Wednesday, April 28, 2010

உரிமையை தட்டிக் கேட்டும் தினமாக மேதினம் மாற வேண்டும்

30 வருட யுத்த காலத்தின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெறும் முதலாவது மேதினம் நாடு முழுவதுமாக நடைபெறுகிறது. மலையகத்தை பொறுத்தவரை மேதினம் ஒரு ஆலய திருவிழா, சடங்கை போல இடம்பெற்று வருகிறது.
மேதினம் தொழிலாளர்கள் தினமாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக எழும்பிய அலைககளினால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் தினத்தின் வரலாறு நீண்டதோர் வரலாறாகும். தொழிலாளர்களின் அடிமைத்தன வாழ்வுக்கு எதிராக அமெரிக் சிக்காகோ நகரில் 1889 மே மாதம் 01 திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஏற்றபட்டதன் பயனே மே 1ம் திகதிய தொழிலாளர் தினமாகும்.
தொழிலாளர்களின் ஒற்றுமையின் விளைவாக 1890 மே 1ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. இச் சம்பவத்தின் பின்னரேபல நாடுகளில் மே முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று மலையகத்தில் மேதினம் ஒரு கேலிக்கூத்தாக அதன் புனித தன்மைக்கு எதிராக இடம் பெறுகிறது. வெறுமனே வருடா வருடம் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தை ஏற்படுத்துவதாலும் கூட்டத்தின் இறுதியில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதாலும் எமது சமுதாயத்திற்கு இதுவரை எதுவுமே நன்மைகள் கிடைக்கப்பெற்றதாக தெரியவில்லை.
கடந்தகால மேதினங்களில் எழுப்பப்பட்ட கோஷங்களாலும் தீர்மானங்களாலும் என்ன பயனை எமது மக்கள் எட்டியுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை மகிழ்விததது மட்டுமே எமது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
மலையக பாட்டாளி மக்களின் உரிமையை தட்டிக்கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக மலையகத்திலும் மேதினம் மாற வேண்டும்.
ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் தெருக்கூத்து நாடகங்களை நடடத்துவதுபால தலைவர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் நிகழ்வாகிவிட்டது மேதினம். தொழிலாளர்களின் உணர்வுகளை கொண்ட தொழிலாளர் தினமாக மேதினம் மாற்றம் பெற வேண்டும். வெறுமனே இந்திய சினிமா பாடகர்களையும் வெத்துவேட்டு தீர்மானங்களை கொண்டு மேதினத்தை நிரப்புவதைவிட எமது மண்ணுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் உயிர்நீத்த மலையக தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாக மாற்றம் பெற வைக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான செலவுகளை செய்து பந்தா மேதினக் கூட்டங்களை நடத்துவதை விட்டு அச் செலவு பணத்தை கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ள மலையக மாணவ மாணவிகளுக்கு வழங்கினால் அதுவே எமது சமுதாயத்தின் அறிவுக் கண்கள் திறப்பதற்கான அத்திவாரமாக அமையும் நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களை கைவிட்டு நடைமுறை வழிக்கு ஏற்ற வகையில் எமது மக்களே மேதினத்தை மாற்றம் பெற வைக்க வேண்டும்.
எமது பாட்டாளி வர்க்க போராட்டத்தில் முதன் முதலாக 1939 ஜனவரி 12ம் திகதி முல்லோயா போராட்டத்தில் சுரவீர என்ற பொலிஸ்காரரால் கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் முதல் மலையக மக்களின் போராட்டத்தில் கண்டி பல்லேகல தோட்டத்தை சேர்ந்த பழனிவேல்(1979) வi 36 தியாகிகள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த தியாகிகளை எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ மேதினத்தினத்திலாவது நினைவுகூராமை வருந்தத்தக்கதாகும்.
ஓவ்வொரு மேதினத்தன்றும் இத் தியாகிகளை நாம் நினைவு கூரல் வேண்டும்.
வெறுமனே மேதினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதால் எமது எதிர்கால சமுதாயத்திற்கு எவ்வித பயனுமில்லை.
அர்த்தபுஷ்டியான செயல்களில் எதிர்வரும் காலங்களில் நாம் செயற்படுவோம்.
அதன் மூலமாக எமது தொழிலாளர்களின் பலத்தை அடையாளப்படுத்துவோமாக
திண்ணனூரான்
சிலாபம்