Saturday, November 21, 2009

அதிகாரப் பரவலாக்கல் முன்னெடுப்புக்களில் மலையக தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படுமா?- இரா. ரமேஸ்

30 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்ட யுத்தம் முடிவடைந்துள்ள அதேநேரம் அரசியல் தீர்வினை நோக்கிய பயணமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சகல சமூகத்தவர்களையும் தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் அரவணைத்து அரசியல் அதிகாரமிக்க ஆட்சி முறை ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மறுபுறமாக அண்மைக்கால அரசியல் மாற்றங்களும் தேசிய சிறுபான்மை இன எழுச்சியும் தேசிய அரசியலில் அவர்களுக்குள்ள முக்கியத்துவமும் சிறுபான்மை இன உரிமை போராட்டங்களும் நாகரிகமான அரசியல் தீர்வு ஒன்றிற்கான அதிகரித்த தேவையினை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படையான யதார்த்தமாகும்.
இத்தகையதோர் பின்புலத்திலேயே இலங்கையின் நிருவாக ஆட்புலத்துக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்த கருத்தாடல்கள் மிக அதிகமாகவே இடம் பெற்று வருகின்றன. ஒரு புறம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் மறுபுறமாக அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இப்பணியில் ஆழமாக ஈடுபட்டு வருவதினை கண்டுகொள்ள முடிகிறது.
13வது சீர்திருத்தத்தின் மூலம் அரசியல் தீர்வினை முன் வைப்பதில் அரசாங்கம் அதிக கரிசணை காட்டி வருகின்றது. பிறிதொரு வகையில் கூறுவதாயின் தற்போதைய மாகாணசபை முறையில் காணப்படும் குறைபாடுகளை களைந்து அதனூடாக அரசியல் தீர்வினை முன் வைப்பதே அரசாங்கத்தின் உள்ளாந்த நோக்கமாகும்.
எவ்வாறாயினும் 1980களில் அரசியல் தீர்வு குறித்து நிலவிய சூழல் அமைவுக்கும் தற்போது உள்ள சூழல் அமைவுக்கும் இடையே பிரமாண்டமான வேறுபாடுகள் உண்டு. இன்று மோதல் தீர்வு என்பது பல பரிமாணம் பெற்றுள்ளதுடன் அரசியல் தீர்வில் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமின்றி இந்திய வம்சாவளித் தமிழர்களையும், முஸ்லீம்களையும் உள்வாங்க வேண்டிய தேவையொன்று காணப்படுகின்றது.
சகல சமூகத்தினரதும் அரசியல் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கருத்துக்களையும் மனங்கொண்டு அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையொன்று காணப்படுவதுடன் மறுபுறமாக சகல சிறுபான்மை அரசியல் கட்சிகளும் இத்தகையதோர் நிலைக்கு தம்மை தயார் படுத்த வேண்டிய அவசரத் தேவையொன்றும் காணப்படுகின்றது.
பலரின் கருத்துப்படி இத்தகையதோர் தீர்வு பூரணத்துவமிக்க ஒரு தீர்வாக அமையும் என்றும் நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இன ரீதிpலான கசப்புணர்வினையும், பகைமையினையும் களைந்து இனங்களுக்கிடையில் கூடி வாழும் எண்ணத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் பேசப்படுகின்றது.
எனவே புதிய அரசியல் தீர்வானது இந் நாட்டில் வாழும் சகல இனக்குழுக்களும் தமது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்தற்கான சூழலையும் தமது அரசியல் தலைமைகள் மூலம் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தமக்கென ஒரு அரசியல் அலகினையும் கட்டமைப்பினையும் கொண்டிருக்கவும் அதனை நிர்வகிக்கவும் வழி செய்வதாக அமைய வேண்டும்.
இத்தகைய எல்லா ஏற்பாடுகளும் இந் நாட்டில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பரந்தும் செறிந்தும் வாழ்ந்து வருகின்ற மலையகத் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வழி சமைக்க வேண்டும்.
உண்மையில் சுதந்திரத்தின் பின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றில் மலையகத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. குறிப்பாக திம்பு பேச்சுவார்த்தையின் போது இம் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் தலைமைகள் அழுத்தங்களை முன் வைத்தன.
சுதேசிய அரசியல் வாதிகள் பிரஜா உரிமை விடயத்தில் கரிசனை செலுத்துவதற்கு இத்தகைய அழுத்தங்கள் வழி செய்தது. ஆயினும் இக் காலகட்டத்தில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும்அதிகாரப் பகிர்வு குறித்த கருத்தாடல்கள் இடம்பெற வில்லை. இலங்கையில் அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவதற்கான பிரயத்தனங்கள் 1957ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்ல ஒப்பந்தத்துடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து 1965ம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தமும், 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபையும், 1987ம் ஆண்டு மாகாணசபை முறைமையும் நல்ல உதாரணங்களாகும். இவற்றைவிட 1991ம் ஆண்டு பிரதேச சபை முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் 1994ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு வரையும் முஸ்தீபுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதனோடு இணைந்த வகையில் அதிகாரப் பரவலாக்க முன்னெடுப்புக்களும் இடம் பெற்றன.
தொடரும்……