இலங்கையில் மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் உழைப்புக்கேற்ப ஊதியம் இன்றி வாழ்வாதாரப் பி்ரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கடந்த வருடம் முற்பகுதியில் மத்திய அரசினால் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்ற இவர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே தொடர்ந்தும் கொடுப்பணவாக வழங்கப்படுகிறது.
இலங்கையில் சேவையிலுள்ள ஆசிரியரின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூபாய் 27 ஆயிரம். இதனைத் தவிர ரூபாய் 7800 வாழ்க்கை செலவு படியும் கிடைக்கும்.
மலையகப் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர் உதவியாளர்களை பொறுத்தவரை தற்போது வழங்கப்படுகின்ற தொகை போதுமானதாக இல்லாத நிலையில் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகின்றது.
இந்தக் கொடுப்பணவு தற்போதைய வாழ்க்கை செலவை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுள்ளது.
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தோட்டப் பிரதேசங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் போட்டி பரீட்சை மூலம் கடந்த வருடம் மே மாதம் தற்போதைய அரசாங்கத்தினால் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றிருந்தனர்
பாடசாலையொன்றில் ஆசிரியருக்குரிய நேர அட்டவணை, பாட ஒதுக்கீடு உட்பட சகல பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் வேதனத்தில் மட்டும் பாரிய இடைவெளி காணப்படுவதாக ஆசிரியர் பயிற்றுநர்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே தமது பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட பாடசாலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் உதவியாளர்களில் ஒரு பகுதியினர் தற்போது ஆசிரியர் பயிற்சிக்கு தெரிவாகியுள்ள நிலையில் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்
ஆசிரியர் உதவியாளர் தங்களது 5 வருட சேவைக் காலத்தில் அரசாங்க ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்னரே நிரந்தர சேவையில் உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சகத்தால் ஏற்கனவே நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது மட்டக்களப்பு, கொட்டக்கல, அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இரு வருட பயிற்சிக்காக அனுமதி பெற்றுள்ள ஆசிரியர் உதவியாளார்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் அனைவருக்கும் விடுதி வசதிகள் கிடைக்காத நிலையில் அநேகமானோர் வெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு மற்றும் தங்குமிடத்திற்கு மட்டும் மாதந்தோறும் ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவாகும்போது வீடுகளிலிருந்து மாதந்தோறும் பணம் பெற வேண்டியிருப்பதாக ஆசிரியர் உதவியாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.