Friday, May 31, 2013

25,000 ஏக்கர்பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்தமை தெரியாது- லலித் ஒபயசேகர



பயன்படுத்தாது இருக்கும் தேயிலை பெருந்தோட்ட 25,000 ஏக்கர் நிலப்பரப்பை வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான தீர்மானமொன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, திறைச்சேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகளுடனாள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 
இந்த வரடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து பயன்தரக்மூடிய நோக்கங்களுக்காக இளைஞர்களிடையே பகிர்ந்தளிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இளைஞர் ஒருமவருக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் லலித் ஒபயசேகர தெரிவிக்கையில் அரசாங்கத்துடனான பெருந்தோட்டக் கம்பனிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டடிருந்த போதிலும் காணி பகிர்ந்தளிக்கும் திட்டம் பற்றி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் கம்பனிகள் சார்பில் கலந்து கொண்ட போதிலும் கூட இதுபற்றி கலந்துரையாடப்படவில்லை என்றார். 

குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.
இது பற்றி பெருந்தோட்டக் கைத்தொழில் நிபுணரொருவர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்,

இத்தகைய நிகழ்ச்சித் திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் அரசின் இந்த நடவடிக்கை உரிய பலனை அளிக்கப் போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றி அடிப்படை அறிவற்ற கட்சி ஆதரவாளர்களுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படவுள்ளதால் அவை உரிய பலனைத் தராதெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை தங்கள் பெருந்தோட்ட நிலங்களில் தேயிலைக் செடியை மீள நடுகைக்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சினையாக தொழிலாளர் பற்றாக்குறையே இருந்து வருவதாக பல்வேறு பெருந்தோட்டக் கம்பனிகள் முறையிட்டுள்ளன. 

Tuesday, May 14, 2013

பெரும் வெள்ளத்தினால் மத்திய மாகாணத்தில் 6 பேர் பலி மூவரை காணவில்லை


மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் சுமார் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 4000 பேர் 32 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கிறது.

1361 குடும்பங்களைச் சேர்ந்த 4667 பேர் இந்த மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் . மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நான்கு இம் மாகாணத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 

துற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்துள்ளார்
 

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, நிவித்திகலை, எலபாத்த, குருவிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 

முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் இரத்தினபுரியில் 121 குடும்பங்கள் 755 பேர், எஹலியகொடையில் ஒரு குடும்பம் 4 பேர், பெல்மதுளையில் 117 குடும்பங்கள் 580 பேர், எலபாத்தையில் 38 குடும்பங்கள் 151 பேர் அடங்குவர்
இதேவேளை கண்டி அங்கும்புரை பல்லேகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அனுர ஜயசிங்க(45) முச்சக்கர வண்டியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவரை தேடுவதற்காக கடற் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

Monday, May 13, 2013

இடி தாக்கியதில் தொழிலாளர் இருவர் காயம்

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் இன்று 13 ஆம் திகதி முற்பகல் வேளையில இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது கைகளில் இயந்திரங்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவர் மீது இடி வீழ்ந்ததில் படுகாயமடைந்த இருவர் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்தச்சம்பவத்தில் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஸ்ரீதரன் , பெருமாள் புனிதகுமார் ஆகிய இரண்டு தொழிலாளர்களே காயமடைந்தவர்களாவர்

Thursday, May 9, 2013

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு




கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று அதிகாலை909-05-2013) தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கு நீர் நிரப்பும் குழாய் கட்டமைப்புக்கும் சேதமேற்பட்டுள்ளதாக நானுஓயா கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.
இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

Sunday, May 5, 2013

இ.தொ.கா.வுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நுவரெலியா மாநகரசபையில் தோல்வி


   
தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்கமான இ.தொ.கா.விற்கு நன்றி தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி சார்பில் நுவரெலியா மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எம் சந்திரன் சமர்பித்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆர்.ராஜராம், எதிர்கட்சியான ஐ.தே.க.வை சேர்ந்த உறுப்பினர்களான எல்.நேருஜி, கே. சந்திரசேகரன். சந்தன லால் கருணாரட்ன, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஆர்.கேதீஸ் ஆகியோர் வாக்களித்தனர். அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாதென்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றியதோடு இத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தை தலைமை தாங்கிய மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார இத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டார். தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும், 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நடுநிலை வகித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார, பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரட்ன, மாநகரசபை உறுப்பினர் குமாரதேசபிரிய தீர்மானத்தை வழிமொழிந்த உறுப்பினர் எம்.பஸில் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, May 2, 2013

உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன.

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தால் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்.." என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்களில் கேலிக்கையாகக் கூறுவதுண்டு.

அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன.
அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள்.

மலையகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கு அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று 'சிறுவர் தொழிலாளர்கள்" என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை 105 ரூபாவாக அதிகரித்துள்ளோம் என கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும் அதில் 75 வீத வரவுக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கை குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றே கூறமுடியும்.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் தாம் முன்வைக்கும் சம்பளக் கோரிக்கை எதுவென்பதை இறுதி வரை மக்களுக்கு தெளிவுபடுத்தாததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிலாளர்களின் வரவுக் கொடுப்பனவை விட அடிப்படைச் சம்பளத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறுதி வரை கருத்து தெரிவிக்கவில்லை.

கூட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு தோட்டங்களில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆயினும் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
அதேபோன்று வெளிப்படைத் தன்மையில்லாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இலாபமீட்டலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதன் மூலமே அவர்களின் எதிர்கால இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்