தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் நியாயமான சம்பள உயர்வொன்றுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை யென்றால் மலையகம் தழுவிய மாபெரும் தொழிலாளர் போராட்டம் இடம்பெறுமென இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதற்கு பூரண ஆதர வழங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட கம்பனிகளும் தொழிலாளரை ஏமாற்ற முடியாதெனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் இராஜ கிரியவிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இம் மாநாட்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்ரதீபன் மேற்படி சங்கத்தின் இணைப்பாளர் விஜயகுமாரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த வடிவேல் சுரேஸ் எம்.பி.,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்க மட்ட பேச்சுவார்த்தைகள் பல இடம்பெற்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது 10 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான சம்மேளனத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் அதை ஏற்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது கைகூடவில்லை. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச, தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துடனும் செயற்படுகின்றன. இதன்மூலம் 1000 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவுறுவதால் 14 ஆம் திகதி சம்பள உயர்வு தொடர்பில் முடிவொன்று எட்டப்படாதவிடத்து அதற்கு பின்வரும் காலங்களுக்கான நிலுவையையும் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2020 ஆம் ஆண்டுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும். எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இதனைக் கருத்திற்கொண்டே சம்பள உயர்வின் தொகை நிர்ணயிக்கப்படும்.
அதுதொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தாலும் 14 ஆம் திகதிக்குப்பின்னரே கூட்டாக அந்த முடிவை அறிவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினகரன்