Wednesday, March 23, 2011

தொழிற்சங்கங்கள்- முதலாளிமார் சம்மேளத்திற்கிடயிலான சந்திப்பு அடுத்தவாரம்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்திற்கிடயிலான பேச்சுவார்த்த எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு கூட்டொப்பந்தம் தொடர்பான கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடயிலான சந்திப்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் நடபெறவுள்ளது.

எதிர்வரும் 31-03-2011 ஆம் திகதியுடன் கூட்டொப்பந்தம் நிறைவு பெறுகின்ற நிலையில் எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற வகையிலான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் கோரிவருகின்றன.

அதாவது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவை இணைந்து அமைத்துள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரியுள்ளது. தோட்டத் தொழிலாளருக்கு நிபந்தனையற்ற குறைந்தபட்ச நாட் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்பாக 250 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இன்றைய வாழ்க்கை செலவு உயர்வுக்கு ஏற்ப நிபந்தனையற்ற நாட்சம்பளமாக 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது என்றுமில்லாத வகையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த 700 ரூபா சம்பள உயர்வு அவசியமானதென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தம் மூலம் நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக 500 ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக 750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்

கொழுந்து நிறுவைக்குப் பெண் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை



தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கின்ற பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து தேயிலைத் தூளினை கொள்வனவு செய்வதில் வெளிநாடுகள் சில ஆர்வம் செலுத்தி வருகின்றன.

சில தோட்டக் கம்பனிகள் வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி சில நலனோம்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நவீனகால அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை இந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வதற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.

அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.

ஆனால் தெரேசியா தோட்டத்தில் இரண்டு பெண்கள் தமது தலையில் கம்புகளை தாங்கிக் கொண்டு கொழுந்தினை நிறுவை செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.இவ்விடயம் தொடர்பில் மலையகத் தொழிற்சங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன?