இலங்கையில் தேயிலையின் வருவாய் அதிகரிப்பு
இலங்கையின் மிக முக்கிய வருமான வழியான தேயிலை ஏற்றுமதியில் இலங்கை தற்போது சிறப்பானதொரு வருவாயை ஈட்டியுள்ளதாக அங்கு இந்த வாரம் வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
தேயிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சென்ற வருடம் சரிவை எதிர்கொண்டிருந்த இலங்கை இந்த ஆண்டு பெரு விளைச்சலையும், சிறப்பான ஏற்றுமதி வருவாயையும் ஈட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிலோன் டீ உள்நாட்டிலேயே அதிகம் பாவிக்கப்படுவதோடு உலகெங்கும் ஏற்றுமதி ஆகிறது.
சிறிய நாடாக இருந்தாலும் உலகின் முன்னணி தேயிலை உற்பத்தியாளராக இலங்கை பலகாலமாக விளங்கி வருகிறது. இலங்கையில் இந்த வருடத்தின் முதல் பாதியில் நடந்துள்ள தேயிலை ஏற்றுமதி புள்ளி விபரங்களைப் பார்க்கையில் இந்த வருடம் இலங்கைக்கு முன்பில்லாத அளவில் இந்த வருடம் தேயிலை ஏற்றுமமதியால் கிடைக்கும் என்று தெரிவதாக இலங்கை தேயிலை வாரியம் கூறுகிறது.
சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சென்ற வருடம் வறட்சி காரணமாகவும் உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தேயிலையின் ஏற்றுமதியும் சந்தை விலையும் சரிந்திருந்தது.
தொழிலாளர்களுக்கு நன்மையில்லை
தேயிலைத் தொழிலாளர்கள்இதேவேளை இலங்கையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக மற்றும் வாழ்க்கைத் தரம் நீண்ட காலமாகவே மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது.
தேயிலை உற்பத்தி அதிகரிப்பும் ஏற்றுமதியால் கிடைக்கும் வருமான அதிகரிப்பும் எந்த வீதத்திலும் பொருளாதார ரீதியிலோ சமூக ரீதியிலோ தொழிலாளர்களை சென்றடைவதில்லையென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேயிலை ஏற்றுமதியும் அதற்கான விலை நிர்ணயமும் இடைத் தரகு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அதன் பலாபலன்கள் தொழிலாளர்களுக்கு சென்றடைவதற்கான வழிமுறைகள் அங்கு இல்லையென சமூக ஆர்வலர் பெ.முத்துலிங்கம் கூறுகின்றார்.
இலங்கையில் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் தற்போது ஏற்றம் கண்டுள்ள அதேநேரம் இந்தியாவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் முக்கிய தேயிலை உற்பத்திப் பிரதேசமான அஸ்ஸாமில் பூச்சி தாக்கம் ஏற்பட்டு தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போதிய உற்பத்தி இல்லாததால் சர்வதேச சந்தையில் தேயிலை விலை உயர்ந்து போனது இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
- பி.பி.சி