உள்ளூராட்சி அதிகாரசபை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் மத்திய மாகாணசபையில் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. கடந்த 12-05-2009 அன்று கண்டி பள்ளேகல மாகாணசபை மண்டபத்தில் மத்திய மாகாணசபையின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஆளும் ஐ.ம.சு.மு. யுடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் மூவர் இணைந்து வாக்களித்தனர். சிங். பொன்னையா, எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோரே ஆதரித்து வாக்களித்தனர். இ.தொ.கா.வை சேர்ந்த மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சமூகமளிக்கவில்லை. ஐ.தே.க.வுடன் இணைந்து எஸ். இராஜரட்ணம், எஸ்.சதாசிவம், கணபதி கனகராஜ், எஸ். உதயகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.மர்ஜான் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் பிரதிகள் வாசிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபை சட்டதிருத்தத்தினை ஒத்திவைத்துள்ளதாலும் இவ்விவகாரத்தை நடத்தும் அவசியமில்லை எனவும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் போது இவ்விவாதத்தினை நடத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பீ. திஸாநாயக்க முதலில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதன் அவசர தேவைபற்றி 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு ஆளுநர் முறைப்படி சபையின் ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவித்துள்ளார். மே 5 ஆம் திகதி கூட்டத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் பிரதி வழங்கப்படவில்லை என்பதால் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை மட்டும் ஆராய்ந்து விவாதிக்கலாம். மத்திய அரசு திருத்தங்கள் மீண்டும் கொண்டுவரும் போது நாம் மீண்டும் கூடி விவாதிக்கலாம் என்றார்.
Thursday, May 14, 2009
தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆசிரியர்கள்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக சகல தோட்டப் பாடசாலைகளுக்கும் பௌதீக வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தோட்டப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் வீ.சாந்தகுமார் பன்விலை ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் மலையகத்தின் கல்வி நிலை தற்போது மாற்றம் பெற்று வருகிறது. மலையகத் தோட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைகளில் படித்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்றார். இந்த நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற தோட்டப்புற தமிழ் மக்கள் இனிமேல் பல துறைகளிலும் எழுச்சி பெற்று விளங்குவர்.
பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் மக்களுக்கு நன்மை
தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டிருக்கும் கூட்டுறவுச் சங்கக்கடைகள் அனைத்தையும் திறப்பதன் மூலம் 14,000; மக்கள் நன்மையடைவார்கள் என பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் பசறை ப.நோ.கூ. சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல கூட்டுறவுச்சங்கக் கடைகள் தோட்டப்பகுதிகளில் வெறுமனே மூடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டு பசளை குருப் தோட்ட கூட்டுறவுச்சங்கக் கடையே முதலாவதாக கூட்டுறவு அதிகார சபையிலும் கூட்டுறவு அமைச்சிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பின்னர் நகரம் மற்றும் கிராமப் புறங்களிலும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றது. 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசறை குருப் தோட்ட கூ. கடையும், அதேபோல் இன்னும் 50 க்கும் மேற்பட்ட கடைகள் தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள கடைகளின் அனைத்து விபரங்களையும் திரட்டி அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
Subscribe to:
Posts (Atom)