தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அதிகார சபையொன்றை அமைத்து அதற்கு அதிக நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலையக மக்களின் பொருளாதார உயர்வு மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. அனுர குமார திஸாநாயக்க சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இலங்கை சுதந்திரமடைந்து 67 வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்னும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைத் தனமான லயன் அறைகளில் கூனிக் குறுகியே வாழ்கின்றனர்.
1,60,000 தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் அறைகளிலேயே அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.
தோட்டங்களிலிருந்து இளைஞர்கள், யுவதிகள் வெளியேறுகின்றனர். ஆனால் அவர்கள் கல்வித்துறை சார்ந்த தொழில்களை செய்யவில்லை. மாறாக வீட்டு வேலைகளுக்கும் ஹோட்டல்களில் மூட்டை தூக்கும் வேலைகளுக்குமே வருகின்றனர்.
இங்கு ஒரு புதிய சம்பிரதாயம் உள்ளது. கொழும்பிலுள்ளவர்களின் வீட்டு வேலைக்கு ஆள் தேவையென்றால் தோட்டத்திலிருந்து ஒரு பிள்ளையை கொண்டு வாருங்களேன் என்றே கேட்கின்றனர்.
இந்நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். கல்வித் துறையில் பின் தங்கியிருக்கும் மலையகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்போது பல விடயங்களை முன்வைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதில்லை.
நாங்கள் லயன் அறைகளை வழங்குகின்றோம். அதற்கு பதிலாக குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே கம்பனிகள் தொழில்களை வழங்குகின்றன.
நவீன அடிமைத் தனத்தின் அடையாளச் சின்னங்களாவே தோட்ட மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு லயன் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த நிலைமையிலேயே இன்றும் 160,000 தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
போஷாக்குக் குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது. குறைந்த குறைந்த எடையுடன் பிள்ளைகள் பிறக்கின்றனர்.
சௌமியமூர்த்தி தொண்டமான் மன்றத்திற்கு அரசாங்கம் நிதியை வழங்கியுள்ளது. 1800 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோப் குழுவுக்கு முன்வைத்து விசாரிக்கப்பட வேண்டும்.
கடந்த கால மலையகத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. உயர் பிரபுத்துவத் தலைவர்களாக செயற்பட்டவர்கள் மலையக மக்களின் வாழ்க்கையை உயர்த்தவில்லை.
தற்போது புதிய தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன செய்கின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர்களது நடவடிக்கை எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதாது. அத்தோடு இவர்கள் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள். அதற்காகவே உயிரை அர்ப்பணித்தவர்கள். அவர்களது சந்ததியினர் இலங்கையில் பிறந்தவர்கள்.
எனவே ஏன் நாம் அவர்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்த வேண்டும்.? அவ்வாறு அடையாளப்படுத்துவதை ஒழித்து அவர்களை இலங்கையர்களாக அடையாளப்படுத்த வேண்டும்.
அத்தோடு மலையக பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத்தை வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அமைச்சுக்களை ஏற்படுத்துவதால் முடியாது என்பதை அடையாளம் கண்டுள்ளோம்.
எனவே விசேட அதிகார சபையொன்றை ஏற்படுத்தி திறைசேரி ஊடாக அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
தோட்டங்களில் மக்களுக்கு பாமஸிஸ்ட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இது நியாயமா? அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் கௌரவம் உள்ளது. எனவே அவர்களது கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கம்பனிகளுக்கு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.