Monday, May 25, 2009

நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுஅச்சத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தின் வௌ;வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புசல்லாவ, டெல்டாபுர, கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடமொன்று மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் இக்கட்டடத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நுவரெலியா, யுனிக்விவ் கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியொன்றின் சமையலறைப் பகுதி நேற்று திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. இருப்பினும் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. கொத்மலையின் சில பிரதேசங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா - கண்டி வீதியிலுள்ள டொப்பஸ் என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்று நேற்று சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்குத் திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருவதால் தான் இவ்வாறு அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதனால் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மழைக் காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
அரசினால் பொறுப்பேற்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்கள் மாற்றம்

பதுளை மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்றுள்ள 12 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்களும் தொழிலாளர் நன்மை கருதி அவர்களுக்கேற்ப மாற்றப்படுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற வைத்தியசாலைகள் நவீன மயப்படுத்துப்படுவதுடன் மேலும் ஐந்து பெருந் தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் - சென்னன்

கூட்டு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவர் ரி.வி. சென்னன் பதுளை காரியாலயத்தில் தமது தொழிற்சங்க முக்கியஸ்தர்களுடன் பேசும் போது தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பனவாக அமைய வேண்டும். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர்களை பாதித்துள்ள போதிலும் ஒப்பந்தத் துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றன. இவை இரகசியமாகவே நடை பெற்றுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் பூரணமாகவே மறைக்கப்பட்டுள்ளன. இச் செயற் பாடுகள் எமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியி ருக்கின்றது. பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். தொழிலாளர்களின் சம்பளத்தில் பகுதி பகுதியாக உயர்வினை ஏற்படுத்தாமல் 300 ரூபா என்ற அடிப்படையிலாயினும் அடிப்படைச் சம்பள உயர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். அச்சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கமைய பகுதி பகுதியாக சம்பள உயர்வு இடம்பெறல் வேண்டும்.
ஊவா மாகாணசபை 28 இல் கலைக்கப்படலாம்?

ஊவா மாகாணசபை எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சபையின் ஆயுட்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும் அதற்கு முன்பு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே எதிர்வரும் 28 ஆம் திகதி இச்சபை கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இம் மாகாணசபையுடன் தென் மாகாணசபையும் கலைக்கப்படவுள்ளது.
மஸ்கெலியா சாமிமலை வீதியில் மண்சரிவு அபாயம்

மஸ்கெலியா நகரில் சாமிமலை வீதியில் மேற்குப் புறமாக வீட்டு மனைகள் அமைப்பதற்காக பாரிய மண் திட்டுகள் டோசர்கள் மூலம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சிலவற்றில் பாரியளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அம்பேகமுவ பிரதேச சபை முதல்வர் இவற்றை நேரில் பார்வையிட்டதையடுத்து அங்குள்ள மக்களை வேறு இடங்களில் தங்குமாறு பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
டிஸ் ரி.வி. அன்ரனாக்களை அகற்ற உத்தரவு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ் ரி.வி.அன்ரனாக்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இவற்றை அகற்றி வருவதாக தோட்டப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாமிமலை, கவரவில, நோர்வூட், பொகவந்தலாவை, டிக்கோயா, புளியாவத்தை போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வருகின்ற பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக இவற்றை அகற்றுமாறு அறிவித்துள்ளனர். தமது பொழுது போக்குக்காகப் பெறப்பட்ட இந்த அன்ரனா மூலமாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்ததாகவும் தற்போது இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மலையக அரசியல் தலைமைகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெறுமதியான மரங்களை வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை

அக்கரபத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின் அப்புத்தளை கிளனனோர் தோட்டத்தில் பெறுமதிமிக்க தேப்பந்தைன் மற்றும் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதை உடன் நிறுத்துமாறு தோட்டத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இத் தோட்டங்களில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தேப்பந்தைன் மரங்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து வெட்டப்பட்ட விபரத்தை நிருவாகமே கூறியதாக தோட்ட கமிட்டித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பணம் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் அபிவிருத்திக்கும் தோட்ட மக்களின் நலம் சார்ந்த பொது வேலைத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென முறையிடும் தொழிற் சங்கங்கள் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதனால் அதனைச் சூழவுள்ள பெறுமதியான தேயிலைச் செடிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தோட்ட கம்பனிக்கும் பொலிஸ் அதிகாரி,மாவட்ட செயலகத்துக்கும் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தப்படி மரம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.