Wednesday, April 27, 2011

மலையகப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உணர்த்தும் உண்மைகள்

இலங்கையில் பெண்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று நோக்கி பார்ப்பது அவசியமானதாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும்; பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960ன் பிறகு 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள எனக் கூறலாம். அந்த வகையில் மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் காணப்படும் பெண்களின் கல்வி, சமூக, அரசியல் சமய நிலையுடன் ஒப்பிடும் போது சகல துறையிலும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக பெண்கள் என்று அடித்து கூறலாம். ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்கு காணப்பட்டாலும் ஏனைய சமூக பெண்ணின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும் போது இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை. என்பதை ஏற்றுக் கொண்டு தான் வேண்டும்.

போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தனக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறப்புச் சான்றிதழ் எடுப்பதந்கு தவறி விடுகின்றனர் என்றால் அதுவும் பொய் அல்ல என்பதற்கு சான்றாக அண்மையில் மலையகத்தின் நடமாடும் சேவையின்போது பிறப்புச்சான்றிதழ்; தேசிய அடையாள அட்டை இல்லாதோரே அதிக அளவில்; காணக்கூடியதாக இருந்தது. ஆதனால் சிலர் தனது ஓய்வூதியத்தைக்கூட பெறமுடியாமல தவிக்கின்றார்கள் அல்லது எடுக்காமலேயே மறணித்தும் போகின்றார்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இது ஆண்களையும் சார்ந்த ஓர் நிகழ்வும் கூட.

தனக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையூடான ஒரு சமூதாய கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில் நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தனது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் வறுமை. விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இப் பெண்கள் காணப் பட்டாலும் அண்மைக் காலமாக இந்த பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலை விட்டு கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும்.

எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இருந்த போதும் இந்த பெண்களின் சமூக கட்டமைப்பு சார்ந்த வாழ்க்கையில் குறிப்பிடுமளவில்; முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து.

இந்த பெண்களுக்கு, பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள்; வழங்கிவரும் சேவைகள் பூரணமாக சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன யுக உலகில் ஒரு அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும். மலையக பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடுஇ கல்விஇ கலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே இலங்கைக்கும் வெற்றி. –
ரேணுகாதாஸ்

நன்றி- வீரகேசரி

No comments: