கொத்மலை எல்பொடை தோட்டத் தொழிலாளர்கள் நேற்று
திங்கட்கிழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். தோட்ட
உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை
கண்டித்தே இப் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. எல்பொடை தோட்டம்
நான்கு பிரிவுகளைக் கொண்ட ஒரு தோட்டமாகும். இத்தோட்டத்தின் பரப்பும்
அதிகமானது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6
உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கடமையாற்றியுள்ளனர். எனினும் அண்மைக்
காலமாக உத்தியோகத்தர் குறைப்பு கணிசமாக இடம்பெற்றது. இதன்
காரணமாக தோட்டங்களை பராமரிப்பது முதல் நிர்வாக ரீதியான
செயற்பாடுகள் வரை அனைத்து மட்டங்களிலும் திருப்தியற்ற நிலைமை
மேலெழுந்துள்ளது.
மேலும் தேயிலைச் செடிகள் முறையாக பராமரிக்கப்படாமை
காரணமாக உற்பத்தி வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில தேயிலை
மலைகள் காடாக இருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்
எம்.எஸ்.எஸ். செல்லமுத்து சுட்டிக்காட்டுகின்றார். அத்தோடு
கம்பனியினரின் சில முறையற்ற போக்குகள் எல்பொடை தோட்டத்தின்
எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி இருப்பதாகவும் அவர் மேலும்
தெரிவிக்கின்றார்.
தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை
குறைக்கப்படுவதன் காரணமாக தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கும்
முகம்கொடுத்து வருவதாக தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்பதும் அவர்களின் கருத்தாக
உள்ளது. இந்நிலையில் தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை
குறைக்கப்படுவதை கண்டித்து தொழிலாளர்கள் காலை ஒரு மணி நேர பணிப்
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இ.தொ.கா. வின் உப தலைவர்
எம்.எஸ்.எஸ். செல்லமுத்து தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டார். இப் பேச்சுவார்த்தையின் போது விரைவில்
கம்பனியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தோட்ட
உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை நிரப்புவதாக தோட்ட நிர்வாகம்
செல்லமுத்துவிடம் உறுதியளித்தது. இதனை தொடர்ந்து பணிப்
பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. தோட்ட நிர்வாகம் தோட்ட
உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு
நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.