பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் ஹற்றன், நுவரெலியா,
இரத்தினபுரி, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில்
புதிய குடிமனைத் தொகுதிகளை நிர்மாணிக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
அறிவித்துள்ளது. கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்த
திட்டம் பெருந்தோட்டமனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம்
முன்னெடுக்கப்படுகிறது.
இந்த குடிமனைத்தொகுதிகள் நிர்மாணித்து கையளிக்கும்
திட்டத்துக்கு அமைவாக 855 தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவை இந்த ஆண்டின் இறுதியினுள் பூர்த்தியடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம்
நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்காக பழங்கால வீடுகளில் 60
வீதமானவை புதுப்பிக்கப்பட்டுள்ளன அல்லது கூரைகள் வேயப்பட்டும்,
உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மெருகேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
நவீன வடிவமைப்பில் அமையவுள்ள இந்த குடிமனைகள்,
ஒவ்வொன்றும் 7 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. 550 சதுர
அடியில் அமையவுள்ள இந்த மனைகள் ஒவ்வொன்றையும் நிர்மாணிக்க 515,000
ரூபா வீதம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2 படுக்கையறைகள், வசிப்பிட பகுதி, சமையலறை, குளியலறை மற்றும் குழாய் நீர் வசதியுடன் இந்த புதிய வீடுகள் அமையவுள்ளன. வீட்டைச்சூழ காணப்படும் 3 பேர்ச் காணியை தோட்டச்
செய்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், புதிய
வீட்டுத்திட்டத்துக்கு மேலதிகமாக, தற்போது காணப்படும் வீடுகளின்
கூரைகளை மாற்றம் செய்வதற்காக 94 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சுமார் 1700 அலகுகள் புதிதாக
வழங்கப்படவுள்ளன. இந்த புதிய வீடுகளின் மூலம் அனுகூலம் பெறுவோர்,
அவற்றின் உரிமையாளராவார்கள். இந்த குடிமனைகளின் நிர்மாணப்பணிகளின் போதும்,
நிர்மாண நடவடிக்கைகளில் ஓரளவு உதவிகளைவழங்குவார்கள்.
நிர்மாணப்பணிகளின் ஓரளவு பங்களிப்புக்காக கடன் வசதிகளும்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் சொந்த உரிமையை உறுதி செய்வதற்கு
முக்கியபங்களிப்பை வழங்குவதாக அமையும். மேம்படுத்தப்பட்ட
சுகாதாரம் மற்றும் தூய்மை, கல்விசெயற்பாடுகளுக்கான தனிமை போன்றன
சமூக ரீதியான அனுகூலங்களும் இதன் மூலம் குடும்பத்தாருக்கு
கிடைக்கும்.
இந்த புதிய குடிமனைத்தொகுதிகள் கையளிப்பின் மூலம்
பெருந்தோட்டத்துறையை சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை
ஏற்படுத்த முடியும் என்பதில் பெருந்தோட்ட கம்பனிகள் நம்பிக்கையை
கொண்டுள்ளன.
இதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மேலும்
அர்ப்பணிப்புடன் தமது தொழில்நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்
எனவும் எதிர்பார்க்கிறது. எமது துறையை பொறுத்தமட்டில் மனிதவளங்கள் என்பது முதுகெலும்பாக அமைந்துள்ளது.
வெவ்வேறுவீடமைப்புத்திட்டங்களின் மூலம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது
தொடர்பில் தமது அர்ப்பணிப்பை கம்பனிகள் வெளிப்படுத்தியுள்ளன.
பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் வழங்கப்படும் சமூக பொறுப்புணர்வு
வாய்ந்த செயற்பாடுகளின் மூலமாக பெருந்தோட்டங்களில் வசிக்கும்
மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற
நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்.
இந்த திட்டம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் மூலமாக இந்த
துறையில் சிறந்த பெறுபேறுகளை நாம் எதிர்பார்க்கிறோம் என பெருந்தோட்ட
முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
இலங்கையின் பெருந்தோட்ட கம்பனிகள் எப்போதும்
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதன்
முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தி கவனம் செலுத்தி
வருகின்றன. 200,000க்கும் அதிகமான தொழிலாளர் சனத்தொகைக்கு வீடுகள்
வழங்குவது என்பதன் மூலம் 1 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு
அனுகூலங்களை வழங்குவதாக அமைந்திருக்கும்.
இதில் பெரும்பாலானவர்கள் வெளியிடங்களில்
பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். இலங்கையின் தேசிய
பொருளாதாரத்தின் மூன்றாவது மிகப்பெரிய பங்களிப்பாளராக திகழும்
தேயிலைத்துறையின் பிரதான சவாலாக, வினைத்திறன் வாய்ந்த
தொழிலாளர்களை பேணுவது அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் இதை
உணர்ந்து, பெருந்தோட்டங்களில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி
திட்டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் அறிந்து கொள்ள
வேண்டும்” என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.