Thursday, July 30, 2009

மலையக தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாதாரத்தின் பங்களிப்பும்

-எம். இராமச்சந்திரன்-
“மலையக சமூகத்தின் வளர்ச்சியின் வேகம் ஏனைய சமூகத்தைவிட மந்த கதியிலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பொருளாதார வளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நமது மலையக சமூகம் காணப்படுவதே முக்கிய காரணமாகும். அவ்வாறாயின் பொருளாதார வளத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளையும், பொருளாதார வளர்ச்சியின் தடைக்கற்கள் பற்றியும், மாற்று வழிகளை கையாளும் சந்தர்ப்பத்தில் தேயிலை உற்பத்தியில் பின்விளைவுகள் பற்றியும் ஓர் ஆய்வினை பார்ப்போம்.”
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தியின் பங்களிப்பு இன்றியமையாதது. எனினும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வருமானம் அவர்களின் ஜீவனோபாயத்திற்குக் கூடப் போதியளவாக அமையவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட தேவைகளில், உணவு, உடை, உறையுள் ஆகியன மிக முக்கியமானவையே. ஆயினும் மூன்று வேளை முறையாகப் பசியாறக் கூட தனது வருமானம் போதாத நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின் அவர்களது வாழ்க்கையையே ஓர் போர் களமாக மாற்ற வேண்டியுள்ளது. மாதாந்த வேலை நாட்களில் ஒரு நாள் சுகயீனத்தாலோ அல்லது தனது சுய தேவையின் பொருட்டோ வேலைக்குச் செல்லத் தவறும் பட்சத்தில் தனது மாத நாட் சம்பளத்தில் நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் கழிவுத் தொகையுடனேயே சம்பளத்தைப் பெறுகின்றனர். இவ்வாறான தோட்டக் கம்பனிகளின் சட்ட திட்டங்களுக்குப் பயந்து உடல் நலமற்ற நிலையிலும் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய வேதனைக்குரிய நிலையிலேயே தனது வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஏனைய மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகத்தை தோட்டத் தொழிலாளர்கள் கனவுலகிலேயே அனுபவிக்கின்றனர். பெருந் தோட்டப் புறங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் தேயிலைத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இல்லையெனில் நகர்ப்புறங்களில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையையே இளைஞர் யுவதிகள் நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களா அல்லது தொழிற் சங்கங்களுக்காக தொழிலாளர்களா என எண்ணத் தோன்றுகின்றது.
அரச நிர்வாகத்திற்கு கீழ் இயங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்டங்கள் தனியார் துறையிடம் கையளிக்கப்பட்ட பின் தொழிலாளிகளின் இரத்தம் இன்று தேயிலைச் செடிகளுக்கு உரமாகிக் கொண்டிருக்கின்றது.
அரச நிர்வாகத்திடமிருந்து தனியார் துறைக்குக் கைமாறிய சந்தர்ப்பத்தில் தேயிலை தொழிலாளிகளுக்குக்கே குத்தகை அடிப்படையில் தேயிலை விளை நிலங்களைப் பெற்றுக் கொடுக்க முனைந்திருப்பார்களாயின் “கூலித் தொழிலாளி” என்ற அடிமை சாசனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்த பெருமை தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்கும். அத்தோடு பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியும் மேலும் தன்னிறைவு அடைவதோடு தொழிலாளிகளும் தன்னிறைவு அடையும் சூழல் ஏற்பட்டிருக்கும்.
தொழிற் சங்கங்கள் உருவாகி அறுபது வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்னும் எத்தனையோ, தோட்டங்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. தொழிலாளிகளின் சம்பளத்தைக் கூட ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிப்பது தொழிலாளர்களை அடகு வைப்பது போன்றே உணரத் தோன்றுகின்றது.
தொழிற் சங்கங்கள் மூலம் தனது பொருளாதாரத்தையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள எத்தனிப்பதை விட ஒவ்வொருவரும் தனது சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளள பழகிக் கொள்ள வேண்டும்.
தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் ஏறுவரிசையாக அமைந்தாலும், அத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாகிய தொழிலாளர்கள் நின்ற இடத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர். வெறுமனே தேயிலைத் தொழிலைமட்டும் நம்பியிராமல் மாற்றுத் தொழிலையும் நாட வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.
இன்று ஒவ்வொரு தொழிலாளியும் தன்னைப் போலத் தனது பிள்ளைகளைத் தொழிலாளியாக அன்றி வேறு உயர் நிலைத் தொழில்களுக்கு தயார்படுத்த எத்தனிக்கின்ற போதும் அவர்களது பொருளாதாரம் ஆட்டிப்படைக்கின்றது.
எனவே பொருளாதார வளத்தை உயர்த்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேயிலைத் தொழிலாளிகள் உள்ளனர். மாற்றுவழிகளைக் கையாள வேண்டுமாயின் சிறுகைத்தொழில்களில் தனது ஈடுபாட்டைச் செலுத்த வேண்டும்; தையல், விவசாயம், பண்ணை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுடன் சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைப்புகள் தமது சேவையை இன்றும் தோட்டப்புறங்களில் விரிவுபடுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களில் வியாபார ஸ்தாபனங்களை நிறுவியுள்ள மலையக தொழிலதிபர்கள் தமது சமூகத்தின் விடிவுக்காகத் தோட்டப்புறத்தில் மூடப்பட்டிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள முன் வருவார்களாயின் இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படும்.
எனினும், பெருந்தோட்ட தொழிலாளிகளின் அன்றாட அத்தியாவசிய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு காலத்திற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வராத நிலையில், தேயிலைத் தொழிலாளிகளின் தொழில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவையே. காலப் போக்கில் தொழிலாளிகள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். அவ்வாறாயின் இறுதியில் தேயிலை உற்பத்தியின் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
நன்றி- தினகரன்
நியாயமான சம்பள உயர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலாளர் எம்.ஆறுமுகம் அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலகத்தில் வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் பேசுகையில் மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவழியினர் இலங்கையில் சகல பிரிவிலும் தோட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தொழிற்சங்கங்கள் தங்களுக்கென வருடத்தில் 2 தடவை ஜூன் 30 ஆம் திகதியும் டிசம்பர் 31 ஆம் திகதியும் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் இணைந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தங்களது அமைப்பின் ஊடாக தொழிலாளர்களை தங்களது சங்கங்களில் இணைந்து கொள்ள தங்களின் முழுமையான சக்தியையும் பயன்படுத்தி செயற்படுகின்றது. இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் தொழிலாளர்களிடமிருந்து மாதா மாதம் சந்தாவை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படுவதில்லை என தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முடிவுற்ற சம்பளப் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியான நிலையில் உள்ளது. அர சாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்தின் போதும் சம்பள உயர்வு கிடைப்பது போல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கமே முன்நின்று சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு சில தோட்டங்களில் மின்சார வசதி இல்லாது மண்ணெண்ணெய் விளக்கையே பாவிக்கின்றனர், அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 200 ரூபாவாகும். மேலதிகமாக 20 ரூபா மற்றும் 70 ரூபாவை பெற வேண்டுமாயின் தோட்டத்தில் 21 நாள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலை செய்யாவிடின் குறிப்பிட்ட மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இது தொழிலாளர்களுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைக்கப்படும் சாபக் கேடாகும்.
மேலும், ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தினை தோட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தங்களில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை தோட்ட மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க தோட்டத் தொழிலாளர்களைத் தங்களது தொழிற்சங்கங்களில் இணைத்துக் கொள்ள அக்கறையுடன் செயற்படுபவர்கள் தொழிலாளர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். ஜூன் மாத காலப் பகுதியில் வழங்கப்படும் வாக்காளர் பட்டியலைப் பூர்த்தி செய்து கொடுக்கவும் வாக்காளராக இல்லாதோரை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான சகல வழிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எமது ஜனாதிபதி இந்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந் நாட்டு பிரஜைகள் எனக் கூறியும் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
ஆகவே தொழிலாளர்களின் சந்தாவை மட்டும் எதிர்பார்க்காமல் அவர்களின் நலன் கருதி வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தோட்டக் குடியிருப்புகளுக்கு கிராம சேவையாளர்கள் நேரடியாகச் சென்று படிவங்களை வழங்குவதுடன் அவர்களின் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரை வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டியது கிராம சேவையாளரின் கடமையாகும்.
தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சில தோட்டங்களில் தோட்டத்தில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளதால் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு சம்பளம் வழங்குகின்றனர். ஒரு சில தோட்டங்களில் வேலைக்கு இளைஞர், யுவதிகள் இருந்தும் பெயர் பதிவதில்லை. அப்படியே பெயர் பதிந்தாலும் ஊழியர் சேமலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுவதில்லை.
மலையகத்தைச் சேர்ந்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து பலம்மிக்க ஒரு தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.
மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத் தேர்தலின் போது எமது உறுப்பினர்கள் என்றும் இல்லாதவாறு அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அதற்குக் காரணம் எமது தலைவர்கள். எல்லோரும் தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதனாலாகும். பலமான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி எமது மக்களையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தைச் சிறந்ததொரு காலமாக உருவாக்க வேண்டிய பாரிய கடமை தற்போதைய தலைவர்களின் கையில் உள்ளது. அதை அவர்கள் எதிர்வரும் பராளுமன்றத் தேர்லுக்கு முன் ஏற்படுத்த வேண்டும்.
தினக்குரல்