சென்னையில்
குடியிருப்பவருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூடத் தெரியாது.
வெளியூர்க்காரர்கள் இதனை கிண்டலுக்காக சொன்னாலும், பெரும்பான்மையான
இடங்களில் உண்மை இதுதான்.
வணக்கம்
வைத்தாலோ, புன்முறுவல் பூத்தாலோகூட பதிலுக்கு அப்படி செய்வதையே விரும்பாத
அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் உண்டு. அவர்களிலும் சிலர் சொத்து
எழுதிக் கேட்ட பங்காளியைப்போல முறைத்து விட்டோ, முகத்தைத் திருப்பிக்
கொண்டோ போவார்கள். மொத்தமும் ஒரே நாளில் தலைகீழானது.
திரைப்படங்களில்
பார்த்த, திகில் கதைகளில் படித்த காட்சிகள் கண்ணெதிரே நடந்தன. கொஞ்சமும்
இரக்கமற்ற அரக்கனைப் போல கொட்டித்தீர்த்தது மழை. இதைப் பேய் மழை என்று
சொல்வதெல்லாம் மிகச் சாதாரண வார்த்தை. நேற்றுவரை சாக்கடைகளாக மட்டுமே
இருந்த ஆறுகள் எல்லாம் பழிதீர்க்கும் வேகத்தில் பாலங்களை மீறி சென்னைக்குள்
பாய்ந்தன. சுற்றிலும் தண்ணீர்க்காடு. எனினும், குடிப்பதற்குத் தண்ணீர்
இல்லை.
ஒரு
பாக்கெட் அல்லது ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என கண்கள் ஏங்கின.
பாலுக்காக அழுத பிள்ளைகளின் கண்ணீர் வற்றிப்போனது. இரண்டு, மூன்று, நான்கு
சக்கர வாகனங்கள் நகர முடியவில்லை. பேருந்துகள் இல்லை. பிதுங்கி வழியும்
மின்சார ரயில்கள் செல்வதற்குத் தண்டவாளங்களே தெரியவில்லை. சென்னையின்
இருபெரும் ரயில் நிலையங்களான சென்ட்ரலும், எழும்பூரும் மொத்தமாக இயக்கத்தை
நிறுத்திக் கொண்டன.
மீனம்பாக்கத்தில்
நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே
புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும்
பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின. பார்த்து, பார்த்து
வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவைப் போல
புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது. மாதத் தவணையிலும், கடன்
அட்டையிலும் வாங்கிய பொருள்கள் எல்லாம் கண் முன்னே மிதந்து சென்றன.
படகில்
தப்பிபோகும் போதே கீழே மூழ்கிக் கிடக்கும் கார்களை ஏக்கத்தோடு பார்த்துச்
செல்வது தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு
பொருள்கள் வாங்குவதைக் கெளரவக் குறைச்சலாக மாற்றியதன் இன்னொரு முகத்தை
ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் உணர்ந்தார்கள்.
மணிக்கணக்கில்
நின்ற பிறகும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியவில்லை. அதுவும்
கிடைக்காமல் அல்லாடியவர்களும் உண்டு. வீட்டில் ஆயிரம் ரூபாய்கூட
வைத்திருக்க வேண்டியதில்லை, எல்லாவற்றுக்கும் அட்டை போதும் என்ற
தாராளமயமாக்கலின் வரம் பல் இளித்து நின்றது.
மின்சாரம்
தொலைந்த கணங்கள் உயிர் இருக்கும்போதே நரகத்தில் தூக்கிப்போட்டன.
உயிரைப்போல இறுக்கிப் பிடித்து வைத்திருந்த செல்லிடப்பேசிகள் செயலிழந்தது
இதன் உச்சம். செல்லிடப்பேசி இன்றி எங்கும் செல்ல முடியாது, எதுவும் செய்ய
முடியாது என்பதும் பொய்த்துப்போனது.
செல்லிடப்பேசிக்கு
மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்ற மின்சாரம் இல்லை. மாற்று வழிகளில் சார்ஜ்
ஏற்றினாலும் பேசுவதற்கு சமிக்ஞை (சிக்னல்) கிடையாது. கைவிடப்பட்ட
குழந்தைகளைப்போலக் கிடந்த பழைய தொலைபேசிகள் இருக்கிற இடங்களைத் தேடி
ஓடினார்கள். வெளியூர்களில்
இருந்து தவித்த உறவுகள் ஒருபக்கம் என்றால், சென்னைக்குள்ளேயே வெவ்வேறு
பகுதிகளில் இருந்த சொந்தங்களையும் நட்பையும் தொடர்பு கொள்ள முடியாமல்
மிரண்டு கிடந்தனர்.
இருமல், தும்மல் என ஒன்று விடாமல் பதிவேற்றும் முகநூல் பக்கம் போக முடியாதது பலருக்கு சோகத்திலும் ஆகப்பெரும் சோகம்.
சுற்றி
என்ன நடக்கிறது என்று உணர முடியாத பயங்கரத்தில் பக்கத்து
வீட்டுக்காரனைக்கூடத் தெரியாத சென்னையின் இன்னொரு முகம் வெளிப்பட்டது.
மாமழை மீட்டெடுத்த அந்த மனித நேயத்தின் வடிவங்கள் உண்மையிலேயே
மெய்சிலிர்க்க வைத்தன.
உணவு, உறைவிடம், உடை, தண்ணீர் என தத்தளித்தவர்களுக்கு வாரிக்கொடுத்த பலர், நேற்று வரை யாரென்றே தெரியாதவர்கள். அரசுகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அவர்கள் யாரும் காத்திருக்கவில்லை. இயன்றவர்கள் முடிந்ததை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இவர்களில் பலர் பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தவர்கள்.
அங்கங்கே
குழுக்களாகச் சேர்ந்தார்கள். போக்குவரத்து வழிகாட்டுதலில் தொடங்கி,
நீச்சலடித்து காப்பாற்றியது வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, எந்த
எதிர்பார்ப்பும் இன்றி ஆளுக்கு ஒரு வேலை செய்தார்கள். பேரிடர் துயரத்திலும்
பெரும் ஆறுதல் தந்தது இந்த மனிதம்தான். இதுபோக, இனம், மதம், மொழி, சாதி,
பாலினம் எல்லாவற்றையும் ராட்தச மழை ஒரே அடியில் சமமாக்கியது. எஞ்சியது
இரண்டே பிரிவு. மிதந்தவர்கள். மிதக்காதவர்கள். அவ்வளவுதான்.
அதேநேரத்தில்,
வானம் நிகழ்த்திய துயரம், நமக்கு சிலவற்றைப் பாடமாக சொல்லி இருக்கிறது.
அவற்றை, இப்போதே அழுத்தந்திருத்தமாக மனதில் பதியவைக்கவில்லை என்றால், வெள்ள
நீரோடு சேர்ந்து அதன் வேகமும் வடிந்து போய்விடும். முதலில் இது ஒன்றும்
வரலாறு காணாத மழை இல்லை.
சமீபத்திய
ஆண்டுகளில் நாம் பார்த்ததில்லையேத் தவிர பாட்டன், பூட்டன் காலத்திலேயே
இப்படியான மழை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் கணக்கீட்டு அளவுகளும்,
முன்னெச்சரிக்கை ரமணன்களும் இவ்வளவு நவீனமாக இல்லை. இருந்தாலும் அவற்றை
எல்லாம் சமாளிக்க ஏற்ற வகையில், தமிழர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு
இயைந்திருந்தது.
ஒவ்வோர்
ஆண்டும் கோடைக் காலத்தில் கூரை வீட்டை கீற்றோ, பனை ஓலையோ வேய்ந்து
செப்பனிடுவார்கள். அதற்கு மேல் வைக்கோல் போட்டு, அம்மிக்கல்லைத் தூக்கும்
ஆடி மாத காற்றடித்தாலும் பறக்காத அளவுக்கு பக்குவப்படுத்துவார்கள்.
ஐப்பசி
மாத அடைமழைக்கு முன்பாக அரிசி உள்ளிட்ட தானியங்கள் சேகரமாகிவிடும்.
புரட்டாசியில் மழைத் தொடங்கி, கார்த்திகை கடைசியில் ஓய்ந்து, பனி
ஆரம்பிக்கும் வரையில் தேவையான எரிபொருள்கள் வீட்டுப் பரணில் பத்திரமாக
இருக்கும். மழை நேரத்தில் காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், அப்போது
குழம்பு வைப்பதற்குத் தேவையான மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் என
வித விதமான வற்றல் வகையறாக்கள் சித்திரை வெயிலில் சரடாக காய்ந்து பானைகளில்
காத்திருக்கும்.
இத்தகைய,
திட்டமிட்ட வாழ்வியல் முறையால்தான் ஒரு நாள்கூட விடாமல் மாதம் முழுக்க
கொட்டிய மழையிலும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்கள். கோணிப்பையை மழைக்
கோட்டாக மாற்றி சுற்றிச் சுழன்றுள்ளார்கள். இன்றைக்கு லட்சங்களில் சம்பளம்
வாங்குபவர்களின் வீடுகளிலும் மாதத்தின் முதல் நாளில் சாப்பிடுவதற்கு
ஒன்றுமில்லாமல் தத்தளித்த காட்சிகளை என்னவென்று சொல்வது.. அடச்சே - என்ன
வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் - எவ்வளவு சம்பாதித்து என்ன செய்ய -
அன்றாடங்காய்ச்சிகளான ஏழை - பாழைகளே தேவலாம் போலிருக்கிறதே.
தனி
மனிதர்கள் மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் கால்நடைகளுக்கான வைக்கோல்
படப்பு போடுவதையும்கூட நுணுக்கமாக செய்தார்கள். அதன் மேலடுக்கு தாண்டி
சொட்டுத்தண்ணீர் உள்ளே இறங்காது. எல்லாவற்றுக்கும் மேலாக நீர்நிலைகளை
நம்முடைய தாத்தாக்கள் கையாண்ட விதமே தனி. குளம், ஏரி, ஊருணி எல்லாம்
அந்தந்த ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய வேலைகள் முடிந்த
காலத்தில் அவற்றை எல்லாம் தூர் எடுத்தார்கள். வீட்டுக்கு ஓர் ஆள் இந்தப்
பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முடியாதவர்கள் அதற்குரிய
பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதற்கென குடி மராமத்து வரி போடுவார்கள்.
ஆறுகள், வாய்க்கால்களும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு தண்ணீர் வரும் பாதை
தரமாக தயாராகிவிடும். வயல் வெளிகளுக்கு, ஏரி - குளங்களுக்கு நீர் வருவதை
உறுதி செய்வது போல, எல்லா ஊர்களிலும் வடிகால்களும் வெள்ளம் வந்தால் தண்ணீரை
வடித்தெடுக்கும் வகையில் தூர் வாரப்படும்.
சென்னையில்
ஓடும் ஆறுகளின் பெயர்கள்கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் கூவம் என்று
சொல்வதைப்போல, கிராமங்களிலும் பாசன வாய்க்காலுக்கும், வடிகாலுக்கும்
வித்தியாசம் தெரியாத தலைமுறை வளர்ந்து நிற்கிறது. அதன் விளைவைத்தான்
இப்போது எதிர்கொண்டிருக்கிறோம்.
ஆமாம்,
கனவு போல நடந்து முடிந்திருக்கிற கோரத்தாண்டவம் சென்னைக்கு மட்டுமானதல்ல.
ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான ஆகப் பெரிய எச்சரிக்கை மணி. இதன்பிறகும்
சுதாரித்துக் கொள்ளாவிட்டால் - அனுபவத்திலிருந்து பாடம் கற்காவிட்டால்...?
மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின.பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவை போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது.