Sunday, September 28, 2008

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்

பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைகழகங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பல்கலைகழங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்ற மாணவர்கள் சகலரும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 30-09-2008 முன்னர் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம், இல.15ஏ, பிளவர் ரெரஸ். கொழும்பு-03 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் சொந்தமா?

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எட்டடி நீளமுள்ள அறைகளிலேயே புகைக் கூண்டுகளில் வாழ்வதைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தாங்கள் வாழும் அறைகளை விஸ்தீரணமாக ஓரளவேனும் நல்ல நிலையில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலில் நாகரீகமாக வாழும் ஆசையுடன் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள சேமலாப நிதியைக் கொண்டு கட்டியுள்ளனர். ஏனையோர் பொருளாதார வசதி குறைவாகல் அதே எட்டடி அறைகளுக்குள் வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர்.

இப்படி வாழ்நாளில் பெரும் பங்கிளை கழித்து இறுதி காலத்தில் ஓய்வாக உணவுக்கு வழி செய்து கொண்டு வாழ வேண்டிய பணத்தை இந்த லயன் வீடுகளுக்கு செலவழிப்பதன் மூலம் ஏதும் பலன் உண்டா என்பதை தெரிந்து கொள்கிறார்கள் இல்லை. தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருக்கும் வீடுகள், உடைமைகள் அனைத்துக்கும் கம்பனிகளே கம்பனிகளே சொந்தக்காரர்கள் ஆவர் . அரச உடைமைகள் எனில் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி வாதிட முடியும். கம்பனிகளுக்கு சொந்தமானவைகளை நாம் செலவழிப்பதன் மூலம் நாளை ஒரு பிரச்சினை ஏற்பட்டு சிக்கலில் வீழ்ந்து விட்டால் சாதுரியமாகவும், சட்டரீதியாகவும் கம்பனிக்கே சொந்தமாகி விடும் என்பதை புரியாமல் இருப்பது கவலையைத் தருவதாகும்.
இந் நிலையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த ஓரளவு முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தினால் தனி வீடுகளாகவும் பின்பு மாடி வீடுகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வீடமைப்புக்கான செலவுத் தொகையை குடியிருக்கும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்தே அறவிடப்படுகின்றது. தனி வீடுகளுக்கு மாதாந்தம் 350 ரூபாவும் மாடி வீடுகளுக்கு 600 ரூபாயுமாக பதினைந்து வருடகால மாதத் தவணையில் அறவிடப்படுகின்றது. இத் திட்டத்தின் கீட் வழங்கப்படும் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொண்டே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளி சேவையிலிருந்து ஓய்வு பெறுவாராயின் அவருடைய சேவைக்கால பணத்தில் முழுத் தொகையுமே அறவிடப்படுகின்றது. சேவைக்கால பணம் குறைவாகவோ அல்லது இல்லாமலிருப்பின் சம்பந்தப்பட்டவர் மேலும் பணம் செலுத்தியாக வேண்டும்.

அரசியல் வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் மேற்படி வீடுகள் அவர்களுக்கே சொந்தம் என்கின்றனர். தொழிலாளர்களும் இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி சொந்த வீடுதானே என வங்கிகளில் கடனை பெற்று வீடுகளை சிறப்பாக அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடுகளை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றியோ கொடுக்க முடியாது. இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.

ஊண்மையில் உழைப்பவனின் ஊதியத்தில் அறவிடப்படும் பணம் அந்த உழைப்பாளியின் வாழ்க்கைக்கு பலன் தர வேண்டும். ஆனால் அந்த பலன் கிடைக்காவிட்டாலும் உரிமையும் இல்லாது போய்விடும் அபாயம் தான் தெரிகிறது.

-தொடரும்-

சிதம்பரம் ஜோதி



தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களை கடந்த காலங்களில் SLBC மற்றும் JEDB ஆகியன நிர்வகித்து வந்தன. தற்போது 23 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.

1991 இல் அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் கம்பனிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்தமையை இடதுசாரி தொழிற்சங்கங்கள் எதிர்த்திருந்தன. எனினும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காரணத்தால் இ.தொ.கா வும் இ.தே.தோ.தொ சங்கமும் ஆதரித்திருந்தன.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் இறுதியில் ஒரு சமரசத் திட்டத்தை அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டன. அதில் ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும், சுற்றியுள்ள மரக்கறி தோட்டங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவது அடுத்ததாக தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரப்பட வேண்டும் . அத்தோடு தனியார் கம்பனிகளின் பங்குகளில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்படி ஆலோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக 10சத வீத பங்குகளை தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்தப் பங்குகளை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பங்குகள் விநியோகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சகல பங்குகளையும் நிர்வகிப்பதற்காக தனியான ‘நிதியம்’ ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோரி சம்பந்தப்பட்ட அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் கம்பனிகளும் அரசாங்கத்தின் சில சக்திகளும் சேர்ந்து திடீரென பங்கு பத்திரங்களை தோட்ட நிர்வாகங்களினூடாக வழங்கி அவற்றை வங்கிகளிலோ, வர்த்தகர்களிடமோ கொடுத்து காசாக்கிக் கொள்ளலாம் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால் பங்கு பத்திரம் கிடைத்தவுடன் இதன் முக்கியத்துவத்தை உணராமல் வங்கிகளிலும் வர்த்தகர்களிடமும் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பலத்தை எதிர்ப்பை காட்டியதால் வங்கிகளும் வர்த்தகர்களும் பங்கு பத்திரங்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

மீண்டும் பங்குகள் விற்பனை

இவ்வாறு விற்கப்படாமலிருந்த பங்குகளை இப்போது மீண்டும் இரகசியமான முறையில் சில வர்த்தகர்கள் விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இறந்துபோன தொழிலாளர்களின் பங்குகளையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேலை நிறுத்தம் செய்யப்பட்டவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்று கூறி மிகவும் குறைந்த விலைக்கு வர்த்தகர்கள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களின் பங்குகளை மாற்ற முடியும்.

பங்குகளை பெற்றுள்ள தொழிலாளர்கள் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை அந்த பங்குகளை உயிரோடிருக்கும் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

பங்குகளினால் கிடைக்கும் பயன்கள்.

தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும். ஏனெனில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு உரித்துடையவர்கள் ஆகின்றார்கள். தோட்டங்களில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடைக்கின்றது.
எதிர்கால சந்ததிகளுக்கு இத்தகைய பங்குகள் சிறந்த முதலீடாக அமைகின்றது. மேலும் 10 ரூபா பெறுமதியான ஒரு பங்கு இப்போது 50 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ளதாக காணப்படுகின்றது.

எனவே தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றுக் கொடுத்துள்ள பங்குகளுக்கான உரிமையை சதிகாரர்களின் வகைக்குள் வீழ்ந்து தொழிலாளர்கள் இழந்து விடாது அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பானா தங்கம் - வீரகேசரி