Wednesday, May 27, 2009

ஆசிரியர்களில் தங்கியிருக்கும் சமூகத்தின் விடிவு

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், குருவிற்கு பின்னர்தான் தெய்வம் எனும் முதுமொழி யும் உண்டு. குருவை தெய்வமாக மதிக்க வேண்டும். தெய்வம் என்பது சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்த வேற்றுமையையும் பார்ப்பதில்லை. ஆசிரி யர்கள் மாணவர்களை எவ்வகையிலும் வேறுபாடு காட்டாது அனைத்து மாணவர்களையும் சமமாக மதித்து கற்பிக்க வேண்டும். பாடசாலைக் கல்வியைத் தொடங்கும் ஒவ்வொரு மாண வனும் குறைந்தது 05 முதல் 17 வருடங்கள் ஆசிரியர்களின் கண்காணிப்பிலும் அவர்களின் வழி காட்டல், ஆலோசனையிலுமே வாழ்க்கை வட்டம் சுழல்கிறது.
இவ்வாறு தொடரும் மாணவர்களின் கற்றலானது எங்கேனும் இடைநிறுத்தப்படும்போது அம் மாணவனின் வாழ்க்கையே திசைமாறிப் போகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்கள் பலர் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள். ஆரம்ப வகுப்புக்களில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்தரம் வரையில் கல்வியைத் தொடர்வதில்லை. மலையகப் பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய போதுமான அறிவு இல்லையென்றே கூறவேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. ஆனால் இந்தச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மிகவும் சமூகப் பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் ஒருவித ஏக்கம் புரையோடியிருப்பதை அவதானிக்கலாம். அம்மாணவர்கள் கற்று எதிர்காலத்தில் நல்ல உத்தி யோகம் பார்க்க வேண்டுமென்ற நீண்ட கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் சூழுலும் வறுமையும் அவர்களின் சிந்தனைகளைச் சிதறடித்து விடுகின்றன.
வறுமை காரணமாக சில பெற்றோர் சிறுவயதிலேயே நகர்ப்புறப் பகுதிகளுக்கு வீட்டு வேலை களுக்கு அனுப்புகின்றனர். பிள்ளைகள் படித்து என்ன தோட்டத் துரை வேலையாக கிடைக்கப் போகிறதென கேள்வியெழுப்பும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஒரு சமூகத்தில் வறுமை தலைவிரித்து ஆடும்போது அவர்களால் படிக்கவோ,சிந்திக்கவோ நல்ல செயற்பாடுகளில் விரும்பிச் செயற்படவோ முடியாது என்பதை பலர் உணரத் தவறிவிடுகின்றனர். பாடசாலையில் பலதரப்பட்ட திறமை களையுடைய மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்கண்டு அதற்கேற்றவாறு ஆசிரியர் கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தாம் படும் கஷ்டங்கள் தமது பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என எண்ணும் பெற்றோர் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக வெயில், மழை, குளிர் எதனையும் பாராது கடுமையாக உழைக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை வாழ்க்கையில் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும் பொருட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பெற்றோரின் பங்களிப்புடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் தொட்டு உயர்தரம் வரையிலான அனைத்து பரீட்சைகளுக்கும் அவர்களை சிறப்பான முறை யில் தயார்ப்படுத்துவதில் ஆசிரியர் வகிக்கும் பங்கு அளப்பரியதாகும். மாணவர்களை பரீட்சை க்குத் தயார்ப்படுத்தி அவர்களை சிறப்பான முறையில் சித்தியடையச் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆசிரியனதும் கடமையுமாகும். கல்வியில் சிறந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரும் மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியரை என்றும் மறந்து விடக்கூடாது. மலையகத்தில் அறிவொளிகளாக வாழ்ந்தவர்களை இனங்கண்டு அவர்களை மாணவர்கள் கௌரவிக்க வேண்டும்.
காலத்திற்கு காலம் பாடத்திட்டங்கள் மாறலாம்.அவ்வாறான சூழ்நிலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மொழி போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய சிரத்தை எடுத்து கற்பிக்க வேண்டும். எமது சமூகம், எமது மாணவர்கள், இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு கல்வி மட்டுமே ஒரு முலதனமாகும். எனவே ஆசிரியர்கள் இம்மூலதனத்தை சிறப்பான முறையில் இடவேண்டும்.
அதிபர்கள் ஆசிரியர்களை இனங்கண்டு அந்தந்த பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திறமையுள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்பார்வை செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் நடவடிக் கைகளை உறுதி செய்வதுடன் ஆசிரியர்களுக்கான பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்களிப்புச் செய்தவற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
அதிபர் என்ற முறையில் பாடரீதியான வளவாளர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் இணைத்துக் கொண்டு பாடசாலை நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும்.
ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி"
ஆசிரியர் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகும் அவர்களின் கையில்தான் ஒரு சமூகத்தின் விடிவும், வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கிறது. இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் தனது பணியை செவ்வனே செய்ய வேண்டியது அவசியமாகும்.
சிவமணம்
நன்றி- தினகரன்

Tuesday, May 26, 2009

அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை

அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொள் வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதி யானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த போதும் தற்போது முறையாகப் பராமரிக்கப் படாமல் சீரழிந்த நிலையில் அவை தற்போது காடுகளாகியுள்ளன. இத் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப் படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நாடவேண்டியுள்ளது.
இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங் களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகா ப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற் கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்த முடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.
ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள் தொழிலாளர்களுக்கு நன்மையும் இல்லை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்களும் போராட்டங்களும் இடம்பெற்ற போதும் முடிவில் அவை புஸ்வானமாகிவிட்டன. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விடுவதால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காதது வருத்தத்துக்குரியது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் பி.பி.கந்தையா தோட்ட கமிட்டி தலைவர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய அமரர் எஸ்.நடேசன் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலத்திலேயே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நன்மையையும் தீமையையும் கொண்டது.எனினும், அடிமைச்சாசனம்,தீங்கிழைக்கும் மரணசாசனம் என்றெல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாற்றீடான சரியான முடிவினை அவை முன்வைக்காதது விசனத்துக்குரியது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன. மேலும் வாழ்க்கைச் செலவுப்புள்ளி உயர்வுக் கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கு வழங்குவது அவசியம் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுடன் தொடருகின்றன.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களினது விலையும் அதிகரித்துள்ளன. தற்போது கிடைக்கும் ஊதியம் எந்த வகையிலும் போதுமானதல்ல.எனவேதான் வாழ்க்கைச் செலவுப் புள்ளியோடு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை எமது சங்கம் வலியுறுத்துகின்றது என்றார்.

Monday, May 25, 2009

நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுஅச்சத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தின் வௌ;வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புசல்லாவ, டெல்டாபுர, கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடமொன்று மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் இக்கட்டடத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நுவரெலியா, யுனிக்விவ் கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியொன்றின் சமையலறைப் பகுதி நேற்று திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. இருப்பினும் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. கொத்மலையின் சில பிரதேசங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா - கண்டி வீதியிலுள்ள டொப்பஸ் என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்று நேற்று சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்குத் திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருவதால் தான் இவ்வாறு அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதனால் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மழைக் காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
அரசினால் பொறுப்பேற்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்கள் மாற்றம்

பதுளை மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்றுள்ள 12 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்களும் தொழிலாளர் நன்மை கருதி அவர்களுக்கேற்ப மாற்றப்படுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற வைத்தியசாலைகள் நவீன மயப்படுத்துப்படுவதுடன் மேலும் ஐந்து பெருந் தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் - சென்னன்

கூட்டு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவர் ரி.வி. சென்னன் பதுளை காரியாலயத்தில் தமது தொழிற்சங்க முக்கியஸ்தர்களுடன் பேசும் போது தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பனவாக அமைய வேண்டும். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர்களை பாதித்துள்ள போதிலும் ஒப்பந்தத் துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றன. இவை இரகசியமாகவே நடை பெற்றுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் பூரணமாகவே மறைக்கப்பட்டுள்ளன. இச் செயற் பாடுகள் எமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியி ருக்கின்றது. பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். தொழிலாளர்களின் சம்பளத்தில் பகுதி பகுதியாக உயர்வினை ஏற்படுத்தாமல் 300 ரூபா என்ற அடிப்படையிலாயினும் அடிப்படைச் சம்பள உயர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். அச்சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கமைய பகுதி பகுதியாக சம்பள உயர்வு இடம்பெறல் வேண்டும்.
ஊவா மாகாணசபை 28 இல் கலைக்கப்படலாம்?

ஊவா மாகாணசபை எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சபையின் ஆயுட்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும் அதற்கு முன்பு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே எதிர்வரும் 28 ஆம் திகதி இச்சபை கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இம் மாகாணசபையுடன் தென் மாகாணசபையும் கலைக்கப்படவுள்ளது.
மஸ்கெலியா சாமிமலை வீதியில் மண்சரிவு அபாயம்

மஸ்கெலியா நகரில் சாமிமலை வீதியில் மேற்குப் புறமாக வீட்டு மனைகள் அமைப்பதற்காக பாரிய மண் திட்டுகள் டோசர்கள் மூலம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சிலவற்றில் பாரியளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அம்பேகமுவ பிரதேச சபை முதல்வர் இவற்றை நேரில் பார்வையிட்டதையடுத்து அங்குள்ள மக்களை வேறு இடங்களில் தங்குமாறு பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
டிஸ் ரி.வி. அன்ரனாக்களை அகற்ற உத்தரவு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ் ரி.வி.அன்ரனாக்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இவற்றை அகற்றி வருவதாக தோட்டப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாமிமலை, கவரவில, நோர்வூட், பொகவந்தலாவை, டிக்கோயா, புளியாவத்தை போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வருகின்ற பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக இவற்றை அகற்றுமாறு அறிவித்துள்ளனர். தமது பொழுது போக்குக்காகப் பெறப்பட்ட இந்த அன்ரனா மூலமாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்ததாகவும் தற்போது இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மலையக அரசியல் தலைமைகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெறுமதியான மரங்களை வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை

அக்கரபத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின் அப்புத்தளை கிளனனோர் தோட்டத்தில் பெறுமதிமிக்க தேப்பந்தைன் மற்றும் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதை உடன் நிறுத்துமாறு தோட்டத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இத் தோட்டங்களில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தேப்பந்தைன் மரங்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து வெட்டப்பட்ட விபரத்தை நிருவாகமே கூறியதாக தோட்ட கமிட்டித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பணம் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் அபிவிருத்திக்கும் தோட்ட மக்களின் நலம் சார்ந்த பொது வேலைத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென முறையிடும் தொழிற் சங்கங்கள் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதனால் அதனைச் சூழவுள்ள பெறுமதியான தேயிலைச் செடிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தோட்ட கம்பனிக்கும் பொலிஸ் அதிகாரி,மாவட்ட செயலகத்துக்கும் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தப்படி மரம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 21, 2009

துவேஷத்தை வளர்க்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.ஏ. இராமையா

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகக் கூற முடியாது. அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு ஏதுவான அரசியல் தீர்வு முன்வைக்கப்படா விட்டால் புதிய முரண்பாடுகள் தோன்றும்.
அதேவேளை தமிழ் மானசீகமான முறையில் வேதனை கொள்ளத்தக்க வகையில் சில பேரினவாத சக்திகள் துவேஷத்தைக் கக்கி வருவது மேலும் பிரச்சினைகள் தோன்ற வழிவகுக்கும். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக சில வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தமிழ் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடனும் சௌஜன்யத்துடனும் வாழக்கூடிய வகையில் செயற்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது பழைய சோற்றை மீண்டும் கொடுப்பதைப் போல அல்லாது, சகல தரப்பினரோடும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தோடும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு சகத்துவமும் கௌரவமும் அளிக்கும் வகையில் அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும்
இவ்வாறு செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மலையக பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் பெருந்தோட்ட பகுதி வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.
தமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற்கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும:புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெரியாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் எந்த முகவர் நிலையம் மூலம் செல்கின்றனர். அது பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து பரிசீலித்து பார்க்கவும் எவரும் முன்வருவதில்லை.
ஒரு சில பெண்கள் தமது குழந்தைகளை வேறு ஒருவரின் பராமரிப்பில் விட்டுச் செல்லும் நிலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலை உள்ளது. எனினும் அவர்கள் செல்லுமிடத்தில் நிம்மதியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே. ஆகவே இது தொடர்பில் அக்கறையுள்ள சிவில் மற்றும் பெண்கள் தொடர்பான இயக்கங்கள் இவர்களின் நிலை தொடர்பில் ஆராய பெருந்தோட்டப் பகுதிகளில் அமைப்பொன்றை நிறுவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைப்பார்களாயின் ஒரு சமூகத்தின் வாழ்வியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்க தீர்வு காண்பதாக அமையும்.
- சூரியகாந்தி-
வறுமை காரணமாக வெளிநாடு செல்லும் பெருந்தோட்ட பெண்கள்

தோட்டப்பகுதிகளில் தொடர்ச்சியான வேலை நாட்கள் குறைப்பு, மற்றும் வேலைக்கேற்ற ஊதியமின்மை, சம்பள உயர்வு அதிகரிக்கப்படாமை, வறுமை என்பவற்றினால் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்லும் பெருந்தோட்டப் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இலங்கையின் வறுமை விகிதம் மலையகப் பகுதிகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும், அதுவும் நுவரெலியா மாவட்டத்தில் 32 வீதமாக வறுமை உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊவா மாகாணத்தில் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் தொகை அதிகரிப்பதன் மூலம் அங்கு தோட்டப் பகுதிகளில் வறுமை நிலை அதிகம் என்பதே காரணமெனத்; தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேயிலை உற்பத்தி தொழில்துறையும் பாதிப்புக்குள்ளாகலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இரகசியமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்டு வெளி இடங்களில் கடமையாற்றி வரும் தொழிலாளர்களையே வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தோட்ட நிர்வாகங்களும் உடந்தையாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தோட்டங்களில் நிரந்தரமாக வசிப்பவர்களின் தொழிலாளர் குடும்பங்களில் இருந்து ஒருவராவது அத் தோட்டத்தில் கடமையாற்ற வேண்டுமென்று தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக வலியுறுத்தி வந்தாலும் தற்போதைய வேலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்வது குறித்து தோட்ட நிர்வாகமும், தோட்ட கம்பனிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தோட்டத்தில் கிடைக்கும் ஊதியம் தங்களுக்கு போதாதென்றும் குடும்ப சீவியத்தை கொண்டு நடாத்த முடியாதென்று சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை அவிசாவளை பம்பேகம் தோட்டத்தைச் சேர்ந்த டிகோவப்பிரிவில் வெளியிடங்களில் வேலை செய்தவர்களின் குடியிருப்புக் கூரைகளை தோட்ட நிர்வாகம் பலவந்தமாக அகற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை யடுத்து பின்னர் அவை மறுபடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தோட்டப் பகுதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களை சூழ்ந்துள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் மரணம்

மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை ஏற்பட்ட மண் சரிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் மண்ணினுள் புதையுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் தொடர்ந்து கடும் மழை பெய்ததையடுத்து வீட்டுக்கு மேல் பகுதியில் உள்ள மண்திட்டி திடீரென வீட்டின் மீது சரிந்து விழுந்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண் சரிவினால் அந்த வீடு முற்றாகவே மண்ணினுள் புதையுண்டதால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அதில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் மழை பெய்து கொண்டிருக்கையில் பலத்த சிரமத்தின் மத்தியில் பொதுமக்களும் பொலிஸாரும் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் சடலங்களை மீட்டெடுத்தனர்.

Tuesday, May 19, 2009

கல்வித்துறை வளர்ச்சியில் தங்கியுள்ள மலையக சமூகத்தின் விடிவு

மலையகச் சமூகத்திலிருந்து ஒட்டு மொத்தமாக இதுவரைக்கும் இலங்கையில் காணப்படுகின்ற பல தொழில் துறைகளுக்கும் இம்மக்கள் பூரணமாக உள்வாங்கப்படவில்லை எனலாம். அரசாங்க ஊழியர்களாக ஆசிரிய தொழிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையானோர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு தொழில் துறைகளுக்கும், தொழில் சார்ந்தவர்களை உருவாக்க முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பாடசாலைகளில் உள்ள வளப்பற்றாக்குறை, உயர்கல்வி வசதியின்மை, பாட ஆசிரியர் பற்றாக்குறை மனிதவள, பௌதீகவளப் பற்றாக்குறை, மற்றும் சிறந்த முகாமைத்துவம் இன்மை, மாணவர்களின் வறுமை, போன்ற பல்வேறு விடயங்களை முன்வைக்கலாம்.
கடந்தகால வரலாற்றுத் தவறுகளையும், பிழைகளையும் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இனிவரும் தசாப்தங்களில் மலையகச் சமூகத்தின் இடப் பெயர்வுக்கு கல்வியே ஒரு மூல காரணியாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். எந்த ஒரு சமூகமும் தமது இருப்பை உயர்த்திக் கொள்வதற்கு கல்வியை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது யார் பயன்படுத்துவது? எப்படி பயன்படுத்துவது போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. சிலர் மேல் பழியைப் போட்டுவிட்டு சிலர் தப்பித்துக் கொள்ளவும் கூடாது.
கல்வியை ஒரு சமூகத்திற்கு வழங்குவது யாருடைய பொறுப்பு. ஏன் ஒரு சமூகத்திற்கு கல்வி அவசியம். எவ்வாறான கல்வியை வழங்க வேண்டும் என பல கேள்விகள் எழுகின்றன.
இந்நிலையில் பூனைக்கு மணிகட்டுவது யார்? என பாத்துக் கொண்டிருப்பதற்கான காலம் இதுவல்ல. யார் யார் இத்துறைக்கு பொறுப்பாக இருக்கின்றார்களோ அவர்களூடாக எதிர்வரும் தசாப்தங்களுக்கு ஏற்றவாறு தூரநோக்கோடு செயற்பட வேண்டியது பலரின் கடமையும், சமூக பொறுப்புமாகும்.
இச்சமூக பொறுப்பை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்கள், பெற்றோர்கள், மலையகச் சமூகத்தால் கல்வியை முன்னேற்றக் கூடிய துறைசார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலமாகும்.
மலையகச் சமூகத்தின் விடிவு கல்வித்துறையின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. எனவே இந்த வளர்ச்சியின் முழுப்பங்கையும் கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள் முதலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முழு அக்கறைக் கொண்டு ஒரு தியாகச் சிந்தனையோடும், இலட்சிய வெறியோடும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பல பாடசாலைகள் இன்று ஒரு மாணவனைக் கூட சித்தியடையச் செய்வதற்கு தவறி விடுகின்றன. இவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பரீட்சை வினாத்தாள்கள் கடினம் எனக் கூறி இனியும் சமாளிக்க முடியாது.
எது எப்படி இருப்பினும் தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிப் பரீட்சைகளுக்கு தேசிய மட்டத்துடன் போட்டி போடக் கூடிய வகையில் மாணவர்களுக்கு புதிய விடயங்களை கொடுப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். இனிமேலும் சில விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்வது பெருந்தோட்ட ஆசிரிய சமூகத்தின் கடமையாகும். 2008ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சில பின்தங்கிய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகுப்பு மாணவர்களின் நன்மைகருதி கற்பிக்க வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பும் கடமையும் ஆகும். பல சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு கற்பித்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை சமூகம் உற்சாகப்படுத்த வேண்டும். இவர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும். இதன் போதே நல்ல ஆசிரியர்களை இனம் காண முடியும்.
மாணவர்கள் இல்லாவிட்டால் கல்வி அமைச்சு தொடக்கம் பாடசாலை சிற்றூழியர்கள் வரை வேலையற்ற ஒன்றாகிவிடும். எனவே பாடசாலை ஒன்று சிறப்பாக தொடர்ந்து இருக்க வேண்டுமானால் அங்கு உயிரோட்டமுள்ள விடயங்கள் நடைபெற வேண்டும். பாடசாலை என்பது ஒரு வைத்தியசாலையைப் போன்றது. அங்கு சில நோயுள்ளவர்கள் வேலைகளால் படிக்காத மெல்ல கற்கும், கற்புல செவிப்புல குறைபாடுடையவர்கள், ஊனமுற்றவர்கள், பின்தங்கிய சமூகச் சூழலில் உள்ளவர்கள் வறுமை நிலையிலுள்ள மாணவர்கள், போசாக்கற்ற மாணவர்கள், வீட்டுப் பிரச்சினைகள் உள்ள மாணவர்கள், போக்குவரத்து பிரச்சினைகள் (வீட்டில் சிறந்த வழிகாட்டல் இல்லாத மாணவர்கள், தாய் அல்லது தந்தை வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகள், உறவினர், விடுதிகளில் தங்கி படிக்கும் பிள்ளைகள், மனநிலை பாதிக்கப்பட்ட இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ள மாணவர்கள் கெட்ட பழக்கவழக்கங்கள் கெட்ட நண்பர்களும் உடைய மாணவர்கள், பாடசாலைக்கு சென்றும் படிக்க விரும்பாத மாணவர்கள் சில வசதியான குடும்பத்தில் வளரும் மாணவர்கள், ஆசிரியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் மாணவர்கள், சில ஆசிரியர்களை விரும்பாத மாணவர்கள், டியூசனில் மட்டும் படித்தால் போதும் என நினைக்கும் மாணவர்கள், அடிக்கடி பாடசாலைக்கு வராத மாணவர்கள், பெற்றோர்கள், அக்கறையில்லாத பல பெருந்தோட்ட மாணவர்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இருக்கின்றனர். எனவே இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு ஆசிரியர் கற்பிக்க முன்வரும் போதே பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது மட்டும் உண்மை.
எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பல வேலைத் திட்டங்களை இன்றைய பெருந்தோட்ட மாணவர்களில் சிலர் ஓரளவு வசதியாக இருக்கின்றார்கள் என்பது உண்மை. இவர்களுக்கு அறிவு வறுமையே காணப்படுகின்றது.
இம்மாணவர்களுக்கு கல்வியின் பயன், முக்கியத்துவம், எதிர்கால வேலைவாய்ப்புக்கள், உயர் கல்வி வாய்ப்புக்கள் சமூக இடப் பெயர்வுகள், ஏனைய சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு, எமது சமூகத்தின் பழிச் சொல்லில் இருந்து விடுபடுவதற்கு, உலக மயமாக்கலின் விளைவுகள் போட்டியான உலகத்தோடு வாழ்வதற்கு வாழ்க்கைத்தரம் சமூக அந்தஸ்து உயர்வதற்கு, எமது சமூகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் சகல துறைகளிலும் உருவாகுவதற்கு பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பாடசாலைகளில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி கருத்தரங்குகளும் செயலமர்வுகளும், மணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களும் இனிவரும் காலங்களில் மலையகம் தோறும் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி வளர்ச்சி என்பது நீண்டகால வேளாண்மையாகும். அறுவடை செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே மலையகத்தின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளுக்கு ஒரு கூட்டு முயற்சியே தேவைப்படுகின்றது.
எனவே மலையகத்தின் எதிர்காலம் இன்றைய காலத்தில் படிக்கின்ற மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இம்மாணவர்களின் பெறுபேற்று அடைவுகளை உயர்த்தக் கூடியவாறு, கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவரும் ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும். எமக்கு தேவை கல்வி என்ற வாசகத்திற்கு ஏற்ப நல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் பிரதி கல்வி அமைச்சர் மலையகச் சமூகத்தைச் சார்ந்தவர். அதே போல் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் மலையகச் சமூகத்தைச் சார்ந்தவர். எனவே இவர்கள் இருவரும் மலையகத்தின் எதிர்கால கல்வித் திட்டங்களை தூரநோக்கோடு கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு க.பொ.த. சாதாரன தரப் பெறுபேறு, உயர் தர பெறுபேறு, கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞான பிரிவுகளில் பல பாடசாலைகளில் வீழ்ச்சி போக்கை காட்டுகின்றன. (கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இந்த குறைபாட்டை சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து இதற்கான பரிகாரங்களைத் தேட வேண்டும். இன்றும் சில பிரபல பாடசாலைகளில் 140 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 100 மாணவர்கள் கணிதப் பாடத்தில் சித்தியடைய தவறி விட்டார்கள். இம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?
நன்றி-தினகரன்
பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத் தமிழ் பாடசாலை மாணவர்கள் க.பொ.த. சா.த மற்றும் உ.த பரீட்சை யில் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாணத் தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பூண்டுலோயா சீன் தமிழ்மகா வித்தியாலயத்திற்கு தேச நிர்மாண தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் தெரிவித்தார். மேலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலுள்ள சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வகுப்புகள் கொண்ட பாடசாலைகளுக்குப் போதுமான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இந்த வகுப்புகளின் கல்வி கற்கின்ற மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். சா.த இல் கல்வி கற்கின்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெறும் தொகை அதிகரிக்கப்படும் போதுதான் உயர்தரம் கற்கின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்ற மாணவர்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்படும் என்றார்
இனவாதத்தை தூண்டுவதை அனுமதிக்க கூடாது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மலையகத்தில் சிலர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட முனையும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கமும், பொலிசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென் மத்திய மாகாணசபை உறுப்பின் பிரகாஷ் கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 17-05-2009 அன்று தலவாக்கலை-லிந்துலை பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் எனது கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து இது பற்றி நுவரெலியா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசியல் இலாபத்திற்காக தொழிலாளர்களை பயன்படுத்த முயற்சி-அருள்சாமி

மலையக தொழிற்சங்கவாதிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தங்களின் அரசியல் இலாபத்திற்காக அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், கல்வி அமைச்சருமான அருள்சாமி தலவாக்கலை லிந்துலையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாக மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளை இன்றுவரை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
தொழிலாளர்களின் சம்பள விடயம் அரசியலாக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகிறது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை அரசியலாக்கி தமது தொழிற்சங்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு சில மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதை அவர்களுடைய செயல்பாட்டிலிருந்து காணக்கூடியதாகவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் ரி.வி. சென்னன் பசறை பணிமனையில் நடைபெற்ற சம்பள அதிகரிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் கூட்டொப்பந்தம் செய்யப்பட்டு அதற்கேற்ப சம்பளம் வழங்குகின்றமையால் தொழிலாளர்கள் சகல வழிகளிலும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த மாதம் கூட்டொப்பந்தம் முடிவுற்ற போதும் இதுவரையிலும் ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இம்முறை பிரித்து பிரித்து சம்பளம் வழங்கப்படாமல் அடிப்படைச் சம்பளமாகவே கூட்டொப்பந்தத்தின்போது தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் ஏகமனதான கோரிக்கையாக இருந்து வருகிறது. அதைவிட கூட்டொப்பந்தம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படவேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படுவதால் தொழிலாளர்கள் சகல வழிகளிலும் பாதிப்படைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த வருடம் செய்யப்பட்ட கூட்டொப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதா, அதற்கு மேலாக வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் தொழிலாளர்களுக்குக் கிடைத்த நன்மைகளை ஆராய்ந்த பின்னரே மறுபடியும் ஒப்பந்தம் செய்யப்படவேண்டும். ஒப்பந்தம் செய்யும் முன்னதாகத் தொழிலாளர்களிடத்திலிருந்து கருத்துக்களைப் பெற்று அதன் பின்னர் அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்பு ஒரு பொதுவான தொகையை முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் முன்வைக்கவேண்டும். இதன்மூலம் தொழிலாளர்களுடைய ஒற்றுமை தொழிற்சங்கங்களின் ஒற்றுமை கூட்டுக்கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஒரு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கும். தொழிற்சங்கத்திற்கும் பேரம் பேசும் சக்தியும் வலிமையும் அதிகரிக்கும்.

Sunday, May 17, 2009

தொழிலாளர் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வேண்டும்

பெருந்தோட்ட நிர்வாகத் துறையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு தோட்டத் துறையுடன் எதுவித தொடர்புமற்ற வெளியாரே நியமிக்கப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் படித்த இளைஞா யுவதிகள் நியமிக்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தலைமுறைக்கு மேலாக தொழிலாளர்களின் பிள்ளைகள் தோட்டத் தொழிலைத் தவிர வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத நிலையிருந்தது. தோட்டங்கள் ஆங்கிலேயர்களால் நிர்;வகிக்கப்பட்ட காலத்தில் கங்காணிமார் தொழிலாளர்களை வழிநடத்தினர். வெள்ளைக்கார துரைமாருக்கு உதவியாக தோட்ட அலுவலகங்களில் ஆங்கிலம் தெரிந்த தோட்டத் துறையுடன் தொடர்புடையவர்களும், வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்
1974ல் தோட்டங்கள் பெருந்தோட்டங்கள் அரசு மயமாக்கப்பட்டதன் பின்னர் தோட்டக் கைத்தொழில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியதுடன் பெரும் நட்டத்தில் இயங்கியதுடனட் நிர்வாகத்தினரோ பெருந்தோட்டங்களின் வளங்களை தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள். தோட்டங்கள் காடாகி கவனிப்பாரற்ற நிலையில் மூடப்பட்டன. வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்ட நிர்வாகங்களில் வெளியார் நியமிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தற்போதைய கல்வி வளர்ச்சியினால் பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் தொழிலைத் தவிர அரச நிர்வாகத்துறையில் இணைத்துக் கொள்வதற்கு மலையகத் தலைமைகள் அந்த தகைமையுள்ள இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுப்பதில்லை.
தோட்ட நிர்வாகங்களில் லிகிதர் பதவிக்காக விண்ணப்பித்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தேவையான தகுதிகள் இருந்த போதிலும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி வேலைவாய்ப்பு கிடைக்குமென பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. நேர்முகப் பரீட்சைக்கு குறிப்பிட்ட தினத்தில் சமுகமளிக்காத சில வெளியாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாரபட்சம் காட்டும் இவ்வாறான அதிகாரிகளை தோட்டக் கம்பனிகளோ, தொழிற்சங்கங்களோ கண்டுகொள்வதில்லை.
தோட்ட நிர்வாகத்தில் எதுவித அனுபவமுமற்ற வெளியாரை நியமிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களின் பிள்ளைகளான படித்த தகைமையுள்ள இளைஞர் யுவதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமென தொழிலாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவை முகாமைத்துவ கம்பனிகளிடமிருந்து தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

Saturday, May 16, 2009

சம்பளப் பிரச்சினை இழுபறிநிலையானால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கெதிராக செயற்படும் நிலை ஏற்படும் -சுரேஷ் வடிவேல்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு- முதலாளிமார் சம்மேளனம் என்ற தன்னிச்சையான முடிவாலுதட செயற்பாட்டினாலும் முழுமையான இணக்கப்பாடு காணப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று இரண்டு மாதங்களாகின்றன. சம்பள அதிகரிப்பு குறித்து எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை.தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமுன்னர் அதன் விபரங்களை தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைழுத்திட்டுபவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்களே.
உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலம் குறித்து மலையகத் தலைவர்கள் பேச வேண்டும்

உத்தேசிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலத்தினால் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள் குறித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற மலையகத் தலைமைகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலனுக்காகவே அரசுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறிக் கொள்கின்ற மலையகத் தலைமைகள் உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் போது சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய சாத்தியமே அதிகமாக உள்ளது இவ்வாறானதொரு நிலைமையினை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில் மத்திய மாகாணசபை யில் ஆதரவு திரட்டப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் அமுலுக்கு வரும் பட்சத்தில் மலையகத் தமிழ் மக்களே பெரிதும் பாதிப்படையவார்கள் என்பது நிச்சயமாகும்.

Thursday, May 14, 2009

உள்ளூராட்சி அதிகாரசபை சட்டமூலம் நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் மத்திய மாகாணசபையில் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. கடந்த 12-05-2009 அன்று கண்டி பள்ளேகல மாகாணசபை மண்டபத்தில் மத்திய மாகாணசபையின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஆளும் ஐ.ம.சு.மு. யுடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் மூவர் இணைந்து வாக்களித்தனர். சிங். பொன்னையா, எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோரே ஆதரித்து வாக்களித்தனர். இ.தொ.கா.வை சேர்ந்த மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சமூகமளிக்கவில்லை. ஐ.தே.க.வுடன் இணைந்து எஸ். இராஜரட்ணம், எஸ்.சதாசிவம், கணபதி கனகராஜ், எஸ். உதயகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.மர்ஜான் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் பிரதிகள் வாசிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபை சட்டதிருத்தத்தினை ஒத்திவைத்துள்ளதாலும் இவ்விவகாரத்தை நடத்தும் அவசியமில்லை எனவும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் போது இவ்விவாதத்தினை நடத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பீ. திஸாநாயக்க முதலில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதன் அவசர தேவைபற்றி 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு ஆளுநர் முறைப்படி சபையின் ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவித்துள்ளார். மே 5 ஆம் திகதி கூட்டத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் பிரதி வழங்கப்படவில்லை என்பதால் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை மட்டும் ஆராய்ந்து விவாதிக்கலாம். மத்திய அரசு திருத்தங்கள் மீண்டும் கொண்டுவரும் போது நாம் மீண்டும் கூடி விவாதிக்கலாம் என்றார்.
தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆசிரியர்கள்

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக சகல தோட்டப் பாடசாலைகளுக்கும் பௌதீக வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தோட்டப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் வீ.சாந்தகுமார் பன்விலை ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் மலையகத்தின் கல்வி நிலை தற்போது மாற்றம் பெற்று வருகிறது. மலையகத் தோட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைகளில் படித்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்றார். இந்த நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற தோட்டப்புற தமிழ் மக்கள் இனிமேல் பல துறைகளிலும் எழுச்சி பெற்று விளங்குவர்.
பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் மக்களுக்கு நன்மை

தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டிருக்கும் கூட்டுறவுச் சங்கக்கடைகள் அனைத்தையும் திறப்பதன் மூலம் 14,000; மக்கள் நன்மையடைவார்கள் என பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் பசறை ப.நோ.கூ. சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல கூட்டுறவுச்சங்கக் கடைகள் தோட்டப்பகுதிகளில் வெறுமனே மூடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டு பசளை குருப் தோட்ட கூட்டுறவுச்சங்கக் கடையே முதலாவதாக கூட்டுறவு அதிகார சபையிலும் கூட்டுறவு அமைச்சிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பின்னர் நகரம் மற்றும் கிராமப் புறங்களிலும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றது. 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசறை குருப் தோட்ட கூ. கடையும், அதேபோல் இன்னும் 50 க்கும் மேற்பட்ட கடைகள் தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள கடைகளின் அனைத்து விபரங்களையும் திரட்டி அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

Wednesday, May 6, 2009

நிம்மதியாகவும், சுயமாகவும் வாழும் வகையில் சம்பள அதிகரிக்கப்படும்

மலையக மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் வாழும் வகையில் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்துடனான சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதனது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாம் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட போது பலர் தனிப்பட்ட முறையில் பல போராட்டங்களை மேற்கொண்டனர். இதனால் ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபா மாதாந்தம் நட்டம் ஏற்பட்டது. அதனைத் தவிர மெதுவாக வேலை செய்யும் போராட்டமும் நடைபெற்றுள்ளது. இதனால் அக்காலத்தில் எவ்வித நன்மையையும் தொழிலாளர்கள் பெறவில்லை. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் பொறுமையாக ஒற்றுமையாக இருந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
காலவரையறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில், கூட்டு பேரத்தில் பங்குபற்றும் தரப்பினர் வீணான கால தாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தையை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென மத்தியமாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை மாதங்களைக் கடக்கும் நிலையில், பேச்சுவார்த்தையோடு சம்பந்தப்பட்ட தரப்பினர் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பள உயர்விற்கான ஒப்பந்தம் கால தாமதமானாலும் சம்பள உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இரண்டு, மூன்று மாதங்களுக்கான மிகுதித் தொகையை சேர்த்து வழங்குவதன்மூலம் கூடுதலான சம்பள உயர்வை பெற்றுவிட்டதாக தொழிலாளர்களை ஏமாற்றி சமாதானப்படுத்தியதை கடந்த கூட்டு ஒப்பந்தத்திலும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு நாள் சம்பளத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து வேலை நாள் விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதை முற்றாக கைவிட வேண்டும். இது முற்று முழுதான மோசடி முறையாகும்.

Tuesday, May 5, 2009

வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகள்

பெரும்பான்மை இனத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு செய்வதற்கு கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர ஒரு நாள் சம்பளத்தை வசூலிப்பது யுத்தத்தை ஆதரிக்கும் செயல் -பெ.சந்திரசேகரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை வசூலிக்க முயற்சிப்பது யுத்தத்துக்குத் துணை போவதாகவே அமையுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று கூறி மலையக தோட்டத் தொழிலாளர்களிடம் ஒரு நாள் சம்பளத்தினைச் சேகரித்து வழங்குமாறு சில தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களிடம் கேட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்கள் பலவும் தோட்டத் தொழிலாளர்களிடம் பொருட்களையும் பணத்தையும் சேகரிக்க எத்தனிப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. பாரிய ஏவுகணைத் தாக்குதல்களினாலும் விமான குண்டு வீச்சுகளினாலும் அப்பாவிப் பொதுமக்களுக்குப் பல விதமான இழப்புகள் ஏற்படுமென உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கண்டனங்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் பல இலட்சக்கணக்கானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களையும் வாழ்வையும் சொத்துகளையும் இழந்து அங்கவீனமடைந்த நிலையில் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீதுமனிதாபிமானத்தோடு அனுதாபம் காட்டுவதற்கும் எவரோவிட்ட தவறுக்காக நட்ட ஈட்டினைத் தோட்டத் தொழிலாளர்களை செலுத்த நிர்ப்பந்திப்பதற்கும் வேறுபாடுள்ளது என்பதனை மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடம் பணமும் பொருட்களும் சேகரிக்க எத்தனிப்பவர்கள் முதலில் இதனை மலையகத்துக்கு வெளியே நடைமுறைப்படுத்திக் காட்டுவார்களா? ஏன்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அக்கறை செலுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு உள பூர்வமாக செயற்படாமல் தோட்டத்தொழிலாளர்களிடம் மேலதிகமாக பணத்தினை பறிக்க நினைப்பது ஜீரணிக்கமுடியாத அவலமாகும் என்றார்.

Monday, May 4, 2009

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிர்வாகம் அதிகாரிகளுக்கு மட்டும் உயர்த்துகிறது –முத்துலிங்கம்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நஷ்டம் எனக்கூறி வழங்க மறுக்கும் நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளையும், ஏனைய சலுகைகளையும் மட்டும் உயர்த்துகிறதென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஏ.முத்துலிங்கம் பதுளையில் நடைபெற்ற பொதுக் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
ஆகக் குறைந்த நாட் சம்பளத்தில் தொழில் செய்யும் பெருந்தோட்ட மற்றும் சிறு தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்கும்போது தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பது முதலாளிகளின் வழமையான பதிலாக மாறிவிட்டது. தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சேமநல அபிவிருத்திகள், தோட்ட அபிவிருத்திகள் போன்றவைகளுக்கு எதையும் செய்வதில்லை. உற்பத்தி செய்கின்ற தேயிலைத்தூள், இறப்பர் போன்றவைகளை விற்பனை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதுடன் வெட்டியும் விற்கின்றனர்.
அடிமட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக் கோரிக்கைகளுக்கு மட்டும் நஷ்டம் எனக்கூறித் தட்டிக்கழிக்கின்ற நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளை பல்வேறு வழிகளில் உயர்த்தப்படுவதைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. தொழிலாளர்களின் இன்றைய அவசரக் கோரிக்கையான சம்பள உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கைகளில் தனித்தனியான கோஷங்கள் முன்வைப்பதை நிறுத்தி, தங்களது தனிப்பட்ட குரோதங்கள் அல்லது அரசியல் தொழிற்சங்கப் போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட கோரிக்கையை முன்வைக்க முன்வரவேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பொதுக்கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அத்துடன் தேயிலை, இறப்பர் கைத்தொழில் மூலம் எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி கணிசமான அளவு கிடைப்பதால் அரசும் கூடிய கவனம் செலுத்தி தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சகல மலையகத் தலைமைகளும் ஒன்றுபடவேண்டும் என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் -ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது ஆறுமுகன் தொண்டமான் பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த முறை சம்பள உயர்வின் போது உங்கள் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டினையும் இழந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் தனி போராட்டங்களை மேற்கொண்டீர்கள் இதனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தனி நபர் ஒவ்வொருவரும் தலா 3000 ரூபா வரை மாதாந்தம் இழந்தார்கள். இம் முறை அவ்வாறான போராட்டங்கள் எதனையும் செய்ய வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்கப்படும். இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அதேபோல் சம்பளமும் நியாயமான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்

Sunday, May 3, 2009

பெருந்தோட்டப் பகுதிகளில் நிரந்தர குடிநீர் விநியோக திட்டம் அவசியம்

பெருந்தோட்டப் பகுதிகளில் குடிநீரை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் அவற்றை அம்மக்கள் பயனடைவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதுவரை காலமும் குடிநீரை விநியோகிப்பதற்கான உறுதியானதும் நிரந்தரமானதுமான திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.
தோட்டங்களை நிர்வகித்து வந்த ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளரின் குடிநீர்;வசதி கருதி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததை யாரும் மறந்துவிட முடியாது. இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் இதனை முறையாகப் பேணிப் பாதுகாக்காததாலும் தோட்டங்கள் கைமாறிய பின்னர் பொறுப்பேற்றவர்களின் கவனயீனத்தாலுமே காலப் போக்கில் தொழிலாளருக்கான குடிநீர் விநியோகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தோட்ட அதிகாரி உதவி அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களுக்கான குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். யுனிசெப், சீடா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களினால் தொழிலாளரின் குடிநீர் வசதி கருதி பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவையும் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை. தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆறு, கிணறு, குளம், குட்டை, நீரோடை, நீரூற்று போன்ற இடங்களிலிருந்து தேவையான குடிநீரைப் பெற்று வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தினால் தோட்டங்களில் கிணறுகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அவை பொருத்தமான இடங்களில் கட்டப்படவில்லை. நீரின்றி கட்டப்பட்ட நாள் முதல் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
தொழிலாளர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களில் கூட குடிநீர் விநியோகத் திட்டமில்லை. வசதியுள்ள வாய்ப்புள்ள சிலர் தமது சொந்த முயற்சியினால் கிணறுகளை அமைத்துக் கொண்டுள்ளதுடன் நீரிறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெருந்தோட்ட நிதியத்தின் பணம் வீணாக விரயமாகிறதே தவிர தொழிலாளர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை.
கிராமப்புர மக்களின் குடிநீர் வசதி கருதி இன்று பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பலனடைந்து வருவதுடன் அதற்கான கட்டணமும் அவர்களிடமிருந்து அறவிடப்படுகிறது. இது போன்ற திட்டம் தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படுமாயின் தொழிலாளர் எதிர் நோக்கிவரும் குடிநீர்; பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாகவிருக்கும்.மலையக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மூன்று அமைச்சுக்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைச்சுக்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆகக் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல், சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுதாய அபிவிருத்தி, சமூகச் சீரழிவு ஒழிப்பு அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் தோட்டப் பகுதிகளில் நிரந்தரமானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். களுத்துறை மாவட்ட தோட்டப்பகுதிகள் கவனிப்பாரின்றி காணப்படுகிறது. அப்பகுதிகளில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாவட்டமே எல்லா வகையிலுமே பின்னடைந்த நிலையில் இருந்து வருகின்றது.
மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூற எந்தவொரு பிரதிநிதியும் முன்வராமல் இருப்பது வேதனை தரும் விடயமாகும். பிரச்சினைகளை எடுத்துக் கூறுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுக்கின்றனர். அவர்களைச் சந்திக்க தலைமைக் காரியாலயத்துக்குச் சென்றால் அங்கிருப்பவர்கள் தலைவர்மாரைச் சந்திக்க விடாது தடுத்து ‘நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ எனக் கூறி திருப்பியனுப்பி விடுவதாகத் தொழிலாளர் தெரிவிக்கின்றனர்.

Friday, May 1, 2009

தொழிலாளர்கள் எல்லா துறைகளிலும் முன்னேற இன்றைய நாளில் உறுதி பூணுவோம்- எம்.எஸ்.செல்லச்சாமி

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் நமது இந்திய வம்சாவளி பாட்டாளி தோட்டத் தொழிலாளர்கள் எல்லாத் துறைகளிலும் தொடர்ந்தும் முன்னேற்றம் காண இன்றைய உலகத் தொழிலாளர் வெற்றித் திருநாளில் உறுதி பூண வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போஷகரும், பிரதி தபால் அமைச்சருமான எம்.எஸ்.செல்லச்சாமி மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்து நமது அமைப்புகளை பலமுள்ளதாக மாற்றும் நோக்குடனும் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான போராட்டம். உறுதி எடுக்கும் புரட்சிகர நாளாகவும் உலகம் பூராவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் பொருளாதார உயர்ச்சிக்கு நமது தொழிலாளர்கள்; 200 ஆண்டுகளுக்கும் மேலாக வியர்வையைச் சிந்தி கடுமையாக உழைக்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்களின் வியர்வை உரமாக மாறியது.
நாட்டுக்கு நாளாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணியினைத் தேடிக்கொடுக்கும் நம் மக்கள் தேயிலைத் தோட்டங்களில் காலமெல்லாம் வியர்வை சிந்திப் பாடுபடுகின்றனர். அவர்கள் வாழ்வில் உயர்ச்சி பெற வேண்டும். தமது வாழ்வை முன்னேற்ற மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை உயர்ச்சி காணச் செய்ய நாமும் பெரிதும் பாடுபட்டு வருகிறோம். எமது சக்தியை மென்மேலும் நாம் அதிகரிக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் உயர்ச்சி விரைவாகவர வேண்டும்.
இன்றைய தினத்தை அரசியல் தலைவர்கள் சிலர் தமது அரசியல் வாழ்வை முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தி வருவது வேதனைக்குரியது. மே தினத்தின் மகத்துவத்தைப் புரியாத உணராத சக்திகள் கூட மேதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பது ஒரு வேடிக்கையான சூழல். இந்த வித்தியாசத்தைப் பாட்டாளி வர்க்கம் உணர்ந்து தமது ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை உண்மையாக மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தோட்ட உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் தொடர்கிறது

தோட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குமாறுகோரி கடந்த 29 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டமெங்கும் தமது போராட்டத்தை விஸ்தரிக்கத் தீர்;மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்தார். இதுவரை, தோட்ட உத்தியோகத்தர்களின் கடமைகளைத் தொழிலாளர்;களே மேற்கொண்டு வருகின்றனர் உத்தியோகத்தர்;களின் பணிப்புறக்கணிப்பால், தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய வேளையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.