Sunday, October 25, 2009

படிக்கும் வயதில் பங்களாக்களில் வேலையா?
பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதலும் அதனால் ஏற்படும் சிறுவர்களுக்கு எதிரான வன் முறைகளும்,கொலை தற்கொலைகளும் இவ்வாண்டிலும் குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு, அதற்கான தனிப் பொலிஸ் பிரிவு ஊக்கமுடன் செயற்பட ஆரம்பித்த பின்னரும் இன்னமும் மேற்கூறிய அவலங்கள் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நடைமுறையில் உள்ள செயற்பாடுகள் ஆணிவேரை விடுத்து பக்க வேரை சாய்க்கும நடவடிக்கையாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களையும் அதற்கு துணை போகும் சில காவல் துறையினரையும் சிறுவர்களை வேலைக்கு அழைத்து வரும் இடைத் தரகர்களையும் நாம் இன்னமும் குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் தமது பிள்ளைகளை பலி ஆடுகள் போல வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களை மறந்து விடுகிறோம்.
தொடருகின்ற அவலங்கள் அனைத்திற்கும் எமது சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒருபுறமிருக்க மலையக பெற்றோரின் செயற்பாடே முக்கிய காரணமாகின்றது.பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதிருந்தால் இவ்வாறான அவலங்கள் ஏற்பட வாய்ப்பில்லையே! பிள்ளைகளை பறிகொடுத்தபின்னர் அழுது குளறுவதில் என்ன பயன்? முன்னைய படிப்பினைகளை இவர்கள் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை?
குடும்ப வருமானம் பற்றாக்குறை என்பதற்காக சிறுபிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் இவர்களின் பாசம், அன்பு என்பன கேள்விக்குறியாகின்றன. கல்வி அறிவு இல்லாத நிலையும், மதுவுக்கு அடிமையாகியுள்ள பழக்கமும்,தரகர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்குகின்றமையுமே இதற்குக் காரணம்.
இன்று பூதாகரமாகியுள்ள இப்பிரச்சினையை வேரோடு சாய்த்திட வேண்டுமானால், பெற்றோருக்கான அறிவூட்டலே முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும். சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் செயற்பாடானது சிறுவர் துஷ்பிரயோகம் என்பதையும், தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டியதும் இன்றைய மலையக படித்த வாலிபர்களினதும் மலையக பாடசாலை ஆசிரியர்களினதும் தலையாய கடமையாகும். மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றி ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் அது தொடர்பான அறிவூட்டலை மாணவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.
பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக இருக்கும் பட்சத்தில் சிறுவர்களுக்கு இவ்வாறான அவலங்கள் ஏற்பட வழியில்லை. பிள்ளைப்பராயம் என்பது கல்விக்குரிய பராயமே அன்றி வேலை பார்க்கும் பருவமல்ல என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும். கல்வியின் மூலமே மலையகம் மேன்மை அடையும், விழிப்புறும், கல்லாதார் கண்ணில்லாதவர்கள், எவராலும் ஏமாற்றப்படக் கூடியவர்கள் என்பதை உணர்த்த வேண்டும். கல்வியின் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பும்,சுபிட்சமும் கிட்டுவதுடன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான் என்பதையும் உணர்த்த வேண்டும்.
மலையக மக்களை கல்வியறிவற்றவர்களாக இருந்தால்தான் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என முதலாளி வர்க்கம் நினைக்கிறது. மலையக சிறுவர்கள் அதிகமாகப் படிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இன்றுள்ள அரசியல் விழிப்புணர்வானது இதை உடைத்தெறிந்து வருகிறது.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள், அவர்களுக்கு எதிராக புரியப்படும் வன்முறைகள் என்பவற்றையும், பாலியல் ரீதியாக ஏற்படக் கூடிய இன்னல்களையும் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளை கற்கும் வயதில் வேலைக்கு அனுப்புவதன் மூலம், நிகழ்காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் இழந்து விடுகிறோம்.
சந்திரகாந்தா முருகானந்தன்...-
தினகரன் வார மஞ்சரி