Wednesday, September 30, 2009

மலையகத்தில் சிறுவர் தொழிலாளர் அதிகரிப்பு: குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கசுன்
இன்றைய சிறுவனே நாளை தலைவன் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. ஆனால் மலையகத்தை பொறுத்த மட்டில் இன்றைய சிறுவனே நாளைய வீட்டு வேலைக்காரன் என்ற நிலைமை தான் உள்ளது.
இவற்றிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் மிக முக்கிய காரணமாக பொருளாதாரமே காணப்படுகின்றது. உலகம் இன்று பொருளாதாரத்திலும் நவீன தொழிநுட்பத்திலும் வெற்றிகொள்வது எப்படி என பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் நாம் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பது எப்படி என பேசிக் கொண்டிருக்கின்றோம். இது எமது சமூகத்தின் 200 ஆண்டுகால வீழ்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சமூகத்திலுள்ள சிறுவர்கள் வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உரிமை புறக்கணிக்கப்படு வதுடன் நாளைய சமூகத்தின் தலைமைத்துவமும் கேள்விக் குறியாகி விடுகின்றது. அதனுடன் அடிமைத்தனமும், ஒடுக்கப்படும் நிலையும் கூடவே பிறக்கின்றது. இதனால் எமது சமூகம் தலைகுனிந்து நிற்கின்றது.
அவ்வாறு இருந்திருந்தால் எமது மக்களுக்கு 200 வருடங்கள் கழிந்து இந்த தேயிலையை மாத்திரம் நம்பி வாழவேண்டிய அவசியம் இருந்திருக்காது. சிறுவர் தொழிலாளர்களும் அதிகரித்திருக்க மாட்டார்கள். எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு அவர்களை வேலைக்கு அனுப்ப நினைக்க மாட்டார்கள்.

Tuesday, September 29, 2009

தோட்டத் தொழிலாளருக்கு சொந்தமாக வீடும் காணியும் எப்போது கிடைக்கும்?

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத முதலாம் திங்கட்கிழமை (5ம் திகதி) அன்று உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டிலும் செப்டம்பர் 28ந் திகதி முதல் அக்டோபர் 5ந் திகதி வரையில் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தவரும் சொந்த வீட்டைக் கொண்டிருக்க உரித்துடையவர். மலையகத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டுரிமையும், காணி உரிமையுமின்றி வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்புக்களில் 70 சத வீதமானவை வாழ்வதற்கேற்ற சூழலைக் கொண்டிராதவை. 60 சத வீதமானவை மலசல கூடமின்றி காணப்படுகின்றன.
48 சத வீதமானவை சுத்தமான குடிநீரைப்பெறும் வாய்ப்பு இல்லாதவை. 45 சதவீதமானவை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற லயன் குடியிருப்புக்களாக காணப்படுகிறது.அடிப்படை மனித உரிமைகளில் வீட்டு வசதி உரிமையும் ஒன்றாகும். பாதுகாப்பாகவும், அமைதியாகவும், கௌரவமாகவும், எங்காவது ஓரிடத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையே இதுவாகும். ஆகவே போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வது வெறுமனே ஒரு நபரின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தினை வைத்து தீர்மானிக்கப்படக்கூடாது.
போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையானது. இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு 1991ம் ஆண்டு பொதுவான கருத்துரையொன்றை வெளியிட்டது. போதுமான வீட்டு வசதிக்கான உரிமையானது பின்வரும் ஏழு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
(அ) ஆதன அனுபவிப்புக்கான சட்ட பாதுகாப்பு:
கட்டாயப்படுத்தி வெளியேற்றல், தொல்லை மற்றும் ஏனைய பயமுறுத்தல்களுக்கு எதிராக சட்ட பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை ஒருவர் கொண்டுள்ளார். ஆதன அனுபவிப்புக்கான பாதுகாப்பான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இது எல்லா வகையான வீட்டு வசதிகளையும் அதாவது ஒன்றில் அது முறையற்ற குடியேற்றமொன்றின் வதிவிடமாளிகையொன்றாக அல்லது குடிசையொன்றாக இருப்பினும் இது பிரயோகிக்கப்படும் என அக் குழு தெரிவித்துள்ளது.
(ஆ) சேவைகளும் மூலப் பொருட்களும்
போதுமான வீட்டு வசதியென்பது கட்டட மூலப் பொருட்களை அணுகிப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொருவரினதும உரிமையை மாத்திரமின்றி நீர், ஆரோக்கியம், வலு, கழிவகற்றல், வடிகாலமைப்பு மற்றும் அவசர சேவைகள் போன்ற அத்தியாவசியமான சேவைகளுக்கான உரிமையினையும் உள்ளடக்கியுள்ளது.
(இ) செலவைத் தாங்கும் தன்மை
போதுமான வீட்டு வசதி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்பதல்ல. ஆனால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தனிப்பட்ட அல்லது குடும்பத்தவரது செலவுகள் என்பது தமது ஏனைய அடிப்படைத் தேவைகளை திருப்தி செய்ய முடியாத மக்கள் என கருதப்படக் கூடாது.
(ஈ) குடியிருக்கத்தகு நிலை:
போதுமான வீட்டு வசதியானது இடைவெளிகொண்ட வசிப்பிடங்களாகவும், குளிர், ஈரத்தன்மை, உஷ்ணம், மழை, காற்று மற்றும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கும் கட்டமைப்பு ஆபத்துக்கள் மற்றும் நோய்க்காவிகள் (உதாரணம் விலங்குகளால் பரப்பப்படுகின்ற நோய்கள்) என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதனையும் உள்ளடக்கியுள்ளது.
(உ) அணுகக் கூடிய நிலையிருத்தல்:
போதுமான வீட்டு வசதியானது பௌதீக ரீதியாக அணுகக் கூடிய நிலையிருத்தல் வேண்டும். அங்கவீனமுடைய மக்களும் வீட்டு வசதியை அணுகக்கூடிய நிலையிலும் அல்லது புதிய வீடொன்றைக் கட்டிக்கொள்வதற்கான போதுமான அளவு காணி இருப்பதனையும் நிச்சயப்படுத்திக் கொள்வதனைக் கூறுகின்றது.
(ஊ) இடவமைப்பு:
போதுமான வீட்டு வசதியானது வேலைவாய்ப்புத் தெரிவுகளையும், சுகாதார கவனிப்புச் சேவைகள் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய சமூக வசதிகளை நாடிப் பெறுவதனை அனுமதிக்கக் கூடிய இடமொன்றில் இருத்தல் வேண்டும். வீட்டு வசதியானது மாசுபடுத்தப்பட்ட இடப்பரப்பிலோ அல்லது உரிமைக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் மாசுபடுத்தலை தோற்றுவிக்கும் மூலங்கள் நிறைந்த இடத்திலோ கட்டப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ள போதிலும் தோட்டத் தொழிலாளரின் வீட்டு வசதிக்கான உரிமைகள் அநேகமாக இன்று மறுக்கப்பட்டு வருகின்றதென்றே கூறவேண்டும். தோட்டங்களில் ஒரு பகுதியைச் சுவீகரித்து கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு புதிய குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக உரிமையாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஆயினும் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தும் போது அங்கு தேவையான அடிப்படை வசதிகளும், சட்ட ரீதியான உரிமையும் கிடைப்பதில்லை.

ஏழு பேர்ச் காணியிலேயே தோட்டத் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஒரு வீட்டை மட்டுமே அமைத்துக் கொள்ள முடிவதுடன் வேறு மேலதிக வசதிகள் எதையுமே மேற்கொள்ள முடியாது அடுத்தடுத்து வீடுகள் ஒட்டியபடி ஒடுக்கமாகவே அமையப் பெறுகின்றன. இதுவும் கூட லயன் முறையை ஒத்ததாகவே உள்ளது என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் காணிக்கான உறுதியாவது கிடைத்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கும் எனக் கூறும் தொழிலாளர்கள் வருடங்கள் பல கடந்துவிட்ட போதிலும் இன்னும் காணி உரிமை இல்லையே என அலுத்துக்கொள்கின்றனர்.

ஒரு குடியிருப்பும் அதைச் சூழவுள்ள காணியும் அதற்கான பெறுமதி முற்றிலும் செலுத்தப்பட்ட பின்னரேயே குடியிருப்பாளருக்கு உரிமையாக்கப்படும்.ஆனால் பெருந்தோட்டக் காணி அரசுக்கு சொந்தமான இக்காணியை மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்திச் சபையும். பெருந் தோட்டக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளன.
எனவே இக்காணியை வெளியாருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சட்டப்படி விற்பனைச் செய்ய முடியாது. இவ்வாறான நிலையில் தமது தோட்டத்தில் வேலை செய்வோருக்காக அமைக்கப்படும் குடியிருப்பையும் சுற்றியுள்ள காணியையும் தொழிலாளர்களுக்கு விற்பனைச் செய்வது சாத்தியமாகுமா? இந்நிலையில் தோட்ட வீடமைப்புத் திட்டம் எவ்வாறு முழுமையாக முடியும்?

தனக்கு சொந்த மில்லாத காணியில் தனது கைப்பணத்தைச் செலவிட்டு வீடு கட்டி மகிழும் ஒரே மனித கூட்டம் தோட்டத் தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டக் காணியை உரிமையாக்கித்தர முன்வரவேண்டும். இல்லையேல் இதுபோன்ற வீடமைப்புத் திட்டத்தை அரசியல் கண்கட்டுவித்தையாக மட்டுமே கருதவேண்டியிருக்கும்.
இங்கிரிய மூர்த்தி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Tuesday, September 22, 2009

பெருந்தோட்ட மாணவர்களின் கணிதத் திறன் வீழ்ச்சியடைந்திருப்பதேன்?

பெருந்தோட்டப் புற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையின் போது, கணிதப் பாடம் தொடர்பான சித்தி வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதைக் காணலாம். இலங்கையின் பரீட்சை விதிகளுக்கு அமைய ஒரு மாணவன் க.பொ.த. உயர் தரத்திற்கு கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயமான ஒரு நிபந்தனையாகும். ஆனால் இக் கணிதப் பாடத்தை ஆண்டு 1-11 வருடங்கள் தொடர்ச்சியாக இம்மாணவர்கள் கற்றப் பின் இறுதியாக நடைபெறும் க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அநேகமான மாணவர்கள் சித்தியடையத் தவறி விடுவதை வருடம் தோறும் அவதானிக்கலாம். ஏன் இந்த நிலை இந்நிலைக்கான காரணகர்த்தா யார்? இந்த கணிதப் பாடப் பெறுபேறுகளை அதி கரிப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நோக்கும் போது பல்வேறு தகவல்கள் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் பரீட்சை விதிகளின் படி கணிதப் பாடத்தில் சித்தி பெறாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இப்பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும், பணிப்பாளர் விடயத்துக்கு பொறுப்பானவர் அதிபர் போன்றோர்கள் அதிக கரிசனை எடுத்து கணிதப் பாட பரீட்சைப் பெறுபேற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடம் தோறும் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் அவசர அவசரமாக கருத்தரங்குகளை வைப்பதும் கலந்துரையாடல்களை, நடத்துவதும், ஆசிரியர்கள், மாணவர்களை, பாடசாலை அதிபர்களை விமர்சிப்பதும் பொருத்தமற்ற ஒரு விடயமாகும், இந்த பெறுபேறு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதை உணர வேண்டும்.
ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம். ஆரம்பக் கல்வியின் போது செயற்பாடுகளுடன் கூடிய கல்வி நிலை, எண்ணக்கரு விளக்கம் என்பன மிகமிக குறைவு இதற்கு காரணம் வீட்டுச் சூழல், பெற்றோர்கள், கணிதப்பாட அறிவு குறைந்த பயிற்றப்படாத ஆசிரியர்கள், மற்றும் தொடர்ச்சியான கணித அறிவு மட்டம் கணிப் பிடப்படாமை, வாசிப்பு திறனையும் அதிகரித்தால் தான் கணிதப் பாடத்தையும் விளங்கச் செய்ய முடியும்.
கணித எண்ணக் கருவில் முக்கியமான கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், என்பவற்றை ஆரம்பத்தில் இருந்து சரியாகவும் முறையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எண் இடப் பெறுமானங்களைச் சரியாக மாணவர்களுக்கு புரிந்து கொள் ளும் வகையில் கற்பிக்க வேண்டும். சில மாணவர்களுக்கு 4,5,6,7,ம் வகுப்புகளில் கூட இடப் பெறுமானம் தெரிவது இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
மீள அறிவுறுத்தல் இன்மை, கணிதம் பற்றிய மனப்பாங்கு எதிர்மறையாக இருத்தல் கணிதப் பாடம் கஷ்டம் (கடினம்) என ஆரம்பத்திலேயே நினைத்தல், சுயசிந்தனை இண்மை, தொடர்ச்சியாக முயற்சிக்காமை, பிறழ்வான நடத்தை, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்காமை, கணிதப் பாடத்தின் முக்கியத்துவம் புரியாமை. சில ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகள். கணித பாட அறிவை வளர்க்கக் கூடிய வாய்ப்புகள் இப்பிரதேச பாடசாலைகளில் குறைவாகக் காணப்படுகின்றமை. கணிதப் பாடத்தில் திறமையில்லாத மாணவர்கள் வகுப்பறையிலும், சக மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்க ளிடத்திலும் கவனிப்பாரற்ற நிலையில் விடப்படு கின்றார்கள். இதனால் இம்மாணவர்கள் உள ரீதியாகப்
பாதிக்கப்படுகின்றார்கள். கணிதப் பாடத்தில் திறமை குறைந்த மாணவர்களே தரம் 8-9 வகுப்புக்களில் இடை விலகலுக்கு உட்படுகின்றார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். க.பொ.த. சதாரணத் தரத்திற்கான சில அடிப்படைக் கணக்குகள் இந்த வகுப்பில்தான் தொடங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள் உடல் ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் வயதும் இவ்வயதே என்பதும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கணிதப் பாடத்திற்கான ஆரம்ப எண்ணக் கருக்களை முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கணித பாடத்தில் ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டும். கணிதப் பாடத்தில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை 6-11 வரையான வகுப்புகளுக்கு உள்ளவர்களை அனுப்பும் போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் கணிதப்பாடம் சம்பந்தமான பின் புலத்தை அறிந்து அனுப்ப வேண்டும். கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், பணம் மட்டுமே முக்கியம் என்று டியூஷன் நடத்தாது, உங்களை நம்பி வரும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கற்பிப்பதோடு, இப்பாடத்தை ஒரு விருப்பமான பாடமாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். 144 மாணவர்கள் பரீட்சை எடுத்து 100 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெறவில்லை என்றால் கோளாறு எங்குள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய முன்வரவேண்டும்.
கொட்டகலை இரா.சிவலிங்கம்
தினகரன் வாரமஞ்சரி

Thursday, September 17, 2009


தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.
2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் கொழும்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் இ.தொ.கா சார்பில் ஆறுமுகன் தொண்டமான், ல.தே.தோ.தொ.ச சார்பில் கே.வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக அதாவது எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையையும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

 • தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும்,
 • 75 வீத வருகைக்கான கொடுப்பனவு- 90 ரூபா,
 • உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.


 • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து எடை போடும் காட்சி1900ம் ஆண்டின் முற்பகுதியில்
 • இடிந்த கிணற்றில் குடி தண்ணீர் எடுத்துச் செல்லும் மலையகத்து பெண் தொழிலாளர்கள். அன்று தொடக்கம் இன்றுவரை இந்த மக்களின் வாழ்வு இந்த இடிந்த கிணறு போலவே செப்பனிடப்படாது, செழிப்பற்றுக் கிடக்கின்றது. எந்த" பெருந்தேசியங்களும், கதையாடல்களும், போராடல்களும்" இவர்களின்பால் என்ன அக்கறை செலுத்தின
 • கங்காணிகளும், தோட்டத் தொழிலாளர்களும். 1870இல்

Wednesday, September 16, 2009


தோட்டப் பகுதிகளில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 405 ரூபா சம்பள உயர்வை எதிர்த்தும், 500 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச சுமார் 1500 தோட்டதொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள் - வீரகேசரி
உத்தேச சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி- பெ.சந்திரசேகரன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி- எஸ்.சதாசிவம், தொழிலாளர் தேசிய சங்கம் - பி.திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் -ஆர்.சந்திரசேகரன், பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கம் - இ.தம்பையா, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஆர்.முரளிதரன் ஆகிய ஆறு தொழிற்சங்கங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தெரிவித்துள்ள பத்திரிகை அறிக்கையில்
 • அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக இருக்க வேண்டுமென்ற அனைத்து தொழிற்சங்கங்களின் முடிவுக்கு மாறாக 290 ரூபாவை அடிப்படை சம்பளமாக ஆக்கியிருப்பது தொழிலாளர்களின் உழைப்பையும் விலைவாசி ஏற்றத்தையும் உதாசீனப்படுத்துகிறது
 • ஏனைய கொடுப்பனவுகளோடு 405 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையை புரிந்து கொள்ளாததாகவே அமைந்திருக்கிறது.
 • அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமான சம்பள கொடுப்பனவுகள் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவானதாகும்.

எனவே பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பதாக மேற்படி ஆறு தொழிற்சங்கங்களும் தெரிவிக்கின்றன.

 • அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 500 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். • தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படும் சம்பள உயர்வு கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் அலட்சியப்படுத்துவதாகவே அமைவதால் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் இக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக இக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் யாவும் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
 • இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரிப்பதனாலும் முற்றாக எதிர்ப்பதனாலும் தொழிலமைச்சர் இதில் ஒப்பமிடுவதை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
 • 500 ரூபா அடிப்படை சம்பளத்திற்காக தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

இந்த விவகாரத்தில் அரசு பார்சையாளராக இல்லாமல் சமூக நியாயபூர்வமான தீர்வுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க மலையக தொழிற்சங்கங்கள் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதென்று கொழும்பில் ஒன்று கூடிய மலையக தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பி. திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதென்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் பங்குபற்றுமாறு கோருவது எனவும் இந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெ. சந்திரசேகரன் தெரிவித்தார்

Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

பொகவந்தலாவையில் பதற்ற நிலை தொடர்கிறது

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கொட்டியாக்கலை, பொகவான, குயினா, கில்லானி, செல்வக்கந்தை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும் எவ்வித தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதமின்றி நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் (15-09-2009) ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர். பேரணி பொகவந்தலாவை கல்லூரி வீதிக்குச்சென்ற போது, ஊர்வலத்தினர் மீது இனந் தெரியாதவர்கள் கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அவர்களும் திருப்பித் தாக்குதல் மேற்கொண்டனர். பொகவந்தலாவை நகர மத்தியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொகவந்தலாவை நகருக்கூடான சகல போக்குவரத்துக்களும் பல மணிநேரம் தடைபட்டன. இதனைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை எல்லை மீறிச்செல்லவே பொலிஸார் 10 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


இதனால் மறியலிலில் ஈடுபட்டவர்கள் எதிர்த்து நின்ற போதும் புகை மண்டலம் பரவியதால் தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிதறி ஓடினர். உடனடியாகப் பொகவந்தலாவை நகரின் சகல கடைகளும் இழுத்து மூடப்பட்டன. பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சம்பள நிர்ணயசபை மூலம் நிர்ணயிக்க வேண்டும்

வாழ்க்கை செலவுகளுக்கேற்ப அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்படுவது பொதுவாக உலக நாடுகள் அனைத்திலும் இடம்பெற்று வரும் பொதுவான நிலைப்பாடாகும்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதற்காக பெரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வை சம்பள நிர்ணயசபை மூலம் அல்லது ஜனாதிபதியின் மூலம் பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தோட்டத் தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொழிற்சங்கங்களால் ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டம் 405 ரூபா சம்பள உயர்வுடன் பல்வேறு இழுபறிகளையும், மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாறானதொரு சூழ்நிலை தேவையற்றதாகும். தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வை கோருவதும், முதலாளிமார் சம்மேளனம் அதனை வழங்க மறுப்பதும், பின்னர் தொழிற்சங்கங்கள் இணங்கப்பட்ட சம்பள உயர்விலும் பார்க்க குறைந்த தொகைக்கு இணங்குவதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகும். இது மாற்றம் பெற வேண்டும். நாட்டின் ஏனைய தொழிற்துறை ஊழியர்களுக்கு கிடைப்பதை போன்ற சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆவண செய்ய வேண்டும். தமது அடிப்படை தேவைகள் கூட இன்று வரையில் நிறைவு செய்யது கொள்ள முடியாது திண்டாடும் மலையகத் தோட்ட மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இப் போராட்டம் வாரக்கணக்கில் இடம்பெற்ற போதும் நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்காது போவதால் காலாகாலமாக ஏமாற்றப்படுவது தொழிலாளர்களே. எனவே தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி சம்பள நிர்ணயசபை மூலமாக அல்லது ஜனாதிபதியின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சம்பள பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்துக்கு – வடிவேல் சுரேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு 500ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாது உள்ள போதிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் ஆதரவு வழங்கினோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றவர்கள் வௌவேறு விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதியாக கூறியவர்கள் விடுமுறை நாளில் இரவோடு இரவாக பேசி எவருக்கும் தெரியாமல் 405 ருபா சம்பளத்திற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைச்சர் வீ. புத்திரசிகாமணி, அமைச்சர் பெ. சந்திரசேகரன், மத்திய மாகாண உறுப்பினர்கள் திகாம்பரம்,சதாசிவம் ஆகியோருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம் என்றார். மலையக தொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக எவரும் தனித்து முடிவெடிக்கக் கூடாது என்றார்.
பொகவந்தலாவையில் பதற்ற நிலை - பொலிஸார் கண்ணீர்ப்புகை

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் பேரணி ஒன்றையும் மறியல் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Monday, September 14, 2009

மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினால் மலையக தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன. இதனால் மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகும் நிலையும் விரோத மனப்பான்மைகளும் தலைதூக்கியுள்ளன.
“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பதனை உணராத மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவது தோட்டத் தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன மேற்கொண்ட ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் உடனடியாகவே ஆதரவு வழங்கின.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல போராட்டத்துக்கான ஆதரவை ஏனைய ஏனைய தொழிற்சங்கங்கள் மாற்றிக் கொண்டன. ஒத்துழையாமை போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் முன்னணி பின்னர் தொழிலாளர் சம்பள வியடத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதேபோல் பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தலையிலான பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியின் தலையீட்மை கோரியிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 500 ரூபாவாக உயர்த்த வேண்டும். இல்லையேல் போராட போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சுட்டு ஒப்பந்தத்தில்; கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 405 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ருபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையில் 405 ரூபா சம்பளம் வழங்குவது குறித்து பேசப்பட்டதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இணக்கம் எதுவும் காணப்படவில்லை என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. இராமையா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே சம்பள உயர்வு அதிகரிப்பு அறிவிப்பு தொடர்பில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
405 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது என இ.தொ.கா வும், இல்லை முடிவே எடுக்கவில்லையென ஏனைய தொழிற்சங்கள் மறுப்பு தெரிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? முரண்பாட்டினை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்படுத்தியதா, என்ற கேள்விகள் தோட்ட தொழிலாளர்களின் மனங்களில் உருவாகியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் இன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக மாறியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தையும் கைவிடுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டுவதும் பின்னர் உரிய இலக்கை அடையாமலேயே போரட்டத்தை கைவிடுமாறு அறிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆர்பாட்ட பேரணி ஆரம்பமாகும் வேளை அங்கு ம.ம.மு க்கு எதிராக இ.தொ.கா வினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர். ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டத்தினால் அங்கு பதற்ற நிலை உருவானது. ம.ம.மு யின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன் சத்தியாக்கிரகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் பொகவந்தலாவ நகரில் 500 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டமும் குழப்பியடிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றச் சென்ற மூன்று கட்சிகளின் தலைவர்களும் இ.தொ.கா ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டனர் வாகனங்கள் மீது கற்கலால் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இவ்வாறு மலையக தொழிற்சங்கங்களிடையே முரண்பாடுகள் எழுந்து தாக்குதல் வரை அவை சென்றுள்ளன. சம்பள உயர்வு கோரிய போராட்டங்களை தடை செய்வதன் மூலம் யாருக்கு பாதகம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். எனவே மலையக தொழிற்சங்கங்களின் சுயநல அரசியலுக்காகவும், எதிர்காலத் தேர்தல்களை குறிக்கோளாகக் கொண்டு முட்டி மோதுவதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை பெற்றுக் கொடு;க்க முயல வேண்டும்.
சுயநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது.
எனவே சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையின் உண்மை நிலையினை அறிவிப்பதுடன் 500 ரூபா சம்பளத்தினை பெறும் வகையில் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட போவது தோட்டத் தொழிலாளர்களே அன்றி மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் அல்ல. மலையக தொழிலாளர்களின் நலன் கருதி மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி - வீரகேசரி
மலையக மக்கள் முன்னணி வீதி ஹட்டனில் மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் ஹட்டனில் 13-09-2009 ஆம் அன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் முன்னணி ஆதரவாளர்கள் ஹட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில் ஹட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவையில் பதற்றம்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்கள் பொகவந்தலாவை நகரில் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் இடையுறு விடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் பொகவந்தலாவை நகரில் 12-09-2009 நண்பகல் வேளையில் இடம் பெறவிருந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான ஆதரவாளர்கள் பொகவந்தலாவை நகரில் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயக மக்கள் முன்;னணியின் தலைவரும் எம்பியுமான மனோகணேசன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் ,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னயியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோரின் வாகனங்கள பொகவந்தலாவை நகரின் நுழை வாயிலுக்கு அருகில் வருகை தந்த போது இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் திடீரென கற்களால் தாக்கப்பட்டதைத்தொடரந்து பெரும் களேபரம் ஏற்பட்டது. சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிய வில்லை. இந்தத்தாக்குதல் சம்பவத்தின் போது மனோகணேசன் வாகனத்துக்குச்சிறிய சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணி ,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் வீதிமறியலில் ஈடுபட்டனர். இதன்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்படனர். மாலை 4.00 மணியளவில் நிலைமை சுமூக நிலைமைக்கு வந்தது.

Sunday, September 13, 2009

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம் : தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இப்போராட்டம் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் இடம்பெற்றன.
மலையகத்தில் சகல தேயிலைத் தோட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதுடன் 500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை வெற்றிபெற வேண்டுமென்று ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்துகின்றதாகவும், பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தமது வேலைகளை பகிஷ்கரித்து விட்டு கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி தத்தமது தோட்டக் காரியாலயங்களை நோக்கி ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை தெரிவிக்கப்படுகிறது.
405 சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 405 ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக இ.தொ.கா.உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வரவுக்கான விசேட அலவன்ஸாக 85 ரூபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கும், மேற்படி ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு 2011 மார்ச் வரை அமுலில் இருக்கும். அதேவேளையில் 2006ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் இருந்து இணக்கம் காணப்பட்ட சம்பள நிலுவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தற்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவும் நாணய மாற்று விசேட கொடுப்பனவாக 20 ரூபாவும் மாதத்தில் 75 சதவீத வேலைக்கு சமுகமளித்திருந்தால் நாளொன்றுக்கு 70 ரூபாவுமாக மொத்தமாக 290 ரூபாவைப் பெற்று வந்தனர்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே மேற்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தன. இதுவரை சம்பள உயர்வு தொடர்பாக 8 சுற்று பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் நடத்திய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பொழுதும் நேற்று மீண்டும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாகவே 405 ரூபா எனும் தொகையை நாளொன்றுக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சார்பில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்க முடியாதெனத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் நேற்றுக் காலையில் நாளொன்றுக்கு 390 ரூபா அளவிலேயே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது அடிப்படைச் சம்பளமாக 275 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 100 ரூபாவும் திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 15 ரூபாவும் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருந்தது.
இதற்கிடையில் இந்த அறிவிப்புடன் ஒத்துழைக்க போவதில்லை என கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய தொழில் சங்கங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
500 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய போதும், தற்போ இந்த தொகைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுவரையில் இவ்வாறான எந்த ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அதன் பின்னரே தமது தீர்மானத்தை வெளியிட முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தொட்டத்துறை தலைவர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

Saturday, September 12, 2009

தீபாவளிச் சமயத்தில் பிள்ளை பிடிக்காரர்கள் தோட்டங்களுக்கு வருவார்கள்!

சிறுமிகளான ஜீவராணி, சுமதி ஆகியோரின் மர்ம மரணங்கள், தரகர்களையும், கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம்பி நகரங்களுக்கு வேலைக்காரர்களாக சிறுவர் சிறுமியரை அனுப்பி வைப்போரின் கண்களைத் திறந்திருக்க வேண்டும். திறக்காவிட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லைதான். பெற்றோரே தரகர்கள் பக்கம் நிற்கும்போது யார் என்ன செய்ய முடியும்?
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை பகுதி கழிவு நீர் கால்வாய் ஒன்றிலிருந்து கடந்த மாதம் 14ம் திகதி மீட்கப்பட்ட மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமிகளான ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணம் மலையகத்தைச் சேர்ந்த அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பெருந்தோட்டக் குடும்பங்களில் வருமானக் குறைவினால், வாழ்க்கையை இழுத்துச் செல்ல முயலாததால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரிகளாக அனுப்பி வைக்கின்றனர்.
கொழும்பு மாவட்டம், கம்பஹா மாவட்டம், புத்தளம் மாவட்டங்களிலேயே மலையகத்தைச் சேர்ந்தோர் வீடுகளில் தொழில் புரிகின்றனர். பெருந்தோட்டக் குடும்பங்கள் வறுமையில் சிக்கியிருப்பதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் பொய்யும் புனைசுருட்டுமாக கதைகளை அவிழ்த்துவிட்டு தனவந்தர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் (தரகர்) புரோக்கர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர். பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து அழைத்துச் சென்று தனவந்தர்களின் வீடுகளில் விலைபேசி தங்க வைத்துவிடுகின்றனர்.
ஒரு மாத சம்பளத்தையும் பயணச் செலவுக்கென இரண்டு ஆயிரம் ருபாவையும் பெற்றுக்கொள்கின்றனர். இந்த புரோக்கர்கள் இடைஇடையே இவர்களின் சம்பளத்தில் ஐந்து நூறு, ஆயிரம் என பெற்றுக்கொள்வதும் உண்டாம். இப் பணம் மாடாய் உழைத்து தேய்ந்து போகும் எமது மலையகப் பிள்ளைகளின் சம்பளத்திலேயே கழிக்கப்படுகிறது.
1977ஆம் ஆண்டுக்கு முன் கொழும்பு உட்பட பல இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெருந்தோட்டப் பெண்களே வீடுகளில் வேலை செய்து வந்தனர். அவர்களின் வயதும் 45, 50 தாண்டியதாக இருந்தது. அன்று கொழும்பு உட்பட புற நகரப் பகுதி வீடுகளில் சிங்களப் பெண்களே வீட்டு வேலைக்காரிகளாக இருந்து வந்தனர். இவர்கள் 50 வயதை
தாண்டியவர்களாகவும், எவ்வித குடும்பப் பொறுப்பும் இல்லாதவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் ‘ஆயா’ என்ற அடை மொழியிலேயே அன்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
1977 ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சியை கைப்பற்றியதும் வகை தொகையின்றி சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் வெளிநாடுகளுக்கு (மத்திய கிழக்கு நாடுகள்) ‘ஹவுஸ் மெய்ட்’ என்ற பெயரில் வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றனர். இதன் காரணமாக சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் ஆயா வேலையை துறந்து வெளிநாடுகளை நாடத் தொடங்கினர்.
இதேவேளை ஐ. தே. கட்சியின் திறந்த பொருளாதார நடவடிக்கையால் மலையக பெருந்தோட்ட மக்களும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டதுடன், இடை இடையே நிலவிய இன கலவரத்தாலும் பெரிதும் இன்னல்களை அனுபவித்தனர். சிங்கள கிராமத்து பெண்கள் கொழும்புக்கு தொழில் புரிய வருகை தருவது குறைந்ததும், கொழும்பில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தோர் மலையக பெண்களை முதலாளிகளின் வீட்டு வேலைகளுக்கு வழங்க முன்வந்தனர்.
இதன் காரணமாக கூன் விழுந்து போன தங்களின் வாழ்க்கையை தோட்டத்திற்கு வெளியே சென்று நிமிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டு தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பினர். இதன் தொடர்கதையே இன்று பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சுகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் பரிதாபம் மலையகத்தில் தொடர்கிறது. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள் என்பது வெறும் அலங்கார வசனம் அல்ல.
தேயிலைச் செடி மலைகளில் கொழுந்துக் கூடையை முதுகிலும் வயிற்றில் குழந்தையையும் சுமந்து காடு மலையேறி கொழுந்து பறித்து வாழ்க்கை நடத்துபவளே பெருந்தோட்டப் பெண்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. வயிற்றில் தன் குழந்தையையும், முதுகில் கொழுந்துக் கூடையையும் சுமக்கும் பெருந்தோட்டப் பெண்கள் வறுமையின் வலியையும் சுமக்கிறார்கள். வறுமையின் நிறம் சிவப்பு என்பது மலையக பெருந்தோட்டப் பெண்களுக்கே தெரியும்.
கொழும்பு வீடுகளில் தொழில் புரியும் இளம் யுவதிகள், சிறுவர்கள், பெண்கள் படும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது முழுமையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகக் தெரியவில்லை. அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை பலர் தாம் வேலை செய்யும் வீடுகளில் தொழில் புரிகின்றனர். அடி உதை என துன்பப்படுவோரும் அதிகமாக உள்ளனர். கொழும்பு பங்களா என்றதும் இது ஒரு சொர்க்கப்புரி என நினைத்து புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி விடுகின்றனர். கொழும்பு பங்களாவில் உள்ள வேப்ப மரத்தின் குச்சியும் இனிக்கும் எனவும் பல புரோக்கர்கள் அநியாயமான பொய் வார்த்தைகளை பெருந்தோட்ட மக்களிடம் தெளித்துவிடுகின்றனர்.
இன்று மஸ்கெலியா பகுதியை சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணங்கள் பெருந்தோட்ட மக்களின் கண்களை அகல விரிவடையச் செய்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ் இருவரின் பரிதாப மரணம் சம்பந்தமான விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆரம்பமான தினத்தன்று மலையகத்தை சேர்ந்த எமது சட்டத்தரணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகியிருந்தமை எமது மக்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்.
இவர்களது மனதில் எமது பிஞ்சுகளின் மரணம் தொட்டுவிட்டது. அல்லது சுட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பல்வேறு வேலைகளுக்கும் இடையே இறந்தவர்கள் எமது குழந்தைச் செல்வங்கள் என்ற சமுதாய உணர்வோடு நீதிமன்றத்தில் ஆஜராகியமை பாராட்டப்படவேண்டிய ஒன்று.
அனைத்து ஊடகங்களும் பெரும் படங்களுடன் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு பெருந்தோட்ட மக்களை விழிப்படையச் செய்தமைக்கு ஊடகங்களுக்கு அனைவரும் நன்றிகூற வேண்டும். இது காலம் வரை கொழும்பில் வீட்டு வேலைக்கு சேர்ந்தோரின் பல மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இந்த இரு பிஞ்சுகளின் மரணம் பெருந்தோட்டப் பகுதிகளில் பேசப்படக்கூடிய வகையில் ஊடகங்களில் இடம் பிடித்தது. இது இம்மலையக பெருந்தோட்ட வறிய குடும்பங்களின் கண்களைத் திறந்திருக்கும் என எதிர்பார்ப்போம். இனியும் கண் திறக்காவிட்டால் யாரும் எதுவும் செய்வதற்கில்லை தான்.
இத்தரகர் தொழில் நேர்மையற்ற ஒரு தொழில் சட்டபூர்வமானதல்ல. இத்தரகர்கள் பற்றித் தகவல் தெரிந்தால் அருகேயுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது அப்பகுதி கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்யவேண்டும்.
சிறுவர்களை பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து கட்டாய வேலைக்கு அழைத்துச் செல்வோர், அல்லது கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர் கள் பற்றிய தகவல்களை அனைவரும் வழங்க முன்வர வேண்டும் என நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதுள்ள எமது நாட்டின் சட்டங்களின் கீழ் குறிப்பிட்டோருக்கு நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டப் பகுதியில் எதிர்வரும் தீபாவளி பெருநாள் காலத்தில் தரகர்கள் நட மாட்டம் அதிகரிக்கலாம். மக்கள் விழிப்பாக செயல்பட வேண்டும்.
கே.பி.பி புஷ்பராஜா
தினகரன்
வருடா வருடம் சம்பள மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அரவிந்தகுமார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வருடா வருடம் மீளாய்வு செய்யப்பட வேண்டுஅமன ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளருமான அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி புரிவோருக்கு வருடா வருடம் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதிலும் பல்வேறு இழுபறிகளும், புறக்கணிப்புக்களும் இடம் பெறுகின்றன. போராடியும் நியாயம் கிடைப்பதில்லை. நாளாந்தம் உயர்வடையும் பொருட்களின் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாது தோட்டத் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய செலவினங்களை பார்க்கையில் 500 ரூபா என்பது பாரிய பிரச்சினையல்ல.
ஆகையினால் வருடா வருடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்பட்டு குறைந்த பட்சம் 50 வீதமான சம்பள உயர்வையேனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு இப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
இனிப் பேச்சுவார்த்தை இல்லை : ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் இது குறித்து 12-09-2009 கொட்டக்கலையில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாட் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 10, 2009

அடிப்படைச்சம்பளமாக 500 ரூபாவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் - சந்திரசேகரன்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபாவினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அச் சம்பளம் பல்வேறு கொடுப்பனவுகளை உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் அது தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். இரண்டரை வருடங்களுக்குப் பின் கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 600 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆனால் ஏனைய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக மலையக மக்கள் முன்னணியும் அடிப்படை சம்பளமாக 500 ரூபாவுக்கு இணங்கிப் போக வேண்டி ஏற்பட்டுள்ளது என ஹோல்பேஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவே வழங்கப்படுகிறது. இந்த நாட்சம்பளமானது அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவுகளுக்கு ஈடுகொடுக்க போதுமானதல்ல. எனவே தான் அடிப்படை சம்பளமாக 500 ரூபா வேண்டுமென கோருகிறோம்

இந்த அடிப்படைச் சம்பளமான 500 ரூபாவுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளும் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது அரச சிற்×றூழியர் ஒருவர் 11500 ரூபாவை மாத சம்பளமாக பெறுகின்றார். இந்தச் சாதாரண சிற்×றூழியர்கள் பெறுகின்ற சம்பளத்தைக்கூட பயிற்றப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறவில்லை. எனவே இது ஒரு பாரபட்சமான செயலாகும். இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் சமமானவர்கள் என்பது உன்மையாயின் சம்பள உயர்வு விடயத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அந்தச் சமத்துவம் காட்டப்பட வேண்டும். அதனால் தான் இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு சிறந்தவொரு தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென நாம் கூறினோம். அதாவது கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப் பிரச்சினையை மாத்திரம் உள்ளடக்கியதல்ல. அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த சகல அம்சங்கள் பற்றியும் ஆராய வேண்டும். அதன் பின்னரே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். ஆனால் தற்போது சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இ.தொ.கா. உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும் இதை மூடு மந்திரமாகவே வைத்துள்ளன. தற்போது மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒத்துழையாமை போராட்டம் கூட இ.தொ.கா. வால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவே. இது தொடர்பில் கலந்தாலோசனைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே இவ்வாறான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்.

தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறான சில அம்சங்களை நாங்கள் முன்வைக்கின்றோம். புதிய கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளத்திற்கு அப்பால் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள்: புதிய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளத்திற்கும் மேலதிகமாக சேர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள். தொழிலற்ற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெறக்கூடிய வகையிலும் தொழிலாளர்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் தோட்டங்களில் தற்போதுள்ள தரிசு நிலங்களை பகிர்ந்தளிப்பதோடு கால்நடை வளர்ப்பு மற்றும் சுயதொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மூடப்பட்டுக் கிடக்கும் தேயிலை தொழிற்சாலைகளை இயங்க வைப்பதோடு தோட்டப் பகுதிகளில் தொழில்பேட்டைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தோட்டங்களில் தேயிலை உற்பத்திக்கு பயன்படாது என ஒதுக்கப்பட்ட காணிகளை தொழிலிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வீடமைப்பிற்காக பகிர்ந்தளிக்க வேண்டும்.
மரண சகாய நிதி 7000 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும். மரங்கள் தறிக்கப்படும்போது அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரட்சிக் காலத்தில் நிவாரண உதவி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதோடு இதனை சம்பளத்தில் அதற்கு பின்வரும் காலங்களில் கழிக்கப்படக் கூடாது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று செல்பவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதோடு நாடு திரும்பியவுடன் எவ்வித காலதாமதமுமின்றி வேலை வழங்கப்படவேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கும்போது இரண்டு விதமாக தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும். உதாரணமாக பொலிஸ் நடவடிக்கை, தோட்டத்தில் வேலை நிறுத்துதல். தோட்டங்களுக்கு சொந்தமான தேயிலை விற்பனை நிலையங்களில் தோட்ட இளைஞர், யுவதிகளுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுவதோடு புதிய விற்பனை நிலையங்களும் இதுபோல ஆரம்பிக்கப்படவேண்டும். முன்பு தோட்டங்களில் நடைமுறையிலிருந்த சில சுத்திகரிப்பு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை போன்ற நிதிகளையும் நலன்புரி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்களை தோட்ட நிர்வாகம் வழங்குகின்ற புதிய நடைமுறையை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். விளையாட்டுத் துறைக்கும் கலாசாரம் மற்றும் சமயத் துறைக்கும் தோட்ட கம்பனிகள் விசேட நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கான காணி ஒதுக்கீட்டையும் கட்டாயமாக்க வேண்டும். தோட்டங்களில் உள்ள நோயாளர்களுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கணவன் ஏதேனும் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டால் மனைவி மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது நிறுத்தப்படல் வேண்டும்
தொழிற்சங்க நடவடிக்கை - 100 கோடி ரூபா இழப்பு

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் கனிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார். மலையகப் பகுதிகளில் மாத்திரமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தொழிற்சங்கங்களுடன் 10-10-2009 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் வீரசிங்க தெரிவித்தார். அதேவேளை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அடுத்த ஏல விற்பனைக்கான தேயிலை குறைவடையும் என தெரிவித்த இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி வாராவாரம் நடைபெறும் ஏல விற்பனையில் ஒன்றரை மில்லின் கிலோ கிராம் தேயிலை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பள உயர்வு - நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிளண்டில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஊர்வலமாக வந்து தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் - சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

லிந்துலை பிரதேசத்தில் மெரேயா, ஊவாக்கலை, தங்ககெலை, கேம்பிரி, என்போல்ட், எல்ஜின், திஸ்பனை ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து லிந்துலை – டயகம பிரதான வீதி, திஸ்பனை சந்தியில் ஒன்று கூடி சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை வெம்பா தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் எவ்வித தொழிற்சங்க பேதமுமின்றி மெதுவாக பணிசெய்யும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து தமக்குத் தொழிற்சங்கங்கள் உரிய விளக்கம் வழங்காத காரணத்தினால் தாமாகவே சிந்தித்து மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெம்பாத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Wednesday, September 9, 2009

ஒத்துழையாமைப் போராட்டத்தை வலுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள்

தோட்டத் தொழிலாளர்களின் 500 ரூபா சம்பளத்தினை வலியுறுத்திய ஒத்துழையாமைப் போராட்டம் பெருந் தோட்டப்பகுதிகளில் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டங்களில் தோட்டத்தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஹட்டன், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம, பத்தனை, கொட்டகலை, டிக்கோயா போன்ற பகுதிகளில் மேலும் பல போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தொழிலாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டுள்ளனர். மேற்படி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அக்கரப்பத்தனை – டயகம வீதியில் பெல்மோரல் சந்தியில் இடம்பெறுகின்றது. இதில்14 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லெட்சுமணன், ஜெயக்குமார், ஜெயசீலன், செல்வகுமார், நித்தியானந்தன், மஹேந்திரன், தாமோதிரன், திருஞானசுந்தரம் அபிமன்யு, ஜெயசேகர, மணமோகன், யோகேஸ்வரன், முனியாண்டி, முருகதாஸ் ஆகியோர இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று 09-09-2009 ஆம் திகதி காலை 7.20 மணிக்கு ஆரம்பமானது.

அத்துடன் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வித தொழிற்சங்க பேதமின்றி இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு ஒன்று கூடியிருக்கின்றனர்.

அதேவேளை,சம்பள உயர்வை வலியுறுத்தி ஹட்டன் வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் தன்னிச்சையாக மெதுவாகப்பணி செய்யும் போராட்டமொன்றினை நேற்று 08-09-2009 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர்.

லிந்துலை ஆகரகந்த தோட்டத் தொழிலாளர்கள் நாளை மறுதினம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்

நன்றி- வீரகேசரி இணையம்
500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டம் தொடரும்- ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப்போவதாக இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதையடுத்து ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்


பேச்சுவார்த்தையின் போது தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் முதலாம் ஆண்டில் 330 ரூபாவாகவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவாகவும் அதிகரித்து தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப் போவதாகவும் சாதகமான முடிவு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றார்.கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், தோட்ட நிர்வாக ஊழியர்கள், கணக்கப்பிள்ளை, மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் பணிப்புரைகளை ஏற்காமல் தாமாகவே தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.


உற்பத்தியாகும் தேயிலையை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்காது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு 11,500 ரூபா முதல் 13,000 ரூபா வரை சம்பளமாக பெறுகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டு வருமானத்தை தேடித்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வை காணும் முகமாக தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் புதிய முறையிலான ஒத்துழையாமை போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இதர சிறிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக் கொண்டார்.

Tuesday, September 8, 2009

தொழிலாளர் சம்பள உயர்வு : ம.மா.சபையில் பிரேரணை நிறைவேற்றம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மத்திய மாகாண சபையில் இன்று 08-10-2009 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட விசேட பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்குத் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும். இவ்விடயம் குறித்து அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கொண்டு வந்த, விசேட பிரேரணையை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜரட்ணம் வழிமொழிந்தார்.


இதனைத் தொடர்ந்து இந்தப் பிரேரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை ஏகமானதாக ஏற்று நிறைவேற்றினர்.


அதேவேளை, இந்தப் பிரேரணைத் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அறிவிப்பதற்கு மத்திய மாகாண சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்
சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும்

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 07-10-2009 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் தொழிலாளர்களுக்கான சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்க மறுத்து விட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 360 ரூபா சம்பள உயர்வினை வழங்க முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்டதுடன், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.

நாளொன்றுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குமாறு கோரி தொழிலாளர்கள் கடந்த 02-10-2009 திகதி முதல் ஒத்துழையாமை போராட்ட நடாத்திவருக்கின்ற நிலையில் கூட்டொப்பந்தம் தொடர்பாக நேற்று முக்கிய பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் பேச்சுவார்த்தை இடையிலேயே முறிவடைந்ததுடன் தற்போது முன்னெடுக்கும் போராட்டம் தொடரும் எனவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Monday, September 7, 2009Plantation workers on ‘non-cooperation-campaign’ to up wagesBy Dilshani SamaraweeraPlantation workers are on a ‘non-cooperation-campaign’ following unsatisfactory wage talks on Monday. The three trade unions that are signatories to the plantation sector Collective Agreement and the Employers Federation of Ceylon (EFC), representing the plantation companies, are due to meet tomorrow (September 7) for another pow-wow
We have declared a non-cooperation-campaign. This is something similar to a work-to-rule campaign,” said the Secretary General of the Joint Plantation Trade Union Centre, O A Ramiah. The Joint Plantation Trade Union Centre is one of the three signatories to the plantation sector Collective Agreement.


ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை அரைக்கப்படாமல் தேக்கம்

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்கின்றதைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அரைக்கப்படாத நிலையில்,ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்துகள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே இந்த ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்று வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 290 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படுகிறது.
மலையகத்தில்
தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்

இலங்கையில் மலையக பகுதியில் சம்பள உயர்வு கோரி இரண்டரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனால் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிக்கப்படக் கூடும் என்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூறியிருக்கிறது. சீனா, இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உலகில் நான்காவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. ஆனால், தொழிலாளர்களின் இந்த ஒத்துழையாமை இயக்கம் அந்த உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


1992 இல் இலங்கையின் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.அதனையடுத்து 1992 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறையில் வறுமை 22 வீதத்தில் இருந்து 32 வீதமாக அதிகரித்ததாக கூறுகிறார் இலங்கை தொழிலாலர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானதைத் தொடர்ந்து அவர்களுடைய சம்பளம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

நாளொன்றுக்கு 500 இலங்கை ரூபாய்கள் ஒட்டுமொத்த சம்பளமாக ஒரு தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கை. அதற்கு முதலளிமார் சம்மேளனம் இணங்காத காரணத்தினாலேயே தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் இ.தொ.கா தலைவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்.


பி.பி.சி

Sunday, September 6, 2009

தோட்டத் தொழிலாளரின் ஒத்துழையாமைப் போராட்டம்

500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஒத்துழையாமைப் போராட்டம் முடிவின்றித் தொடருகிறது.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் இந்நிலையில் கடந்த 2ம் திகதியிலிருந்து ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒத்துழையாமைப் போராட்டம் காரணமாக மலையகப் பெருந்தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அதேசமயம் சாதகமான முடிவொன்று எட்டப்படும் வரை தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்பது தொழிற்சங்கங்களின் நிலைப்பாடாகும். இக் கோரிக்கையை அரசாங்கமும் ஆதரித்து வரு வது தெரிகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் கடந்த காலத் தில் ஒவ்வொரு சம்பள உயர்வையும் போராட்டம் நடத்தியே பெற்று வந்துள்ளனர். அவ் வேளைகளிலெல்லாம் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் சாதகமாக அரசாங்கம் செயற்பட்டு வந்தமை நினைவிருக்கலாம்.
தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தியே வந்துள்ளது.
தற்போது இடம்பெற்று வருகின்ற ஒத்துழையாமைப் போராட்டமானது தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதென்பதை இவ் விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் புரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது. தோட்டத் தொழிலாளர்கள் கோருகின்ற ஐநூறு ரூபா சம்பள உயர்வானது இன்றைய காலகட்டத்தில் நியாயமானதென தொழிற் சங்கங்கள் அனைத்துமே கருத்துத் தெரிவிக்கி ன்றன.
சர்வதேச ரீதியில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. இந்நிலைமைக்கு இல ங்கை விதிவிலக்கானதல்ல. மக்களின் மாதாந்த வருமானம் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துச் செல்வதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது தோட்டத் தொழிலாளர்களைக் கூடுதலாகப் பாதித்துள்ளது. அவர்கள் குறித்ததொரு மட்டத்துக்குக் கீழேயே மாதாந்த வருமானம் பெற்று வருகின்றனர். அதேசமயம் அவர்களது மாதாந்த வருமானம் ஏனைய துறை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது.
இதனாலேயே தோட்டத் தொழிலாளர்களில் பெருமளவானோர் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் அவர்கள் ஐநூறு ரூபா சம்பள உயர்வு கோருவதை நியாயமில்லையெனக் கூறுவதற்கில்லை.
பண்டைய காலம் தொட்டு உலகில் சிறந்ததொரு விவசாய நாடாக இலங்கை திகழ்ந்து வருகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகில் கைத் தொழில்துறை வளர்ச்சியடையத் தொடங்கியதும் விவசாயத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இதனாலேயே உலகம் உணவு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியேற்பட்டது.
இலங்கையும் கடந்த காலத்தில் விவசாயத்தில் பின்னடைவையே சந்தித்தது. இப்பாதிப்பை நீக்கி கமத்தொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றைய அர சாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
சிறிது காலமாக வீழ்ச்சியான நிலைமைக்குச் சென்றுள்ள தேயிலை உற்பத்தித்துறையையும் மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் விரிவான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிகராக சிறு தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
தேயிலைத் தொழில் துறைக்காக கடினமுடன் உழைப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது பொருளாதார நிலைமை இயன்றளவு சீர்செய்யப்பட வேண்டும். அப்போதே வினைத்திறன் கூடிய சேவையை தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் இன்று மீண்டும் பேச்சு சுமுகமான முடிவு ஏற்படும் என இ.தொ.கா. தலைவர் நம்பிக்கை
நன்றி- தினகரன்
தலைவர்கள் ஒன்றுபட்டுத் தொழிலாளரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறாமையினால் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதலான இலாபத்தினை பெற்றுக் கொடுக்கும் தொழில் என்றால் அது தேயிலைப் பயிர்ச் செய்கையாகும்.
ஆனாலும் இத்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்புக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வினைக் கேட்கும் போது தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வாகங்கள் அதனை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றன.
இதற்குப் பல்வேறு காரணங்களையும் காட்டுகின்றனர்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை பறித்தல், மரங்களை வெட்டுதல், கவாத்து வெட்டுதல், மானாபுல் வெட்டுதல், புல்லூப் பிடுங்குதல், மருந்து தெளித்தல், கான்வெட்டுதல், தவானையைப் பராமரித்தல், முள்ளுக்குத்துதல், தேயிலை மரம் பிடுங்குதல், தேயிலைத் தொழிற்சாலை வேலை என இன்னும் பல வேலைகளைத் தமது முழு சக்தியையும் பிரயோகித்துச் செய்கின்றனர்.
இவர்களுக்கும் குறைந்த சம்பளத்தினை வழங்குவது கொடுமைதான். இவ்வாறான நிலையில் சிறிய வருமானத்தினைப் பெறும் தோட்டப்புற மக்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை நகரப்புறங்களுக்குத் தொழில் தேடி செல்லும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அவர்களின் கல்வி வளர்ச்சியும் தடைப்படுகின்றது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடாத்த எத்தனிக்கும் போது வறுமை நிலை தடையாக இருக்கின்றது. இந்நிலைமையில் அவர்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கான உணவுகளைப் பெறுவதற்கு இயலாது. இதன் காரணமாகப் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதேவேளை போஷாக்கின்மையின் காரணமாக இளம் சிறார்கள் தமது கல்வியில் அக்கறை செலுத்துவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை ஆராயுமிடத்து தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதியளவான சம்பளம் கிடைக்காமையே என்பது புலனாகும்.மலையகப் பகுதிகளில் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டுத் தொழிலாளர்களின் இல்லங்களை நாடுகின்றனர். ஆனால் பின்னர் அவர்களைக் காண முடியவில்லை. தேர்தல் காலங்களில் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தும் தொழிற்சங்க அரசியல் வாதிகள் வாக்களித்த தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையின் போது பின் நிற்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்நிலைமை மாறவேண்டும். இதற்குத் தொழிற்சங்க அரசியல் வாதிகள் முனைந்து செயற்பட வேண்டும்.இலங்கை நாட்டினைப் பொறுத்த மட்டில் ஏனைய அரச துறைகளில் தொழில்புரிபவர்கள் வருடாவருடம் தமது வாழ்க்கைச் செலவிற்கு ஏற்றவாறு எதுவித நிபந்தனைகளுமின்றிச் சம்பள உயர்வு பெறுகின்றனர். ஆனால் கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு வருடமும் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.அரச உத்த்தியோகத்தர்களின் அளவுக்குத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காவிட்டாலும் தமது அன்றாடச் செலவுகளை நிவர்த்தி செய்யும் அளவுக்காவது சம்பளத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தமது உணவு மற்றும் உடை, போக்குவரத்து, மருத்துவ செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு, விருந்தாளிகளின் உபசரிப்பு உள்ளிட்ட அனைத்தினையும் தமது நாட் சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டே செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கஷ்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் அனைத்து தொழிற்சங்களுடன் ஒன்றிணைந்து ஒரு கணிசமான சம்பள உயர்வினைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.200 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவில் இருந்து தோட்ட தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் தொழில் நிலை அந்தஸ்தினை உறுதிப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டும்.எதிர்கால சந்ததியின் நிலை குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதனால் இம்முறை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கத் தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுத் தீர்க்கமான நன்மையைத் தோட்டத் தொழிலாளருக்குப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
க. விக்னேஸ்வரன்
தினகரன்

Wednesday, September 2, 2009

போராட்டங்களில் பங்கேற்கத் தயார்- மலையக தொழிற்சங்கங்கள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வலியுறுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிக்க தாம் தயார் என மலையக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மலையக மக்கள் முன்னணி- தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கெடுக்க பின்நிற்காது. கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிக்க 600 நாட் சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஐ.தே.க இந்த விடயத்தில் ஒதுங்கியிருக்கக் கூடாது. உழைப்பவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க மறுப்பது மனிதாபிமான செயலாகாது. போராட்டம் நடத்தி சம்பள உயர்வு பெறுவதென்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்கு கடிவாளம் போடப்பட்டது போன்றதொரு நிலையாகும்.
தொழிலாளர் தேசிய சங்கம்:- தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 500 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு இறுதி வரை செயற்பட வேண்டும்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி:- தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 500 ரூபாவுக்கும் குறையாத சம்பளம் இன்றியமையாததாகும். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சஙகங்கள் இதய சுத்தியுடன் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். இந்த விடயத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் வகையிலான எத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்றாலும் அவற்றுக்கு எதிராக தமது தொழிற்சங்கம் போராடும்.
தொழிலாளர் விடுதலை முன்னணி: சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமைக்கு தொழிற்சங்கங்களின் ஒற்றுமையின்மையே காரணம். கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் சரியானதொரு போராட்டத்திற்கு முன்வருவது மூலமாக அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி போராட வழி வகுக்க வேண்டும்.