Monday, March 28, 2011


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: