Friday, May 20, 2016

இயற்கையின் பேரழிவினால் மக்களின் துயரம்

கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய களுபான தோட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானவர்கள் விபரம்

எஸ்.சிவராம் (40), ஜீ.நவின் (12), ஜீ.வினோஜ், எஸ்.பிரேமளாதேவி (23), சுஜந்தினி (19), கலைச்செல்வன் (27), டபிள்யூ. கதிரேசன் (53), செல்வராணி (56), ஆர். ராஜன் புஸ்பவதி (48), ஆர்.தீபா (19), அனுதராஜா தரணி (04), பார்வதி (68), பெரியசாமி (72), நிரஞ்சலா உள்ளிட்ட 14 பேரே புதையுண்டவர்களாவர்

இவர்களில் நேற்று முன்தினம் ஆறுமாதக் குழந்தையொன்றும் அக்குழந்தையின் தந்தையான கலைச்செல்வனும் மீட்கப்பட்டதுடன் மேலும் 12 சடலங்கள் மீட்கப்பட்டன
பாதிப்புக்குள்ளான 300 இற்கும்  அதிகமானோர் யக்கல வித்தியாலயத்திலும், லெவல தமிழ் மகாவித்தியாலயத்திலும், உந்துகொட சிங்க வித்தியாலத்திலும் , தன்னிமலை விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் லிந்துலைசென்கூம்ஸ் nலிமிலியர் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 36 பேர் இடம்பெயர்ந்து அத்தோட்டத்தில் கொழுந்து மடுவத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு பெய்த கடும் மழையினால் தொழிலாளர்களின் குடியிருப்புக்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோட்ட நிர்வாகமோ இத் தொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவித அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மாவத்தகம பிரதேசத்தில் கண்டி குருனாகல் பிரதேசத்தில் மலையொன்று தாழிறங்கும் அபாயம் உள்ளதால் (மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதால); 35 குடும்பங்களைச் சேர்ந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட தெல்கன, ரங்கல பெரிய டிவிசனை சேர்ந்த 75 குடும்பங்கள் மண்சரிவு அனர்த்தம் காரணமாக நேற்றைய தினம் அப்பிரதேச வேன்சைட் தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனால் 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

அரநாயக்க, சாமசர மலை சரிந்து வருவதால்,  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரநாயக்கவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 135 வீடுகள் புதையுண்டுள்ளனவெனவும், அவ்வீடுகளில் வசித்தோரது 19 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனவெனவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகத் மகேந்திர கூறினார்.

குறித்த கிராமங்களில் வசித்த 220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களுமென சுமார் 1,700பேர், 9 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜகத் மகேந்திர கூறினார். 

அரநாயக்க, போடாபே மலை மற்றும் ஜனபத மலை ஆகியனவும் மணிசரிவுக்கு உள்ளாகும் அபாயம்; உள்ளதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களைத் தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இரத்தோட்டை, பம்ரபகலவத்தையில் லயன் குடியிருப்பின் மீது, நேற்றுமாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென இரத்தோட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

கம்பளை தொலஸ்பாகையில் பேரவில மலைவீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், அந்த பிரதேசத்தைச் ரேச்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர், அங்கிருந்து வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளதாக இஹலகோரள பிரதேசசெயலாளர் மங்கள விக்ரமராச்சி தெரிவிக்கின்றார். சுமார் 5 ஏக்கர் பிரதேசத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், கிராமத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கு மாற்று வீதிகளை பயன்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.