Monday, April 15, 2019

கந்தப்பளையில் தேயிலைத் தோட்டம் அலோசியஸுக்கு குத்தகைக்கு?

நுவரெலியா - கந்​தப்பளை பிரதேசத்திலுள்ள 450 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று, 2015ஆம் ஆண்டில் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அவரின் மகனான அர்ஜுன் அலோசியஸிடம், மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டமானது, மாதாந்தம் 8,000 ரூபாய் 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தப்பளை, மாஹகுடுகள தோட்டமே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், ஒரு மாத இடைவெளியிலும் மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று 7 மாத காலப்பகுதிக்குள்ளும் இந்த தோட்டம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி தோட்டத்தை 2045 ஆம் ஆண்டு வரையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், ஜெப்ரி அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் 2015.09.15 அன்று கையெழுத்திட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சுக்குச் சொந்தமான மேற்படி தோட்டம், முன்பு “மத்துரட்ட” கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஜெப்ரி அலோசியஸ் குறித்த காணியைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தோட்டத்தில், இரண்டு பங்களாக்களும் வைத்திய மத்தியஸ்தானம் ஒன்றும், ஊழியர்களுக்கான இருப்பிடம் ஒன்றும் தாய்மார்களுக்கான இல்லமொன்றும் காணப்படுவதாகவும், பெறுமதிமிக்க 19,000 மரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி- தமிழ் மிரர்