Wednesday, May 27, 2009

ஆசிரியர்களில் தங்கியிருக்கும் சமூகத்தின் விடிவு

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், குருவிற்கு பின்னர்தான் தெய்வம் எனும் முதுமொழி யும் உண்டு. குருவை தெய்வமாக மதிக்க வேண்டும். தெய்வம் என்பது சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்த வேற்றுமையையும் பார்ப்பதில்லை. ஆசிரி யர்கள் மாணவர்களை எவ்வகையிலும் வேறுபாடு காட்டாது அனைத்து மாணவர்களையும் சமமாக மதித்து கற்பிக்க வேண்டும். பாடசாலைக் கல்வியைத் தொடங்கும் ஒவ்வொரு மாண வனும் குறைந்தது 05 முதல் 17 வருடங்கள் ஆசிரியர்களின் கண்காணிப்பிலும் அவர்களின் வழி காட்டல், ஆலோசனையிலுமே வாழ்க்கை வட்டம் சுழல்கிறது.
இவ்வாறு தொடரும் மாணவர்களின் கற்றலானது எங்கேனும் இடைநிறுத்தப்படும்போது அம் மாணவனின் வாழ்க்கையே திசைமாறிப் போகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்கள் பலர் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள். ஆரம்ப வகுப்புக்களில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்தரம் வரையில் கல்வியைத் தொடர்வதில்லை. மலையகப் பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய போதுமான அறிவு இல்லையென்றே கூறவேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. ஆனால் இந்தச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மிகவும் சமூகப் பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் ஒருவித ஏக்கம் புரையோடியிருப்பதை அவதானிக்கலாம். அம்மாணவர்கள் கற்று எதிர்காலத்தில் நல்ல உத்தி யோகம் பார்க்க வேண்டுமென்ற நீண்ட கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் சூழுலும் வறுமையும் அவர்களின் சிந்தனைகளைச் சிதறடித்து விடுகின்றன.
வறுமை காரணமாக சில பெற்றோர் சிறுவயதிலேயே நகர்ப்புறப் பகுதிகளுக்கு வீட்டு வேலை களுக்கு அனுப்புகின்றனர். பிள்ளைகள் படித்து என்ன தோட்டத் துரை வேலையாக கிடைக்கப் போகிறதென கேள்வியெழுப்பும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஒரு சமூகத்தில் வறுமை தலைவிரித்து ஆடும்போது அவர்களால் படிக்கவோ,சிந்திக்கவோ நல்ல செயற்பாடுகளில் விரும்பிச் செயற்படவோ முடியாது என்பதை பலர் உணரத் தவறிவிடுகின்றனர். பாடசாலையில் பலதரப்பட்ட திறமை களையுடைய மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்கண்டு அதற்கேற்றவாறு ஆசிரியர் கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தாம் படும் கஷ்டங்கள் தமது பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என எண்ணும் பெற்றோர் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக வெயில், மழை, குளிர் எதனையும் பாராது கடுமையாக உழைக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை வாழ்க்கையில் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும் பொருட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பெற்றோரின் பங்களிப்புடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் தொட்டு உயர்தரம் வரையிலான அனைத்து பரீட்சைகளுக்கும் அவர்களை சிறப்பான முறை யில் தயார்ப்படுத்துவதில் ஆசிரியர் வகிக்கும் பங்கு அளப்பரியதாகும். மாணவர்களை பரீட்சை க்குத் தயார்ப்படுத்தி அவர்களை சிறப்பான முறையில் சித்தியடையச் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆசிரியனதும் கடமையுமாகும். கல்வியில் சிறந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரும் மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியரை என்றும் மறந்து விடக்கூடாது. மலையகத்தில் அறிவொளிகளாக வாழ்ந்தவர்களை இனங்கண்டு அவர்களை மாணவர்கள் கௌரவிக்க வேண்டும்.
காலத்திற்கு காலம் பாடத்திட்டங்கள் மாறலாம்.அவ்வாறான சூழ்நிலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மொழி போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய சிரத்தை எடுத்து கற்பிக்க வேண்டும். எமது சமூகம், எமது மாணவர்கள், இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு கல்வி மட்டுமே ஒரு முலதனமாகும். எனவே ஆசிரியர்கள் இம்மூலதனத்தை சிறப்பான முறையில் இடவேண்டும்.
அதிபர்கள் ஆசிரியர்களை இனங்கண்டு அந்தந்த பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திறமையுள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்பார்வை செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் நடவடிக் கைகளை உறுதி செய்வதுடன் ஆசிரியர்களுக்கான பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்களிப்புச் செய்தவற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
அதிபர் என்ற முறையில் பாடரீதியான வளவாளர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் இணைத்துக் கொண்டு பாடசாலை நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும்.
ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி"
ஆசிரியர் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகும் அவர்களின் கையில்தான் ஒரு சமூகத்தின் விடிவும், வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கிறது. இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் தனது பணியை செவ்வனே செய்ய வேண்டியது அவசியமாகும்.
சிவமணம்
நன்றி- தினகரன்