Tuesday, August 20, 2019

தேயிலை ஏற்றுமதி விலைகளில் வீழ்ச்சி

ஜுலை மாதத்தின் தேயிலை ஏற்றுமதி சராசரி பெறுமதி ரூ. 497.35 ஆக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 494.48 உடன் ஒப்பிடுகையில், ரூ. 2.87 அதிகரிப்பு என்ற போதிலும், 2018 ஜுலை மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 537.88 உடன் ஒப்பிடுகையில் ரூ. 40.53 சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.  
பிராந்திய மட்டத்தில் விலைகளை ஆராயும் போது, உயர் நில தேயிலை ஜுலை மாதத்தில் சராசரியா ஒரு கிலோ கிராமுக்கு ரூ. 449.10 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 458.55 உடன் ஒப்பிடுகையில் ரூ. 9.45 சரிவாகும்.  
மத்திய நில தேயிலை விலையை பொறுத்தமட்டில், 2019 ஜுலை மாதத்தில் கிலோகிராம் ஒன்றின் சராசரி பெறுமதி ரூ. 414.40 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 430.74 ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 84.95 சரிவை பதிவு செய்திருந்தது.  
தாழ் நில தேயிலை விலையை பொறுத்தமட்டில் ஜுலை மாதத்தில் கிலோகிராம் ஒன்றின் சராசரி விலை ரூ. 538.63 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்தில் பதிவாகிய ரூ.526.52 உடன் ஒப்பிடுகையில் ரூ. 12.11 அதிகரித்திருந்தது.  
இந்தப் பெறுமதி 2018 ஜுலை மாதத்தில் ரூ. 555.71 ஆக பதிவாகியிருந்தது. இதனூடாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 17.08 வீழ்ச்சியாகும். 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியை எடுத்துக் கொண்டால், மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தேயிலையில் சராசரி பெறுமதி ரூ. 549.99 ஆக பதிவாகியிருந்தது. இது 2018 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 592.55 உடன் ஒப்பிடுகையில் 
ரூ. 42.56 சரிவாகும்.  2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட உயர் வலய தேயிலை கிலோகிராம் ஒன்றின் சராசரி விலை ரூ. 518.66 ஆக பதிவாகியிருந்தது. இது 2018 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 568.87 உடன் ஒப்பிடுகையில் ரூ. 50.21 குறைவாகும்.  
மத்திய நில தேயிலையை பொறுத்தமட்டில் நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் ஒரு கிலோகிராம் சராசரி பெறுமதி ரூ. 476.75 ஆக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதியான ரூ. 531.51 உடன் ஒப்பிடுகையில் ரூ.54.76 சரிவாகும்.  
தாழ்நில தேயிலையை பொறுத்தமட்டில், 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த சராசரி ஒரு கிலோகிராமின் விலை ரூ. 580.42 ஆகும். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 616.12 உடன் ஒப்பிடுகையில் ரூ.35.70 குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   
மாதாந்த மற்றும் ஒன்று திரட்டிய சராசரி பெறுமதிகள், முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர்களில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இதற்கு ரூபாயின் மதிப்பிறக்கம் காரணமாக அமைந்துள்ளது.
-Tamil Mirror)

Monday, April 15, 2019

கந்தப்பளையில் தேயிலைத் தோட்டம் அலோசியஸுக்கு குத்தகைக்கு?

நுவரெலியா - கந்​தப்பளை பிரதேசத்திலுள்ள 450 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று, 2015ஆம் ஆண்டில் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அவரின் மகனான அர்ஜுன் அலோசியஸிடம், மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டமானது, மாதாந்தம் 8,000 ரூபாய் 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தப்பளை, மாஹகுடுகள தோட்டமே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், ஒரு மாத இடைவெளியிலும் மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று 7 மாத காலப்பகுதிக்குள்ளும் இந்த தோட்டம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி தோட்டத்தை 2045 ஆம் ஆண்டு வரையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், ஜெப்ரி அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் 2015.09.15 அன்று கையெழுத்திட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சுக்குச் சொந்தமான மேற்படி தோட்டம், முன்பு “மத்துரட்ட” கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஜெப்ரி அலோசியஸ் குறித்த காணியைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தோட்டத்தில், இரண்டு பங்களாக்களும் வைத்திய மத்தியஸ்தானம் ஒன்றும், ஊழியர்களுக்கான இருப்பிடம் ஒன்றும் தாய்மார்களுக்கான இல்லமொன்றும் காணப்படுவதாகவும், பெறுமதிமிக்க 19,000 மரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி- தமிழ் மிரர்

Thursday, April 11, 2019

அரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன?

எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது.
ஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு.
இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால் தலைசுற்றும்.
இதேபோலத்தான் ஜெனிவாவிலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தோம் என்று மகிழ்ச்சியடைகிறார் சுமந்திரன்.
இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அது தவிர்க்க முடியாத சர்வதேச (மேற்குலக) விதி என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதையிட்டுக் கூட்டமைப்போ சுமந்திரனோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ பெருமைப்படுவதற்கு எதுவுமே இல்லை.
இதைப்போலத்தான் தற்போதைய வரவு செலவுத்திட்டத்துக்கான கூட்டமைப்பின் ஆதரவும். அதைப்போலக் கண்மூடித்தனமாக  ஆதரவளித்ததை நியாயப்படுத்துவதுமாகும்.
இதையெல்லாம் தமிழ் மக்கள் விரும்புகிறார்களா என்றால் அதுவுமில்லை.
அப்படியென்றால் மக்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை எதற்காகக் கூட்டமைப்புச் செய்ய வேண்டும்?
அல்லது மக்களுடைய விருப்பத்தின்படிதான் இந்த முடிவுகளைக் கூட்டமைப்பு எடுத்ததா?
அல்லது மக்களுடன் எங்கேயாவது இந்த விடயங்களைக் குறித்துக் கூட்டமைப்பு ஆலோசித்திருக்கிறதா?
அல்லது இப்படித்தான் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மக்கள் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா?
மக்கள் மட்டுமல்ல எவரும் எங்களை எதுவும் கேட்க முடியாது. ஒரு மசிரையும் புடுங்க முடியாது என்ற இறுமாப்புடன் அது அரசுக்குச் சார்பான தீர்மானங்களை எடுக்கிறது. அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. அரசோடு ஒத்தோடுகிறது. (அப்படியென்றால், முன்னர் அரசோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியை எப்படிக் கூட்டமைப்பினர் ஒத்தோடிகள் என்று சொல்ல முடியும்?)
ஆகவே சந்தர்ப்பவாதமாக மக்களுக்கு எதிர்நிலையில் நின்று செயற்படுகிறது கூட்டமைப்பு எனலாம்.
எதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்படிச் செயற்படுகிறது? அதற்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்கலாம்.
பச்சையாகவே தெரிகிறது, கூட்டமைப்பு தன்னுடைய நலன்சார்ந்து மட்டுமே செயற்படுகிறது என.
அதாவது கூட்டமைப்பின் பாரா”ளுமன்ற உறுப்பினர்களுடைய நலன்களே இதில் மையம்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கூட்டமைப்பின் அடுத்த மட்டத்திலிருப்போரில் பலருக்குத் தங்கள் தலைமை இப்படிச் செயற்படுவதையிட்டு உள்மனக்கொதிப்புண்டு.
ஆனால், அவர்களால் தலைமையை எதிர்த்து நிற்க முடியாது.
அப்படி எதிர்த்தால் அவர்கள் கட்சியினால் – தலைமையினால்  ஓரங்கட்டப்படுவர். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தில் கூடச் செல்வாக்கைப் பெற முடியாமல் போய் விடும்.
ஆகவே கட்சியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சியின் நன்மதிப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேணும். அதனுடைய ஏகபோகத்துககுக் கட்டுப்பட்டாக வேண்டும்.
இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போரினாலும் நீண்டகால ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று அந்தப் பாதிப்புகளிலிருந்தும் நீதியின்மையிலிருந்தும் இன்னும் மீட்கப்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் தோல்விகளால் மூழ்கடிக்கப்படுகிறது. அதிலும் அந்த மக்கள் நம்பிய தலைமையினாலேயே தோற்கடிக்கப்படுகிறது. இது உண்மையில் பலியிடலாகும்.
காணாமலாக்கப்பட்டோர், காணிகளை இழந்தோர், உறவுகளை இழந்தோர், அரசியல் கைதிகள் என்ற பேரில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள், போரிலே பெற்றோரை இழந்தோர், ஆண்துணையை இழந்த பெண்கள், உடல் உறுப்புகளை இழந்தோர் என கூடுதற் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இதுவரையில் முறையான எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவேயில்லை.
இந்த நிலையில் எப்படிக் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது கூட்டமைப்பு? அதற்கான அவசியம் என்ன? கூட்டமைப்பு இப்படிச் செயற்படுவதற்கான ஆணையை வழங்கியது யார்?
இந்த விடயங்களில் குறைந்த பட்சமான மீட்பையாவது அரசாங்கத்தைக் கொண்டு கூட்டமைப்பு செய்வித்திருந்தால் இவ்வாறான ஆதரவளிப்புகளுக்கு ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இவை எதையும் செய்யாமலே கூட்டமைப்பின் ஆதரவை (தமிழ் மக்களின் ஆதரவை) அரசாங்கம் பெற்றுள்ளது. இது அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியே.
அதாவது போர்ப்பாதிப்பை நிவர்த்தி செய்ய வேண்டிய தன்னுடைய பொறுப்பைச் செய்யாமலே பாதிக்கப்பட்ட மக்களின் தலைமையுடைய ஆதரவை அரசாங்கம்  பெற்றுள்ளதென்பது சாதாரணமான விசயமல்ல.
இது பாதிக்கப்பட்ட மக்களைச் சரணாகதி அடைய வைத்த செயற்பாடாகும். ஏறக்குறைய இது இன்னொரு வகையான தோற்கடிப்பே.
இதற்கு முழுமையான “கைவேலை”யைச் செய்து கொடுத்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
ஆகவேதான் தமிழ் மக்களின் வரலாற்றில் மாபெரும் தவறுகளைக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது என்கிறோம்.
இன்றுள்ள நிலைமையின்படி குறைந்தபட்சப் பேரம்பேசக்கூடிய வாய்ப்புகளையும் கூட்டமைப்பு குறுகிய சுயநலன்களுக்காகக் கைவிடுகிறது என்பது வரலாற்றுத் தவறாகும்.
எந்த வகையிலும் அரசாங்கங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு எந்த நியாயங்களும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது வெளிப்படையான விசயம்.
அரசியல் என்பது தாம் பிரதிநிதித்துப்படுத்தும் மக்களுடைய நலன்களுக்கான பணியே தவிர, மக்களை வைத்துத் தமது நலன்களைப் பேணிக்கொள்ளும் விசயமல்ல.
அப்படி ஒரு அரசியல் இருந்தால் நிச்சயமாக அது மக்கள் விரோத அரசியலேயாகும்.
2009 போர் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்கும் அரசியலுரிமைக்குமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழியப்போகின்றன. இதில் நான்கு ஆண்டுகள் சுத்தமாகவே நடப்பிலுள்ள அரசாங்கத்துக்குப் பகிரங்க ஆதரவைச் சம்மந்தன் அணி வழங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி நெருக்கமாக நின்று ஆதரவளித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு இந்தச் சூழலைப் பயன்படுத்தி இதுவரையில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஈடேற்றியிருக்க முடியும்.
இதற்கென அரசாங்கத்திற்குச் சில வேலைத்திட்டங்களை முன்வைத்திக்கலாம். நிலைமையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கலாம். புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
சிறப்பான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கலாம்.
பல கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.
கூடவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்திருக்கலாம்.
கூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யாதபடியால்தானே மக்கள் போராட வேண்டியிருக்கிறது.
எனவே இதொன்றையும் செய்யாமலே அரசுக்கு ஆதரவாகக் கையையும் காலையும் தூக்குவதென்பது மிக அநீதியானது. கேவலமானது. கூட்டமைப்பின் வார்த்தைகளிலேயே சொன்னால் துரோகமானது.
இதையே நாம் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.
முன்னர் இதே போல அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இப்பொழுது அதே வேலையை அவர்களே செய்கின்றனர்.
அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு என்ன பெயர்?
மக்களுடைய நியாயங்களுக்கும் நிலைமைகளுக்கும் மாறாகச் செயற்படும் எந்த அரசியல் தரப்பும் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது,
அது எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும் வெற்றியைப் பெற முடியாது.
இதொன்றும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுப்பத்திரமல்ல. மக்களின் நிலை நின்று நோக்கப்படுவதானால் ஏற்பட்ட வெளிப்பாடு.
சனங்களுக்கான நியாயக் குரல்.
இதை மறுத்துரைப்போரிடம் நாங்கள் சில கேள்விகளை எழுப்பலாம்.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்குப் பிறகு 2009 ற்குப்பின்னான இறுதிப் பத்து ஆண்டு காலத்திலும் அரசியல் அரங்கில் கூட்டமைப்பே தலைமைச்சக்தியான நிற்கிறது.
இந்தப் பத்து ஆண்டுகளிலும் அது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் பெற்ற மாபெரும் நன்மைகள் எவை?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் கூட்டமைப்பின் அரசியல் சாதனை என்ன? அரசியற் பங்களிப்பு என்ன?
எந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், எத்தகைய மதிப்பீடுகளும் இல்லாமல் இப்படியே இந்தப் பயணம் தொடர்வது சரியானதா?
இதையிட்டு இப்போதேனும் பேசவில்லை என்றால் இதையும் விட மோசமான நிலையே நாளை ஏற்படும்.
நாளை என்பது இன்றைய உருவாக்கமே. இன்றைய பாதுகாப்பு. இன்றைய செயற்பாட்டின் விளைவுதானே!
ஆகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தியே நாம் அடுத்த கட்டத்தைப்பற்றிச் சிந்திக்க முடியும்.
அதற்கான ஒரு தூண்டலே இந்தக்குறிப்புகள்.
தவறுகளை உரிய வேளையில் சுட்டிக்காட்டவில்லை என்றால், பொறுப்பானவர்களை உரிய சந்தர்ப்பத்தில் நெறிப்படுத்தவில்லை என்றால் அது இன்னொரு முள்ளிவாய்க்கால் போலவே மாறும்.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்களிலிருந்து வெளியேற வேண்டுமே தவிர தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்க முடியாது.
– கருணாகரன்-

Thursday, March 28, 2019

இலங்கையை வதைக்கும் வறட்சி

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அதிக வெப்பமுடைய காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடியம் வரை நிலவுகின்ற சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து, நீர்மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் நீர்மின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளதால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 10 சதவீதமான நீர்மின் உற்பத்தியே செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாள்தோறும் சூழற்சி முறையில் மின்சாரத்தை நிறுத்துவதற்கு மின்வலு, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளாந்தம் சுழற்சி முறையில் மின்சார தடை இருந்து வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால், நாட்டிலுள்ள மின்சார தேவைக்கு ஏற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்மின் உற்பத்தி இயல்புக்கு திரும்பும் வரை, மின்சார சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இரண்டு மின்குமிழ்களை அணைக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்கள், மத ஸ்தானங்கள் மற்றம் வணிக நிறுவனங்களில் மின்சார தேவையை 10 சதவீதம் குறைப்பதற்கும், தேவையேற்படின் மின்குமிழ்களை அணைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீதி விளக்குகளை வழக்கமாக அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அவற்றை அணைத்து விடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நன்றி- பி.பி.சி தமிழ்

Tuesday, February 26, 2019

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது - அத்தாவுட செனிவிரட்ன

வரவு செலவு திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம் என அமைச்சர் திகாம்பரம் கூறியிருப்பதானது தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார் என முன்னார் அமைச்சர் அத்தாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 

அவர் இது குறித்துத் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும கிடைத்து வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபாய், வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவும் இம் முறை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கா பணக்கார வர்க்கத்தினரை பாதுகாக்க முற்படுவது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகமாகும். இனிமேலாவது மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்புத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான ஆட்சியில் நான் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்த்தைதான் இன்றைய அரசாங்கமும்முன்னெடுத்துச் செல்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக திகாம்பரம் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றார். 

தொழிலாளர்களுக்கு 50 ரூபா பெற்றுக் கொடுத்தது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சாதனை என கூறுகின்றவர்கள் சார்பில் பாராளுமன்றத்தில் 06 உறுப்பினர்கள் இருந்த போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபா இல்லாமல் செய்யப்பட்டன. தொழிலாளர்களுக்கு 200 ரூபா வழங்காவிட்டால் அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் எனவும், அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சர் நவின் திசாநாயக்கா 50 ரூபா  வழங்கப்படும் என தெரிவித்ததும் அமைச்சர் பதவி குறித்து மௌனம் காத்தனர். இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அதனால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதும் இவர்கள் ஒருநாளும் அரசை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பது பிரதமர் ரணிலுக்கு நன்றாகவே தெரியும். அமைச்சின் சுகபோக வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மை என குறிப்பிட்டார்

Wednesday, February 13, 2019

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக மூன்று மாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என்றும், தொழிற்சங்கங்களும் அதனைக் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்ததில் 500 ரூபா அடிப்படை வேதனமும், 140 ரூபா வரவுக்கான கொடுப்பனவும், 60 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவும், 30 ரூபா தேயிலை நிர்ணய கொடுப்பனவும் என 730 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அடிப்படை வேதனம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, விலைக்கான கொடுப்பனவு 50 ரூபா அடங்களாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த வேதனமாக வழங்குவதற்கு இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 730 ரூபாவாக வழங்கப்பட்ட நாளாந்த வேதனமானது இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபா அடிப்படை வேதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ உள்ளிட்ட ஆயிரம் இயக்கம் என்பன கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபா வேதன அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.
எனினும், இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அடிப்படை வேதனம் 40சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தெரிவித்திருந்தன.
இந்த அளவான அடிப்படை வேதன உயர்வு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், மூன்றுமாத கால நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறிருப்பினும், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூறியபடி 40 சதவீத அதிகரிப்பு மற்றும் நிலுவைக் கொடுப்பனவு போன்ற அறிவிப்புகள் உண்மைக்குப் புறம்பானவைபோன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்து அமைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத நிலுவைக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கவில்லை என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று விளக்கமளித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம் மூன்று மாதகாலம் மாத்திரமே தாமதமாகியது.
இதில் 730 ரூபாவிலிருந்து 750 ரூபா என 20 ரூபா சிறிய வித்தியாசமே காணப்படுகிறது.
எனவே, அதனை நிலுவைத் தொகையாக வழங்குவதற்குத் தாங்கள் கருதவில்லை என்னும், தொழிற்சங்கங்களும் இவ்வாறு கோரவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தால், 20 ரூபாவிற்கான நிலுவைக் கொடுப்பனவையே வழங்க வேண்டும்.
இது மிகவும் நகைப்புக்குரியதாகும்.
தேயிலை சபையின் பணத்தை இதுபோல வீண்விரயம் செய்வதற்கும் தாம் விரும்வில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி-தேனீ

Tuesday, February 12, 2019

சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வாக அவர்களது நாள் சம்பளத்துடன் ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இத் தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சவார்த்தை நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாள்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 2, 2019

ஒப்பந்தமா அடிமை சாசனமா ?

புதிய கூட்டு ஒப்பந்தம் கடந்த 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு விட்டது. அப்பாடா! கண்டத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்ற உள்ளூரக் களிப்பில் சிலர் வாய்க்கு ருசியாக வக்கணையாய் சாப்பிடலாம் என்று நின்றவர்கள் வாய்க்கரிசி மெல்லும் நிலைக்கானதாக வருத்தப்படுவோர் பலர். நடுவில் நின்று நடப்பது யாவும் நன்றாக நடக்கட்டும் என்று நகைகொள்வோரும் உளர். கோரினோம். 1000 ரூபா வாங்கித்தருவோம் என்று கூறினோம். கிடைத்ததைக் கொண்டு ஆறுதல் கொள்வதே தவிர வேறு வழியில்லை. மனம் மாறினோம் என்ற ரீதியில் இன்று கைக்கெட்டச் செய்திருப்பது 750 ரூபா சம்பளம்.
700 ரூபா அடிப்படைச்சம்பளம். தேயிலை விலைக் கொடுப்பனவு 50 ரூபா. மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவு 40 ரூபா. இனி EPF, ETF நிதியத்துக்காக 105 ரூபா வழங்க இணக்கம். ஒப்பந்தம் காலதாமதத்துக்குமான 3 மாத நிலுவைப் பணம் வழங்க உடன்பாடு. ஆக, தினமொன்றுக்கு 750 ரூபா உறுதி. இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் நாளொன்றுக்கான நிர்ணயம் 730 ரூபா. அப்படியென்றால் தற்போதைய புதிய ஒப்பந்தத்துக்கூடான தினசரி அதிகரிப்பு 20 ரூபாதானா என்று வினாக்கள் எழுப்பப்படுகின்றன.
வடிவேலுவின் காமெடி ஒரு படத்தில் இப்படி இருக்கும்: 'இருந்தாலும் அவனுங்க ரொம்ப நல்ல மனுஷனுங்க. வலிக்குதா வலிக்குதான்னு கேட்டு கேட்டுத்தான் அடிச்சானுங்க' என்றிருக்கும். புதிய கூட்டு ஒப்பந்தம் பற்றிக் கேட்டபோது நண்பரொருவர் இதைத்தான் ஞாபகப்படுத்தினார். பெருந்தோட்ட மக்கள் 700 ரூபா சம்பள ஏற்பாட்டை ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறாா்கள். 1000 ரூபா ஆசையை வளர்த்துவிட்டு இப்பொழுது அம்போவென்று ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கம். தோட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம். வீதிகள் தோறும் பேரணி. கடுமையான தொனியில் கண்டனம். வேட்கையுடனான விமர்சனம். ஏன் இந்த ஏமாற்றம்? மக்களுக்குப் புரிவதாய் இல்லை. போராட்டங்களில் சகல தொழிற்சங்க உறுப்பினர்களும் பங்கேற்று தமது வெறுப்பைக் காட்டினார்கள். சில இடங்களில் இ.தொ.கா. உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மட்டும் புறக்கணித்தார்கள்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்ட மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தனைக்கும் இந்த கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் இடம் பெற்றிருப்பதை இது கண்டிக்கின்றது. தவிர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தச் சம்பளப் பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சாடி இருக்கின்றார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தற்போது 700 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகையை அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு இ.தொ.கா தலைமைப் பணிமனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவித்தார். எம்மால் முடிந்ததைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இதைவிட அதிகமாக வங்கித்தர எவருக்காவது முடியுமானால் எல்லா உதவிகளையும் வழங்க தாம் தயாராயிருப்பதாக அவர் கூறினார். 1000 ரூபா கிடைக்கா விட்டால் தான் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கூறிவந்த அவர், தற்போது 20 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணங்கியதை நியாயப்படுத்த முனைவதாக புத்திஜீவிகள் கவலைத் தெரிவிக்கின்றார்கள்.
தவிர கூட்டு ஒப்பந்ததை கேள்விக்குட்படுத்திட யாருக்குமே முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்புகள் விரும்பினால் மட்டுமே அதனை ரத்துச்செய்ய இயலும். இந்தக் கூட்டு ஒப்பந்தம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றுக்கமைய உருவானது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்புகள் இதனை கம்பனிகளுக்குச் சாதகமான வகையில் சரத்துக்களைப் புகுத்தி கையாண்டு வருவதாக நெடுங்காலமாகவே குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றன. அமைச்சர் பழனி திகாம்பரம் கூறுவது போல் நீதிமன்றமே தலையிட முடியாதபடி இறுக்கமான விதிகள் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். இந்த ஒப்பந்தமானது தோட்ட மக்களை அடிமை சாசன குடிகளாக எடைபோடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகத்துடன் ஆரம்பமான சம்பளப் போரட்டம் இன்னும் ஒயவில்லை என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றார்கள்.
எனவே தான் இந்த ஒப்பந்தம் குறித்து பலரும் அதிருப்தியடைந்துள்ளளார்கள். இதை உறுதிப்படுத்துவது போலவே செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே காணப்படுகின்றது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை முன்வைத்தது மலையக தொழிற் சங்கங்கள்தான். அதை அடைவதே எமது இலட்சியம் என்று அவர்கள் எழுப்பிய உறுதிமொழிகள் இறுதிவரை தொடரும் என்பது தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் முடிவில் நடந்ததோ வேறு. 500 ரூபா அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக உயர்வு என்று விளக்கம் தரப்படுகின்றது. மேலோட்டமாக பார்த்தால் 200 ரூபா தினமொன்றுக்கு அதிகரிப்புப் போலவே தோன்றும். 500 ரூபா அடிப்படைச் சம்பளம் அமைந்தபோது தினசரி கிடைத்த வேதனம் 730 ரூபா. ஆனால் 700 ரூபா அடிப்படைச் சம்பளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி சம்பளம் 750 ரூபா எப்படி ஆகும்? இதுதான் ஒப்பந்த சூட்சுமம். 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவு 140 ரூபாவும் வருகைக்கான கொடுப்பவு 60 ரூபாவும் சாதுரியமாக கத்தரிக்கப்பட்டுவிட்டது.
சமூகப் பார்வை இல்லாத எதுவுமே சாதகமான விளைவுகளை உற்பவிக்கப் போவதில்லை. கூட்டு ஒப்பந்தம் எப்போதோ அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. தாம் வழங்கும் சந்தாப்பணம் சிலரின் சொகுசு வாழ்கைக்கு கரம் கொடுக்க தாம் சதா மனப்பாரத்தோடும் தாளா துயரத்தோடும் அல்லாடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டு ஒப்பந்தம் செய்யும் உரிமையை விட பலமான ஆயதம் தம்மிடம் இருக்கின்றது என்ற புரிதல் மலையகம் எங்கும் பரவலாக பற்றி வருகின்றது.
மலையத்துக்கு அரசியல் வேண்டும். அது மனித நேயமிக்க அரசியலாக அமைய வேண்டும். அரசியல் பாதையின் இலக்கு மக்களை பணயம் வைக்கும் பம்மாத்தாக இருக்க முடியாது. அந்த வகையில் கூட்டு ஒப்பந்த முறைமை சந்தர்ப்பவாத அரசியலுக்கும் தனி மனித அபிலாஷைகளுக்கும் உதவவும் கூடாது அப்பாவி பெருந்தோட்ட மக்களை மேலும் மேலும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட வும். சிந்திப்போம்.

Thursday, January 31, 2019

பெருந்தோட்டக் காணிகளை அரசு கையேற்க நடவடிக்கை


கூட்டுக் கமிட்டியை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்ததன் அவசரம் என்ன?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி, உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாத நிலையில், அதனை ஒதுக்கிவிட்டு அவசர அவசரமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை மிகத் தவறானதென மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கை நகல் வரைவில் குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கைச்சாத்திட வருகை தராதபோது, அதுபற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஏனைய இரண்டு சங்கங்களும் கைச்சாத்திட் டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தக் கமிட்டி முன்வருமாக இருந்தால், பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா தினகரனுக்குத் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மீண்டும் 140 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவைக் கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படுமாக இருந்தால், அது மீளவும் சம்பள விவகாரத்தை மலினப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 140 ரூபாகொடுப்பனவையேனும் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் இராமநாதனையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. எவ்வாறெனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 140 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அதனை மீண்டும் பெற்றுக் கொடுத்துவிட்டதாக எவரும் திருப்தியடைய முடியாது. அதனைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அதுவே ஒரு தீர்வாக அமையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட தம்பையா, சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதற்கு வெளிப்படையாக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தெளிவான முடிவுடன் செல்ல வேண்டும் என்றும் இதுபற்றித் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தம்பையா மேலும் கூறினார்.

Wednesday, January 16, 2019

1,000 ரூபாய் கோரிக்கை நியாயமானதே

பெருந்தொட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதெனத் தெரிவித்துள்ள மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரத்ன, சம்பந்தப்பட்டத் தரப்புகள், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுத்து, வீழ்ந்திருக்கும் பெருந்தோட்டத் துறையை உயர்த்துவதற்கு முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.  
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரித்துத் தருமாறு, ​பெருந்தோட்ட நிறுவனங்களிடம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதென, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரனவை தெரிவித்தார்.  
​மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைத்திரி குணரத்னத்தை வரவேற்கும் நிகழ்வு, ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் நேற்று (13) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  
இலங்கையிலிருந்து டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையானது, அந்நாட்டில் கலப்படம் செய்யப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு அதிக விலையுடன் ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.  
200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து, பாதிப்படைந்துள்ள தேயிலைத் துறையை முன்னேற்றுவதற்கு, மலையகப் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.  
அத்துடன் ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்ட பதவியில், அரசியல் செய்யாமல், மக்களுக்காக தான் கடமையாற்றவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் குப்பைப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
Courtesy- Tamil Mirror 

முதுகெலும்பான மக்களை மறந்தநாடு !

மலையகதமிழ்மக்களின் சமூக பொருளாதார வாழ்வு தொடர்பாக இலங்கையில் எவ்வளவு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?
ஓன்றரை நூற்றாண்டுகள்; கடந்துவிட்டன . இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக இன்றுவரை மலையக தோட்டத்தொழிலாளர்கள்.
1948 இன் பின்னர் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
பிரஜா உரிமை பெறுவதற்கே அரை நூற்றாண்டுகளுக்கு மேல் போராடவேண்டி இருந்தது. சமூக பொருளாதார பாதுகாப்புநிலை என்ன? வீடு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், ஆரோக்கியம் என்பன எந்தளவில் மாற்றம் பெற்றிருக்கின்றன.? நிர்வாக இயந்திரம்-சட்டம் ஒழுங்கு நட்பார்ந்த முறையில் மலையக மக்களை அணுகுகின்றனவா?
அவர்களில் நலன்களுக்கான தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் தமது நிலத்தில் உறுதியாக கால் பதித்து எழுவதற்கு எவ்வளவு தூரம் பங்களித்திருக்கின்றன? வருடாவருடம் தமது அன்றாட வாழ்வை ஓட்டுவதற்காக அவர்கள் போராடவேண்டி இருக்கிறது.
இன்றைய நாட்களில் 1000 ரூபா சம்பளம் என்பது நியாயமானதும் அடிப்படையானதும். உள்ளக கட்டமைப்பு வாழ்வதற்கான நிபந்தனைகள் குறைவாக உள்ள அவர்களின் வாழ்வில் இது ஜீவாதாரமானது.


அரச ஊழியர்களுக்கு 40000 அடிப்படை ஊதியமாக  இருகக்வேண்டும்  என்று பிரதமர் ரணில் சிலவருடங்களுக்கு முன்பேசியதாக ஞாபகம். ஆனால் மலையக தமிழ்மக்கள் இந்த கணக்கு வழக்குகளில் எப்போதும் வருவதில்லை.
காலனி ஆதிக்ககால லயன் காம்பராக்கள் அதே அலங்கோலத்துடன் அப்படியே தொடர்கின்றன. தொழிலில் வாழ்க்கையில் அதேகெடுபிடிகள் தொடர்கின்றன. இலங்கையின் பிரதானஅரசியல்  மலையக மக்களை புறக்கணித்தே சிந்திக்கிறது.
அவர்களது நிலம்  வீடு கல்வி சுகாதாரம் சுற்றாடல் வேலைவாய்ப்பு ஊதியம் என்பன இரண்டாம் பட்சமானவை என்ற மனோபாவம் மேலோங்கி காணப்படுகிறது.
இலங்கையின் முதுகெலும்பான மக்கள் எந்தநம்பிக்கையையும் பெறாமல் இலங்கையின் சமூக பொருளாதாரமீட்சி என்பது வெற்றுவார்த்தை  ஜாலம் மாத்திரம் அல்ல. அதுவெறும் கனவு.

இலங்கை அரசியல் யாப்பு ஆளும் வர்க்க மனோபாவத்தில் மலையகமக்கள் இரண்டாம் பட்சமானவர்களாகவே காணப்படுகிறர்கள். முதலாளித்துவ  உற்பத்தி உறவு முறைகளின் அடிப்படையில் மாத்திரம் அல்ல.நிலமானிய சமூக மனோபாவமும் தோட்டத்தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்தவகையில் தலைமுறை தலைமுறையாக மலையகமக்கள் மத்தியிலிருந்து சில அதிர்வலைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இம்முறை சற்று வித்தியாசமாக தகவல் யுகத்தில் இளையதலைமுறை சுயாதீனமாக போராட முற்பட்டிருக்கிறது.
ஆனால் இலங்கையின் ஆளும் வர்க்க அதிகாரபோட்டியில் மலையகமக்களின் நியாயமான சம்பள உயர்வுகோரிக்கை மழுங்கடிக்கப்பட்டது. கண்ணியமான பாதுகாப்பான வாழ்வு மலையக மக்களுக்கு ஸ்தாபிக்கப்படவேண்டும்.
ஆனால் இலங்கையின் பாரம்பரியமான இனக்குரோத வகைப்பட்ட ஆதிக்கஅரசியல் மலையகமக்களை எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறது. துன்பங்களையும் சுமைகளையும் அனுபவிப்பதுஅவர்களின் தலைவிதி அவர்கள் அப்படியேதான் வாழவேண்டும் என்று கருதுகிறது. இங்குஉடைவுஅவசியப்படுகிறது. முதலில் இலங்கையின சக சமூகங்களுடன் அவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கான நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.காலங்காலமாக இலங்கையின் புறக்கணிக்கப்பட்ட வாழ்வு.
இலங்கையில் இனங்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளிலும் சரி. சமூக நீதிக்கான போராட்டங்களிலும் சரி  பொதுவான தொழிலாளர் உரிமை போராட்டங்களிலும் சரி மலையக மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இன வன்முறைகள் கலவரங்கள் சிறை வன்முறைகளில் மலையக இளைஞர்கள் சமூகம் படுமோசமாகபாதிக்கப்படடிருக்கிறார்கள்.இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.
வடக்கு கிழக்கின் இன சமூக உரிமைபோராட்டங்களில் பெருந்தொகையான மலையக   இளைஞர் யுவதிகள் தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
பல பத்தாண்டுகளாக இரண்டும் கெட்டான்களாக அலைக்கழிக்க்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம், ஸ்ரீமா- இந்திரா ஒப்பந்தங்களின் பேரில் அவர்கள் இரண்டு நாடுகளுக்குமிடையே அலைக்கழிக்கப்பட்டார்கள் நாடற்றவர்கள் என்ற ஒருபிரிவினர் இந்த நாட்டில் நீடித்து நிலவினர்
1948 இல் பிரஜாஉரிமைவாக்குரிமை பறிப்பு,
இன வன்முறைகளின்போது இலகுவாகவும் முதலாவதாகவும் இலக்குவைக்கப்படுவது,
மலையக மக்களுடன் பண்ணையார்தனமான அதிகார வர்க்க உறவுமுறை இலங்கையின பிரசைகளாக இருப்பதற்கான ஆவணங்கள் பற்றாக்குறையாக வழங்கப்படுவது . அல்லது அவற்றைபெற்றுக் கொள்வதில் நிலவும் இழுபறி. பெண்கள் குழந்தைகளின் அரோக்கியம்- தரமான கல்வியை-சுத்தமான பாதுகாப்பான சூழலை -நிலத்தை-வீட்டை பெற்றுக் கொள்வதற்கான உரிமை
பெண்கள,குழந்தைகள் சிறுவர்களுக்கான பாதுகாப்;பினை உறுதிப்படுத்துவது.
இலங்கையின் அனைத்து சமூகங்களுக்குமான குறைந்தபட்ச சமத்துவநிலை என்றுபார்த்தால் அவர்கள் வீடு-நிலம-; கல்வி-சுகாதாரம் தொடர்பில் குறைந்தபட்ச நிலையையே அனுபவிக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் அரசாங்க நெருக்கடி 50 நாட்கள் கடந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னான காலத்திலும் அடிப்படை உரிமைகள் மனிதஉரிமைகள் மீறப்பட்ட நிலையில் மலையக மக்களின் வாழ்வு இயல்பானதென்ற மரத்து போனநிலையே காணப்பட்டது

இலங்கையின் முன்னேற்றம் இலங்கையின் முதுகெலும்பான மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.தேயிலை தோட்டங்களில் மாய்பவர்களின் வாழ்நிலைபற்றிய பிரக்ஞை இல்லாத எந்த பொருளாதார அறிவும் இந்தநாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையலும்  உதவப்போவதில்லை. மலையகமக்களின் பாரம்பரிய வர்க்க சமூக இன அடையாளம் என்பனவே இலங்கையின் ஆளும் வர்க்கத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை இலங்கையின சமூகபொருளாதார அபிவிருத்தி என்பது வெறுங்கனவே.

கடந்த 30, 40 வருடங்களில் வடக்கு-கிழக்கில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்களே அந்தநாடுகளில் ஏற்ற இறக்கங்களுடன் வெற்றிகரமாக தமதுவாழ்வை அமைத்து கொள்ளக் கூடியதாக இருந்தது. தமதுவாழும் நாட்டிற்கானஆவணங்களை பெறமுடிந்திருக்கிறது.
தொழில் முனைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இடைவெளிகள் கிடைத்திருக்கின்றன. ஒரு 10 லட்சம் பேர் இவ்வாறு. ஆனால் இந்தநாட்டில் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் 10 லட்சம் மக்களின் வாழ்வு எவ்வாறிருக்கிறது. அவர்கள் இந்தநாட்டிற்காக உழைத்திருக்கிறார்கள்.

இந்தநாடு பண்பாட்டு கருவூலம் என்று வார்தைக்கு வார்த்தை பாசாங்குப் பெருமிதம் கொள்ளும் அரசியல்வாதிகள் இந்தமக்கள் பற்றிஎத்தகைய மனநிலையை கொண்டுள்ளார்கள் .
வெவ்வேறு இன மத சமூகங்களை சமூகநீதி மறுக்கப்பட்டவர்களை- வர்க்க ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களை நிலமானிய-முதலாளித்துவ மனோபாவம் - தளைகளில் இருந்து விடுவித்து தன்னம்பிகையும் சுதந்திரமுமான வாழ்வுக்கான இடைவெளி கிட்டினால்தான் இந்தநாடு முன்னேற்ற பாதையில் இருப்பதாக உணரமுடியும் கருதமுடியும்.
வருடாவருடம் மலையக தோட்டத்தொழிலாளர்கள் ஊதியஉயர்வுகோரி வீதியில் நிற்கும் அவலநிலை முதலில் நீங்க வேண்டும்.
இலங்கையின் எதிர்காலம் மலையக மக்களின் வாழ்வும் தாழ்வும் சார்ந்தது.

- திருநாவுக்கரசு ஸ்ரீதரன் (தோழர் சுகு)-

நன்றி- தேனீ