அடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூலத்தை பெருந்தோட்டத் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டு ஒப்பந்தம் முரணாக காணப்படுகின்றது. அதுதொடர்பிலான உரிய மீளாய்வுகளைச் செய்யவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சம்பளச் சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த பிரேரணை குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலையாட்களை உள்வாங்கக் கூடியதான சட்ட நடைமுறையொன்று இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தானில் வீட்டு வேலையாட்களாகப் பணியாற்றுபவர்களுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேதனமாக வழங்கப்பட வேண்டுமென அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே எமது நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் பேசுகின்றோம். தோட்டத் தொழிலாளர் விவகாரம் குறைந்த பட்ச வேதன சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் இச்சபையில் பலர் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.
தனியார் துறைக்கான 2500 ரூபா அதிகரிப்பை பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கும் பெற்றுக்கொடுத்திருப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக் கையை வெற்றியாகக் கருதமுடியும். நாளொன்றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபாவாகவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபாவாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தோட்டத்தொழிலாளர் விவகாரத்தில் கூட்டு ஒப்பந்தம் முறையின் கீழ் செல்லும்போதும் அரசாங்கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்பது சிக்கலுக்குள்ளாகும். கூட்டு ஒப்பந்தம் இதற்கு தடையாக அமையும். இதனால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்பந்தத்தை கேள்விக்கு உட்படுத்தி வருகிறோம். குறிப்பாக தொழிலாளர்களின் வரவுடன் சம்பந்தப்பட்டதாக கூட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களின் நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தை செலுத்துவதற்காக தோட்டங்களில் உள்ள மரங்களை வெட்டி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தினால் வழிமொழியப்பட்டிருந்தது. இயற்கையை அழித்தொழித்துவிட்டு நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.