இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு தனியாட்சி உருவாக்கப்பட்டு தனி தேசிய இனமாக புதிய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு விடயம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் மிக உயர் சட்டமாகிய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்குகின்ற அரசாங்கதின் நோக்கத்தினை நாம் வரவேற்கின்றோம். இலங்கை அரசியல் வரலாற்றில் பல அரசியல் யாப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டவையாகும். காலத்துக்குக் காலம் உருவாக்கப்பட்டபோதிலும் நீண்டகால அடிப்படையில் அதன் நோக்கங்கள் பிரதிபலிகாததால் காலத்துக்கு காலம் புதிய யாப்புக்களை உருவாக்க வேண்டியேற்பட்டது.
இலங்கையில் அரசியலமைப்பு வரைபுகளில் இந்திய வம்சாவளி தமிழர்களின் அபிலாசைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பில் அசமந்த போக்கே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. டொனமூர் யாப்பில் இலங்கையில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சோல்பரி யாப்பில் சிறுபான்மையினர் காப்பீடுகள் தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1948ம் ஆண்டு எமது சமூகத்தின குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது அகாரணமாக தேசிய அரசியலில் எமது சமூகம் ஒதுக்கப்பட்டது.
1948 தொடக்கம் 1978 வரையிலான காலப்பகுதியில் எமது மக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் இதன் விளைவாக பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து விடயங்களில் எமது சமூகம் பின்நோக்கி தள்ளப்பட்டது. இன்றும் இது தொடர்கின்றது.
1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டபோதும் தற்போதைய அரசியலமைப்பில் இலங்கையர்களை ஆட்கள், பிரஜைகள் என வெவ்வேறாக குறிப்பிடப்பட்டiமால் பாரபட்சத்தினை காட்டுகிறது. எமது இந்திய வம்சாவளி சமூகம் தனது உழைப்பினை மட்டும் நம்பி கடல் கடந்து இலங்கைக்கு வந்தவர்களாகும் எங்களிடம் உடல் உழைப்பு என்ற மூலதனம் மாத்திரமே இருந்தது.
எமது மக்களின் உழைப்பினை மட்டும் சுரண்டிக் கொண்டவர்கள் எமக்கு கொடுத்தது நாடற்றவர்கள் கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமோ. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள் அவற்றை வளப்படுத்தி தோட்டங்களாக்கி ஆங்கிலேயர்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கு வருமானம் பெற்றுத் தருகின்றனர்கள் எமது சமூகத்தினர். இன்றும் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் எமது மக்கள் உழைப்பினால் உயர்ந்தவர்கள் அல்ல. இதுவரையில் எமது சமூகத்தை கண்டுகொள்ளவும் இல்லை என்றார்.
அன்று வாழ்pவாதாரத்தினை மட்டுமே சிந்தித்த நாங்கள்இன்று அதற்கப்பால் வாழ்வியல் உரிமைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
வரலாறு எங்களுக்கு நல்ல பல பாடங்களை தந்திருக்கிறது. இதனால் இந்திய வம் சாவளி தமிழர்கள் என்ற சமூகம் சார்ந்த உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் எங்களுக்கிருக்கிறது. இலங்கையின் சமூகங்களை வகைப்படுத்துகின்றபோது இன ரீதியாக நான்காவது இடத்தில் இருக்கின்ற நாங்கள் ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலிருக்கிறோம்.