தோட்ட மக்களை இ.தொ.கா புறக்கணிக்காது – பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன்
சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியையடுத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் இ.தொ.கா சப்ரகமுவ மாகாண மக்களை ஒருபோது கைவிடாது என்று தெரிவித்த அமைச்சர் மலையகத்தில் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களை இணைத்து கல்வி, கலாச்சார ரீதியாக முக்கோண வடிவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். வௌ;வேறு மாகாணங்கள் என பாகுபாடு காட்டாது. குறிப்பாக ஆசிரியர் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், அதிபர் – ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் என எந்த விடயத்திலும் மாகாண ரீதியாக பாகுபாடு காட்டாது இ.தொ.கா பொதுவாக ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, கலாச்சாரத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். சப்ரகமுவ மாகாண மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததன் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதியை கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்.
தரிசு நிலங்களில் விவசாயம் செய்த தொழிலாளர்கள் வேலை நீக்கம்
வெலிமடை - ஹக்கலை தோட்டத்தில் தேயிலை பயிர்செய்கைக்கு பொருத்தமற்றதென தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்டிருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியார் பலர் அத்துமீறி இதே தோட்டத்தின் தரிசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் பயிர்செய்யையும் மேற்கொள்வதோடு மாடி வீடுகளையும் நிர்மாணித்து வாழ்கின்றனர். தோட்டத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் இவ்வாறு விவசாயம் செய்தமை குறித்து தொழிலாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஹக்கலை தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பண்டாரவளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் பெருமான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை நிலை காரணமாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது எப்படி குற்றமாகும்? தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பினார் தொழிலுறவு அதிகாரியும், சட்டவல்லுநருமான ஆர் சுப்பிரமனியம்.