தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கம்(ஜே.வி.பி) ஹட்டன் நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே, மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. 2015 ஆம் ஆண்டின்படி கணக்கிட்டால், 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர், மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் அதனை செய்யத் தவறியுள்ளன. எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. “பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், போலியான கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டதனூடாக, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டன” என்று, மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இது தொடர்பாக தெரிவிக்கையில் “கூட்டொப்பந்தம் முறையாக கைச்சாத்திடப்பட்டு வந்திருந்தால், புதிய ஒப்பந்தம், 2017.04.02 ஆம் திகதி, மீண்டும் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையக தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொண்ட போலியான ஒப்பந்தத்தினூடாக, தொழிலாளர்களின் உழைப்பை காட்டிக்கொடுத்து விட்டன. எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட தோட்ட தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். தற்போதைய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால், தோட்டத் தொழிலாளர்கள், குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நல்லாட்சி எனும் போலியான அரசு மற்றும் போலியான தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பி யின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது”