மலையகத் தமிழ்த் தலைமைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றனவா?
மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்ததின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
தங்கக் காசும் தங்குவதற்கு இடமும் இலவசமாம். தேயிலைத்தூரில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம் என நம்பி வந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் மற்றும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை இவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் மறுபுறத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால் அவர்களின் கொள்கைகள் இறுதி வரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள் - சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது காலத்தில், பேசுவது போல் செயலிலும் தீரத்தைக் காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயம் எழுதப்படும்.
ஆனால், அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெறுகின்றன. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் எனக் காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் சரி மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் சரி அவற்றுக்கென்று தனித்துவம், தனிக்கொள்கை உண்டு. அவற்றை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.
குறிப்பாக மலையகத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பாதை செப்பனிடுவதும், கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான நோக்கினை அரசியல் தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்து வைப்பதன் மூலம் மலையகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
அடுத்து மலையகக் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததால் அவர்களின் அறிவாற்றலிலும் மந்த நிலை காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?
பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல் கொடுக்காமைக்குக் காரணம் என்ன?
அதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்| என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கிய காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு வருமான(சம்பள) அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமைகள், வரலாற்றுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும் அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் மாறாத வடுவாகி விடும்.
அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.
மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது உண்மையான அரசியல் சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.
-இராமானுஜம் நிர்ஷன்