Tuesday, June 28, 2016

தொழிலாளர்கள் அடக்கப்படுவதும் உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் முதலாளித்துவத்தின் சக்தி

முதலாளித்துவம் சக்திபெற்றிருப்பதன் காரணத்தினாலேயே உழைக்கும் வர்க்கத்தினர் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. நீதி நியாயம், சுகந்திரம் அவர்களுக்கு இல்லாது போகிறது என்று லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 52 நாடுகளைச் சேர்ந்த 121 பிரதிநிதிகள் கூடி தொழிலாளர்கள் இன்று சர்வதேச ரீதியில் அனுபவித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள இராமநாதன் மாநாடு பற்றி தெரிவக்கையில் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று சகல நாடுகளிலும் தொழிலாளர்கள் நீதி நியாயமின்றி அடக்குமுறை ஆட்சி அமைப்பின் கீழ் உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகின்றனர். இன்று இலங்கையின் சகல துறைகளிலும் குறிப்பாக தோட்டத் தொழில்துறையில் தொழிலாளர்கள் சமயா சமய ஊழியர்களாகவும் கொந்தராத்து முறை தொழிலாளர்களாகவும் வெளியார் உற்பத்தி முறைத் தொழிலாளர்களாகவும் தொழிற்சங்க உரிமைகளை இழந்து போதிய தொழில் வாய்ப்பில்லாமல் உரிய வேதனமின்றி நடத்தப்படுகின்றனர். இன்று உலகளாவிய ரீதியில் இவ்வாறான நிலைமையே மேலோங்கி வருகின்றது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலகளாவிய ரீதியில் முதலாளித்துவம் மிகவும் சக்திபெற்று தொழிலாளர் வர்க்கம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி இழுத்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

ஒரு காலத்தில் தொழிலாளர் வர்க்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்ந்த மேற்கத்திய நாடுகளிலும் கூட தற்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியில் பலமிழந்து தமது உரிமைகளையும் பறிகொடுத்து வருகின்றனர். தொழிலாளர்களுக்குச் சாதகமாக உள்ள சட்டங்கள் மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாற்றியமைத்து தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகளை அபகரிக்கும் நடவடிக்கைகளையே முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆசிய நாடுகளிலும் இந்நிலைமையே பரவியுள்ளது.

எனவே உலகளாவிய ரீதியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு முதலாளித்துவ ஆட்சி முறைமைக்கு எதிராக போராட தாயார்படுத்தப்பட வேண்டுமெனயும் இதன் மூலமே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் அதே சமயம் தாம் போராடி வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதெனவும் கூறிய அவர் நமது நாட்டுப் பெருந்தோட்டத் தொழிலாளர் விடயத்தில் இது பொருத்தமானதெனவும் குறிப்பிட்டார்.

அரசியல், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்களாக மலையக தலைமைகள்

அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவமில்லாதவர்களாக மலையக தலைமைகள் இருந்து வருவதால் மலையக மக்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவம் மலையக அரசியலின் சமகால போக்குகக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில் தனிமனிதன் சமூகம் என்ற வகையில் உரிமைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.  ஓவ்வொருவரும் தத்தமது உரிமைகளை எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக அனுபவிக்கும் நிலைமை காணப்படுதல் வேண்டும். மலையக சமூகத்தை பொறுத்தவரையில் இவர்கள் பல்வேறு உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அடிப்படை உரிமைகள் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையில் இச் சமூகம் பெரும் சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற உரிமைகளை உரியவாறு அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிட்டவில்லை. 

மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தமது சமூகம் சார்பாக எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மக்களை எவ்வாறு வழிநடாத்துகிறார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தகைமை இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இதனால் இம் மக்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் சம்பள விடயம் கூட கம்பனிகளின் இழுத்தடிப்பு நிலை இன்னும் தொடர்கின்றது. யானையையும், குதிரையையும் பெற்றுக்கொடுப்போம் என்று வாய் வீரம் பேசியவர்கள் இன்று மௌனித்துப் போயுள்ளார்கள்.

மலையக மக்களை தொடர்ந்தும் கடனாளியாக்கும் நடவடிக்கையிலேயே மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்கள். பெருந்தோட்டங்களினதும், அங்கு வாழும் மக்களினதும் அபிவிருத்தி கருதி பொதுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுதல் வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுத்தல் அவசியம் அரசியல்வாதிகளிடையே கருத்து ஒருமிப்பு கிடையாது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறிவருகின்றனர். 

தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக 07 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் 10 பேர்ச்சஸ் வழங்கப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கங்களுக்கு வாய்ப்பாக போய்விடுகின்றன. தனிவீட்டுத்திட்டம் இழுபறி நிலையில் உள்ளமைக்கு மலையக அரசியல்வாதிகளின் பிழையான அணுகுமுறைகளை காரணமாகும். மலையகத்தை மாற்றிக் காண்பிப்பதாக சிலர் மேடைகளில் பேசி வருகின்றனர். முதலில் இவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு எமது சமூக நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்

பெருந்தோட்டங்களை கம்பனிக்ள பொறுப்பேற்றபோது தோட்டங்கள் வளமுடன் காணப்பட்டன. ஆனால் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதனையே இலக்காக கொண்ட கம்பனிகள் மக்களின் பொருளதாரத்தினை சீர்குலைத்துள்ளனர். 

இப்போது தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிழையான செயலுக்கு யாரும் துணைபோகக்கூடாது. அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். தனது பொறுப்பில் இருந்தும் விலகிச் செல்ல முற்படக்கூடாது அத்தோடு காலாகாலமும் இன்னொருவரை குறை கூறிக்கொண்டு தமது பணியை உருப்படியாக செய்யாதிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகையோரை மக்கள் தூக்கியெறிவது நிச்சயமாகும் என்றார்.