 5 பிரதேச செயலகமும் 5 பிரதேச சபையும் அமைய வேண்டும் அத்துடன் பாதுக்கை, கண்டி, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, தெனியாய, பன்னிகல், கொழும்பு, மொனராகல பகுதிகளுக்கும் எமது மக்களின் எண்ணிக்கைக்கேற்ப பிரதேச செயலகங்கள் அமைக்க வேண்டுமென அரசாங்கத்துக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே கிராமசேவகர் பிரிவுகளும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதிகாரம் பரவலாக்கும் நோக்கில் அரசாங்கம், ‘கிராம வசம’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போவதாக அறிய வருகின்றது. அரச சேவையை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ் ஆலோசனையை அரசு முன்வைத்துள்ளது. ஆகவே 1500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் நியமிக்க வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் நமது நாட்டில் குடிசன மதிப்பீடு செய்ய உள்ளனர். இதில் எமது இன அடையாளமான ‘இந்தியத் தமிழர்’ என்று நாம் எமது இன அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் இலங்கை தமிழர் என்று எம்மை குறிப்பிடுவதால் எமது இன விகிதாசாரம் குறைவடைய வாய்ப்புள்ளது. நாம் எம்மை மலையக மக்கள் என்றும் பேச்சி வழக்கில் கூறுகின்றோம். ஆனால் நமது இன அடையாளம் ‘இந்திய தமிழர்’ என்பதாகும். அது தொடர்பாகவும் நமது இளைஞர்களுக்கு இப்போதிருந்தே அறிவூட்ட வேண்டும். ஒவ்வொரு ஜுன் மாதமும் வாக்காளர் இடாப்பு திருத்தப்படும். இம் மாதம் வாக்காளர் இடாப்புப் படிவம் இப்போது விநியோகிக்கப்படுகின்றது. கிடைக்காதவர்கள் தோட்டத்துரையூடாகவும், கிராம சேவகர்களிடன் பெற்று பூரணப்படுத்தி வாக்காளர்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அநேகமாக தொகுதி வாரியான தேர்தலாக அமையலாம். அதில் வாக்குகள் கனிசமாக இருந்தால் கட்சி பேதமில்லாமல் சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும்.

பி. மோகன் சுப்ரமணியம்
அட்டன்