Saturday, May 28, 2016

ஹட்டனில் மண்சரிவு- சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

ஹட்டனில் மண்சரிவு

ஹட்டன், சமலனகம பகுதியில் ஏற்பட்ட மன்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர்   இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். மேலும் மண்சரிவு பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளின்  வெடிப்புகள் எற்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட சாமிமலையில்  இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கக்கலையில் மண்சரிவு

லிந்துலை, தங்கக்கலை தோட்டம் கிம்ரு மேற் பிரிவில் இன்று (28-05-2016) காலை ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மண்சரிவினால் 2 வீடுகளில் வசித்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த லயன் தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.


கினிகத்தேனை பிரதான வீதியில் வெடிப்புகள்

ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை   வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர். வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மஸ்கெலியாவில் மண்சரிவு - 200 பேர் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்  28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர். 

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

லிந்துலை மவுசல்ல தோட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர். 

இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ் இறங்கியுள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 

இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது. 


மரம் முறிந்து விழுந்தில் 07 வீடுகள் சேதம் 35 போ் இடம்பெயர்வு

தெல்தோட்டை நாரங்கன் தோட்டப் பகுதியில் இன்று விடியற்காலை 07.00 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா்.