Friday, March 27, 2009

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகம் முன்னேற்றமடையும்

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.

அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்
.
பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு தமிழ்மொழிமூல பாடநெறிகளுடன் தொழிற்பயிற்சி

பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.

இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்
ருபெல்லாவின் தாக்கம் மலையகத்திலும் பரவாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்

ருபெல்லா தடுப்பூசியின் தாக்கம் மலையகப் பாடசாலைகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யவேண்டுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளையில் ருபெல்லா ஊசி ஏற்றப்பட்டதால் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மாணவியின் மரணம் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மாத்தறை பகுதி பாடசாலையொன்றில் ஏற்பட்ட மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அட்டன் பகுதியில் ஒரு மாணவியின் மரணத்திலும் ருபெல்லா தடுப்பூசி விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.

பெருந்தோட்டத் துறையைப் பொருத்தவரையிலும் மாணவர்களின் சேம நலன்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்கு போதிய ஓய்வும் இல்லை. நோய்களின் தாக்கங்களை உடனடியாகக் கண்டு கொள்ளும் அளவிற்கு அனுபவமும் இல்லை. இதற்கும் மேலதிகமாக வைத்திய வசதிகளும் எமக்கு பூரணமாக இல்லை. ஆகவே பாடசாலை நிர்வாகமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாதிரியான ஆபத்துகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.