Monday, August 11, 2014

மலையக மக்கள் உழைக்க மட்டும் வந்தவர்கள் அல்ல- கண்டி ராச்சியத்தை ஆளவந்தவர்கள்

மலையக மக்கள் இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருக்கின்றது. ஆனால், மலைநாட்டு தமிழன் ஒரு போதும் யுத்தம் செய்து, ஆளைக்கொன்று, நாடுபிடிக்க இங்கே வரவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்திய வம்சாவளி தமிழன் இங்கே அழைத்துதான் வரப்பட்டான். முதலில் சிங்கள பிரதானிகள் கண்டி இராஜ்யத்தை ஆள அழைத்து வந்தார்கள். இரண்டாம் முறை வெள்ளையர்கள் நாட்டை உருவாக்க அதே கண்டிக்கு மலைநாட்டு தமிழனை அழைத்து வந்தார்கள் இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வடகொழும்பு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற இரா. சடகோபனின்; கசந்தகோப்பி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் உரைநிகழ்த்துகையில் மலையக உழைப்பாளர்களின் கதை, சோகம் செறிந்த வரலாறு. வெள்ளையர்களால் 1823ம் ஆண்டில் மலையகத்தமிழர்கள் கோப்பி பயிரிட இங்கே அழைத்து வரப்பட்டார்கள்.

இறப்பருக்கு முன் தேயிலை. தேயிலைக்கு முன் கோப்பி. இப்படி ஏற்றுமதி விளைபயிர் தோட்டங்களை மலையக தமிழர்கள் தங்களை காணிக்கையாக்கி உருவாக்கினார்கள்.

இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருகின்றது. கண்டியிலே அரச வம்சத்தில் நரேந்திரசிங்கனின் ஆயுள் முடிவுக்கு வந்த பின்னர் கண்டி சிங்கள பிரதானிகள், மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்த விஜய ராஜசிங்கனை அழைத்து வந்து கண்டி ராஜ்ய சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள்.

விஜய ராஜசிங்கன், இறந்த நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரன். அக்காலத்தில் கண்டி ராஜ்யத்துக்கும், மதுரை நாயக்க வம்ச ராஜ்யத்துக்கும் இடையில் திருமணபந்தம் இருந்தது.

குறிப்பாக ஒருபுறம் கண்டி, மதுரை ராஜ்யங்களும், மறுபுறம் தஞ்சாவூர், யாழ்ப்பாண ராஜ்யங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், பரஸ்பரம் உறவு கொண்டும் செயல்பட்டன.

1739ம் ஆண்டு முதல் நான்கு நாயக்க வம்ச மன்னர்கள் 1815 வரை கண்டியை ஆண்டார்கள். அவர்கள்தான் இலங்கையின் கடைசி மன்னர்கள். ஆளவந்த இந்திய வம்சாவளி மன்னனின் ஆட்சி 1815ம் ஆண்டு கண்டியில் முடிவுக்கு வருகிறது.

அதையடுத்து எட்டே வருடங்களில் 1823ம் ஆண்டு  இலங்கைக்கு உழைக்க வந்த முதல் இந்திய வம்சாவளி தமிழன் கண்டிக்கு  வருகிறான். ஆகவே மலைநாட்டு தமிழர் இந்நாட்டுக்கு உழைக்க மட்டும் வரவில்லை, இந்நாட்டை ஆளவும் வந்தவர்கள்.

இந்த வரலாற்றை இந்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக மலையக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உழைக்க வந்த எங்களை பார்த்து எவனாவது, கூலிக்கார்கள் என்று சொன்னால், அவர்களிடம், 'முட்டாளே நாம் இந்நாட்டை ஆண்ட இனமும்கூட. இந்நாட்டின் கடைசி மன்னனின் இனம். அதுவும் இந்நாட்டை காட்டிக் கொடுக்காத, வெள்ளையர்களை கடைசிவரை எதிர்த்து நின்ற இனம்' என்று சொல்ல வேண்டும். கடைசியில் எஹலபோல நிலமே என்ற துரோகியால் வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, உயிரை இழந்த, ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் இனம் என்று தைரியமாக சொல்ல வேண்டும்.

இலங்கை தீவின் வரலாற்றை, இன்று பேரினவாதம், இன்றைய அரசியலுக்கு ஏற்ற முறையில் மாற்றி எழுதுகிறது. இந்நிலையில் உண்மை வரலாற்றை எடுத்து சொல்ல தயக்கம் ஏன்? ஆளுமையுடன் தைரியமாக உரக்க சொல்லுங்கள்.

நமது உழைப்பு, வெள்ளையர் நிர்வாகம், இவைதான் பெருந்தோட்டங்கள். இந்த வரலாற்றில் உழைக்க வந்தவர்களை நிர்வாகம் செய்த வெள்ளையரின் மன அழுத்தங்களை இங்கே சடகோபன் இந்த கசந்த கோப்பியின் மூலம் அரங்குக்கு கொண்டு வருகிறார் என நினைக்கின்றேன்.

இது ஒவ்வொரு தமிழனின் கரங்களிலும் இருக்க வேண்டிய நூல். இது மலையக மண்ணுக்கு அவரது பங்களிப்பு. இதை அவர் முதன் முறையாக செய்யவில்லை. 'கண்டிச்சீமையிலே' என்ற இன்னொரு நூலையும் அவர் எழுதியுள்ளார். இங்கே வருகை தந்துள்ள மலையக சிந்தனையாளர்கள் வாமதேவன், தெளிவத்தை ஜோசப்,  சிவலிங்கம் உட்பட பலரும் இத்தகைய பங்களிப்புகளைதான் வழங்கி வருகிறார்கள். இந்த மண்ணைப்பபற்றி, மனிதர்களை பற்றி எழுதும் இவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.
 
ஒரு சமூகம் வளர அரசியல், சமூக, பொருளாதார, கலாசார துறைகளில் சமச்சீரான வளர்ச்சி தேவை. இதற்கமைய மலையக இளைஞர்கள் சமூகத்துக்கான பங்களிப்புகளை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளிடம் அனைத்தையும் ஒப்படைக்காதீர்கள். எல்லோராலும் தெருவில்  இறங்கி போராட முடியாது.

எழுத முடியாது. கல்வி பணி செய்ய முடியாது. ஆகவே நீங்கள் எங்கெங்கு இருக்கின்றீர்களோ, அங்கே இருந்தபடி உங்களுக்கு இயன்ற பங்களிப்புகளை வழங்குங்கள். இதன்மூலம் மலையகம் சிந்தனையாளர்களின் கரங்களுக்கு மாறுவதை மலையக இளைஞர்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்த மலையக மறுமலர்ச்சி மாற்றத்தை மலையக இளைஞர்கள் இனவுணர்வுடன் உறுதி செய்ய வேண்டும்.

இதை தவிர மலையக விடிவிற்கு வேறு வழியே கிடையாது. விடிவு வேண்டுமென்றால் விலை கொடுக்க வேண்டும். விலை கொடுத்தால்தான் விடிவு வரும். இந்த உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரலாறுகளை படிக்க தேவையில்லை. கண்ணை திறந்து எமது வடகிழக்கு உடன்பிறப்புகளை பாருங்கள்' என்றார்.

சிறுத்தை பிடிபட்டது

நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டப்பகுதியில் சுமார் ஏழு வயது நிரம்பிய சிறுத்தை ஒன்றை ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
 

இதே பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையே இதுஎன  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

பிடிக்கப்பட்ட சிறுத்தையை அப்பிரதேச காட்டுப்பகுதியில் விடுவித்தால் அப்பிரதேச மக்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சிறுத்தையை கொழும்பு தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.

ரதல்ல மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா ரதல்லை நகரில்  பிரதேச மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றை அங்கரிருத்து அப்புறப்படுத்துமாறு கோரி ரதல்லை நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்தில் மதுபானசாலையால்   மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ரதல்லை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தினால்   வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது

இன்று  காலை 10 மணி தொடக்கம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.