மாணவர் இடைவிலகல் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பணிப்பு
தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முழுமையாக கற்காமல் இடைவிலகிச் செல்வது தொடர்பாக உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பொன்றின் போதே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை தெளிவுபடுத்துமாறும் அதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.
நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், அனைத்து மக்களும் சகல வசதிகளுடனும் சந்தோசமாக வாழ வழிவகைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளினதும் கல்விக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதுடன் கல்வியையும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.
தோட்டப்புற பாடசாலைகளில் கல்வியை தொடராமல் இடைநடுவில் பாடசாலையை விட்டு மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசணை நடத்தினார்.