புதிய அரசியலமைப்பில் இந்திய வம்சாவளி மக்கள் "தனித்துவமான இனமாக" ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் இதற்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். "தோட்டம்" என்ற சொல் கிராமமாக மாற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்கிழமை இ.தொ.கா. தூதுக் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இது தொடர்பாக மேலும் கூறுகையில் ,
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்கிழமை கொழும்பில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தோம். இச் சந்திப்பில் இ.தொ.கா. செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக எமது தரப்பு யோசனைகளை முன்வைத்தோம். அதாவது இலங்கையில் பல தசாப்தங்களாக வாழும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயிர் கொடுத்த இந்திய வம்சாவளி மக்கள் தனித்துவமான இனமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதனை புதிய சட்டமாக உள்ளீர்க்கப்பட வேண்டும். இதற்காக இந்திய அரசாங்கம் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்டுகோளை முன்வைத்தோம்.
அத்தோடு "தோட்டம்" என்ற சொல் மாற்றப்பட்டு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்" என அழைக்கப்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்தியா ஆதரவை வழங்க வேண்டும் என்ற விடயத்தையும் முன்வைத்தோம்.
தற்போது தேயிலை தொழில்துறை, இறப்பர் தொழில்துறை என்பன அழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மலையக மக்கள் தமது குடியிருப்புக்களை விட தயாராக இல்லை. இந்திய அரசின் உதவியும் எமது காலத்தில் உறுதியளிக்கப்பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்பிலும் இப் பேச்சுக்களின் போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இந்தியாவின் புலமைப்பரிசில்கள் திட்டத்தில் அதிகளவு இந்திய வம்சாவளி மக்களின் பிள்ளைகளுக்கே அவை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் எடுத்துரைத்தோம். இந்திய வம்சாவளி மக்கள் தனித்துவமான இனமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதோடு, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் உட்பட முக்கிய விடயங்களில் எமது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்வைத்து இதற்கு இந்தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்றர்.