Thursday, June 15, 2017

கனரக வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி- நானுஓயா நகரில் பதற்றம்

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் பாதசாரிகள் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 06 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார். ஊயிரிழந்த சிறுமி ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆகாஷா தேவ்மினி (06 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்  உள்ள  பாதசாரிகள் கடவையில் இன்று காலை 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சிறுமியின் உயிரிழப்பினால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கனரக வாகனத்து தீ வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினால் நானுஓயா பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர், பொலிசார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தையடுத்து நுவரெலியா - ஹட்டன் ஊடான பொது போக்குவரத்து பல மணிநேரம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை நிலமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் நானுஓயா பொலிஸ் நிலைய அதிபர் நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.