தோட்டத் தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால எதிர்;பார்ப்பாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், கிராமிய கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கெனபல லட்சம் ரூபாவை செலவிட்டு வருகின்றது. ஆரம்ப கல்விக்கு சரியான அடித்தளம் இடப்பட்டால்தான் உயர்கல்வியில் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களும் தமக்கு கிடைத்த இந்த வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளியாகவே இருக்காமல் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். தோட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2- 3 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி அதை தொழிலாளர்களே பராமரித்து கொழுந்து பறித்து அதை தோட்ட நிர்வாகத்துக்கு விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி முதலாளிமார்களாக வளர வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஆலேலாசனைகளை முன்வைத்துள்ளோம். அவ்வாறு நாம் காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவற்றை வெளியாருக்கு யாரும் விற்பனை செய்து விடக்கூடாது. தங்களுக்கு கிடைத்த காணிகளில் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்வதோடு அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் 6,000 குடியிருப்புக்கள் வெளியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றை விற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புக்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தீபாவளி பண்டிகை இரண்டு தினங்களுக்கு மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வருடனம் ஒரு தோட்டத்தில் 10 நாட்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனராம். இந்த வருடம் ஒரு தோட்டத்தில் 30 நாட்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வேலைக்குச் செல்லாமல் செய்கின்ற தொழில் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் தேயிலை உற்பத்தி எவ்வாறு பெருகும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும்? தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்கள் இந்த நாட்டில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.