மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கியவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் தன்னையே அர்ப்பணித்த இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 103ஆவது ஜனன தினமான இன்று அவரை மலையகமும், மலையக மக்களும் நினைவு கூரும் நன்னாளாகும்.
அன்னார் தமது 26 வயதினிலேயே இலங்கை இந்திய காங்கிரசிலும், இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவரது தொழிற்சங்கப் பயணமும் அதன் பின் அரசியல் வாழ்வும் கரடு முரடாகவும், சோதனைகளும், வேதனைகளும், உள்ளடங்கியதாகவே இருந்தது.
ஆனால் இவை ஒவ்வொன்றும் இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க, சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணிகளாய் அமைந்தன. இவைகள் அனைத்தும் சரித்திரம் படைக்கப்பட்டவை.
முதற்கண் அமரர் தொண்டமானை நாம் அனைவரும் மிக மரியாதையுடன் ஐயா என்று தான் அழைப்போம். எனவே அவர் பிறந்த தின நினைவுகளை வெளிப்படுத்தும் பொழுது அவர் எமது சமூகத்திற்கு செய்து ஈட்டிய அரும்பெரும் காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
அமரர் தொண்டமான் தொழிற்சங்கவாதியாக ஆற்றிய சேவைகள், போராட்டங்கள் பல. இவரின் தொழிற்சங்க நடவடிக்கைகளே அரசியல் பிரவேசத்திற்கு ஏதுவாக இருந்தது. இவைகளில் வரலாறு காணும் போராட்டமாக உருளவள்ளி போராட்டமாகும். மற்றும் முல்லோயா, கந்தஹேன, ஹைபொரஸ்ட், வனராஜா, கலாபொக்க, மொண்டிகிறஸ்டோ, கடியேன்லேன போன்றவை. தொழிலாளர்களின் உரிமைகளை பெறுவதற்கான நடாத்திய போராட்டங்களாகும்.
அமரர் தோட்டப்புற மக்களின் தொழிற்சங்க, அரசியல் போராட்டங்களோடு நிற்கவில்லை. தோட்டப்புறக் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்திருந்தார். அதன் பயனாகவே தோட்டப்புற பாடசாலைகள் அனைத்தும் இன்று அரசாங்க பாடசாலைகளாக ஆகி உள்ளன. தோட்டப்புற சந்ததிகள் இன்று அரசாங்க உத்தியோகங்களிலும், மருத்துவ, பொறியியல் ஏனைய துறைகளிலும் நுழைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விசேடமாக கூறினால் இந்திய வம்சாவளியினரை நாடற்றவர் என்ற கூற்றிலிருந்து விடுவித்தவர் அமரர் தொன்டமானே! அவரின் விடாமுயற்சியினால் தான். நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் விசேட சட்டம். 1988 நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவளியினர் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனார்கள். நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பாரிய பிரச்சினை தீர்ந்தது. இவரின் சாணக்கிய அணுகு முறையினாலும் இவர் தலைமை தாங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலத்தினாலும், இது சாத்தியமானது. இது இல ங்கை சரித்திரத்திலும், சட்டவாக்கத்திலும் தொண்டமான் செய்த பெரிய சாதனையாக விளங்குகிறது.
இவர் வெற்றி கண்ட சாதனைதான் 1989 ஏப்ரல் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம். இந்த சட்டம் புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளராக பதிவு செய்த ஏற்பாடாகும். இந்த இரண்டு சாதனைகளினால் தான் இன்று இந்திய வம்சாவளி மக்கள் தலைநிமிர்ந்து, ஏனைய சமூகத்தவர்களோடு சரிசமமாய் உரிமை பெற்று அரசியல், பொருளாதார, சமூக, கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் பங்கு கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இவர் கல்வித்துறையில் ஈட்டிய சேவைகள் பல. தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்த அயராது பாடுபட்டார். தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தியில் மிக அக்கறை கொண்டார். சிறிபாத கல்வியியல் கல்லூரியில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 75 வீதம் இட ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கோரி வெற்றி பெற்றவரும் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானே. இந்த அங்கீகாரம் பெற அமைச்சரவை விஞ்ஞாபனத்தை வரைவதற்கு நான் கிராமிய கைத்தொழில், உல்லாசத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக இருக்கும் பொழுது அமைச்சர் தொண்டமானால் பணிக்கப்பட்டிருந்தமை எனது பாக்கியமாய் கருதுகிறேன்.
அன்னாரின் நாமத்தை எதிர்கால சந்ததியினர் எடுத்துச் செல்ல வேண்டும். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஒரு பொிய ஆலமரமாய் எமக்கு அரசியல், பலத்தையும், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. நகரசபைகள், மாநகரசபைகள், பிரதேசசபைகள், மாகாணசபைகள், பாராளுமன்றம் அனைத்திலும் எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்த பலத்தை நாம் இப்பொழுது விசேடமாக மத்திய மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும், சப்பரகமுவ மாகாணத்திலும் நிரூபித்துள்ளோம். இதை நாம் விரிவுபடுத்தி இந்திய வம்சாவளி மக்கள் வாழும் ஏனைய மாகாணங் களிலும் அரசியல் பலத்தை நிலைநாட்ட வேண்டும். அமரர் தொண்டனைத் தொடர்ந்து இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் அவரின் பேரனாரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் பணி இந்நாட்டு மக் களுக்கு விசேடமாக இந்திய வம்சாவளி மக்களுக்கு மென்மேலும் போய்ச்சேர அனைவரும் ஒன்றுபடல் வேண்டும். அவ ரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
ஆகவே, இன்றைய நாளில் அமரர் விட்டுச் சென்ற பணிகளை கௌரவமாக நினைவு கூர்ந்து எமது அஞ்சலியை அவர் பாதங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
கா.மாரிமுத்து
உப தலைவர்
|