மாத்தளை - எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (16) எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான பண்டரபொல தேயிலைத் தொழிற்சாலை, ரத்துவத்த ரோசா பளிங்குக் கற்கள் ஒப்பந்தம், செம்பவுத்த சுற்றுலா மத்திய நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு கோப் குழுவினர் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே கோப் குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டரபொல தேயிலைத் தொழிற்சாலையானது தகுந்த முகாமைத்துவம் இன்றி நடத்தப்பட்டதால் அது தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், ரத்வத்தை ரோசா பளிங்குக் கற்கள் ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதுடன், செம்புவத்தை சுற்றுலா மத்திய நிலையத்தின் டிக்கட் விநியோகத்தில் மோசடிகள் இடம்பெறுகின்றமை கண்காணிப்பு விஜயத்தின் போது உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெருந்தோட்ட யாக்கமானது அரசாங்கத்துக்கு சொந்தமானதொன்று என்பதுடன், பொது வியாபார செயற்குழுவின் கீழ் கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்பட்ட நிறுவனமாக 2016ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டு பல பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், மீண்டும் அதன் பணிப்பாளர் சபை இந்த மாதம் 20ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கோப் குழு நாடாளுமன்றுக்குள் இயங்கி வந்தாலும், அது புத்தகம், காகிதங்களில் வெளிவரும் காரணங்களை மையப்படுத்தி பரிந்துரைகளை முன்வைக்கும் நிறுவனம் இல்லையென்றும்,கணக்காய்வு சட்டமூலத்தில் கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதன் அதிகாரிகளுடன் எந்தவொரு இடத்துக்கும் சென்று பரிசோதனைகளை செய்வதாகவும், அரச சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது சிறந்ததென ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நன்றி- தமிழ் மிரர்