தொழிலாளர்களின் பங்கு அட்டைகளை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள்
பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு கைமாறியதையடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறந்தள்ளி விடக்கூடாது என்பதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இப் பங்கு அட்டைகளை பெற்றுக் கொண்டதன் மூலம் தொழிலார்களும், தோட்டக் கம்பனியினருடன் இணைந்து தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். இதன் மூலம் கம்பனிகளுக்கு வருடா வருடம் கிடைக்கும் இலாபப் பணத்தில் குறித்த சதவீதம் தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகங்களோ அல்லது கம்பனியினரோ தொழிலாளர்களிடத்தில் எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் நிலைக்கு பங்கு அட்டை முறைமை முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த பங்கு அட்டைகளை தொழிலாளர்களிடமிருந்து ஒரு பங்கு அட்டையை 1,500 – 2,000 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகைக்கு ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் பெற்றுக்கொள்வதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் பங்கு அட்டைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்கள் பங்கு அட்டைகளை நிர்வாகங்களிடம் விற்பதால் வருடா வருடம் கிடைக்கும் இலாப பங்கு பணம் வழங்கப்பட மாட்டாது. தோட்ட நிர்வாகங்களின் எதேச்சதிகார நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.