Tuesday, September 8, 2009

தொழிலாளர் சம்பள உயர்வு : ம.மா.சபையில் பிரேரணை நிறைவேற்றம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மத்திய மாகாண சபையில் இன்று 08-10-2009 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட விசேட பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்குத் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும். இவ்விடயம் குறித்து அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கொண்டு வந்த, விசேட பிரேரணையை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜரட்ணம் வழிமொழிந்தார்.


இதனைத் தொடர்ந்து இந்தப் பிரேரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை ஏகமானதாக ஏற்று நிறைவேற்றினர்.


அதேவேளை, இந்தப் பிரேரணைத் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அறிவிப்பதற்கு மத்திய மாகாண சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்
சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும்

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 07-10-2009 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் தொழிலாளர்களுக்கான சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்க மறுத்து விட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 360 ரூபா சம்பள உயர்வினை வழங்க முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்டதுடன், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.

நாளொன்றுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குமாறு கோரி தொழிலாளர்கள் கடந்த 02-10-2009 திகதி முதல் ஒத்துழையாமை போராட்ட நடாத்திவருக்கின்ற நிலையில் கூட்டொப்பந்தம் தொடர்பாக நேற்று முக்கிய பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் பேச்சுவார்த்தை இடையிலேயே முறிவடைந்ததுடன் தற்போது முன்னெடுக்கும் போராட்டம் தொடரும் எனவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.