Tuesday, June 30, 2009

சேமலாப நிதி இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள்

புளத்சிங்கள, தங்கஸ்கந்த தோட்டம் சுமார் 200 ஏக்கரைக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான ஒரு இறப்பர் தோட்டம். பத்து குடியிருப்புக்களைக் கொண்ட ஒரு லயன் கட்டடமும், பன்னிரெண்டு குடியிருப்புகளைக் கொண்ட ஒரு லயன் கட்டடமுமாக இரண்டு கட்டடங்களே இருக்கின்றன. 24 குடியிருப்புக்கள் மட்டுமே இருந்த போதிலும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதில் வசித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் மாதம் 1500, 2000 என்ற தொகையையே சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர். சட்டப்படி சம்பளம் வழங்கப்படாது பட்டைசீவி இறப்பர் பால் கொண்டு வருவதைப் பொறுத்து நாளொன்றுக்கு 95 ரூபா என்ற கணக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பெற்றுக் கொண்டவர்களும் கையொப்பம் எதுவும் போடாது பணத்தை மட்டுமே பெற்று வந்துள்ளனர்


2003ம் ஆண்டு முதல் தோட்டம் மூடப்பட்டுள்ளதாகத் தோட்ட உரிமையாளர் அறிவித்ததையடுத்து இங்குள்ள தொழிலாளர்கள் வெளியில் சென்று உழைத்து ஊதியம் தேடி குடும்பம் நடாத்தி வருகின்றனர்.தோட்டம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் வெளியிடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வேலை வாங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வேலை செய்த காலத்தில் அவர்களுக்கான எவ்வித சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவில்லை.லயன் கட்டிடம் திருத்தி கொடுக்கப்படவில்லை

தோட்டத்தில் தற்பொழுது வேலையில்லாத போதிலும் தொடர்ந்து இதே லயன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். குடி நீர்வசதி, மலசலகூட வசதி எதுவுமே கிடையாது. இந்த வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே இன்று வரையில் இங்குள்ள தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி அட்டை வழங்கப்படவில்லை. 1982 முதல் 1992 வரையிலான காலப் பகுதியில் ஒரு சிலருக்கு ஊழியர் சேமலாப நிதிக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏனையோர் இது தொடர்பாக தோட்ட உரிமையாளரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆந் திகதி இங்குள்ள தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகித்த தொழிற்சங்கமான இ.தொ. கா. மூலம் களுத்துறை தொழில் நீதிமன்றத்தில் தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். கஷ்டப்பட்டு உழைத்துத் தேடிய பணத்தை நான்கு வருடகாலமாக நடைபெற்ற வழக்கு தொடர்பாக செலவு செய்த போதிலும் தொழிலாளர்கள் வேலை செய்தமையை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் கிடையாது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதி தோட்ட உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு எங்களைக் கஷ்டத்தில் போட்டுவிட்டார் என விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.


நேர்மைக்கும், நீதிக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக 2007ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் எதுவித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.தோட்டப்பாதை மிக மோசமான நிலையிலேயே உள்ளது. அவசரத் தேவைகளுக்கோ அல்லது திடீர் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதாயின் சுமார் ஒரு கி.மீ.தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. முச்சக்கரவண்டியில் செல்வதாயின் 150 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது. தபால் சேவை கிடையாது. புளத்சிங்கள தபால் அலுவலகத்துக்குச் சென்று கடிதம் ஏதும் வந்துள்ளதா என அவரவர் விசாரித்துப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலை மாணவர்களும் நடந்தே செல்ல வேண்டியுள்ளனர்.


தனியார் தோட்டம் என்று சொல்லும் பொழுது பெரும்பாலும் அங்கு சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. மூடி மறைந்த ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது கூட வெளியில் தெரிவதில்லை. தொழிற்சங்கவாதிகளும் தனியார் தோட்டம் குறித்து பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வதில்லை.கம்பனித் தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைவிட தனியார் தோட்டங்களில் கெடுபிடிகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்கா தவையாகவே இருந்து வருகின்றன.

தொழிலாளர் சார்பாக ஆஜராகி வாதாடி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தொழிற்சங்கவாதிகள் தோட்ட உரிமையாளரிடம் சந்தோஷம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு தொழிலாளரை நட்டாற்றில் கைவிட்டு விடுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும் என இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரைகாலமும் இந்தத் தோட்டத்தில் தொழிலாளரின் நலன் கருதி எந்தவொரு திட்டமோ உதவியோ எவரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆக மேல் மாகாண சபை உறுப்பினரான கித்சிரி கஹட்டபிட்டிய சுமார் 25 லட்சம் செலவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


எஸ். சூரியமாலா (53)


இருபத்தைந்து வருடகாலம் கணவனும் நானும் தோட்டத்தில் வேலை செய்தோம். சம்பளம் மட்டுமே கிடைத்தது. வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி கிடைக்கவில்லை. வழக்கு தொடர்ந்து எதுவித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. நாலு வருடங்களாக நடந்த வழக்குக்காக பெரும் பணம் செலவழித்தோம். கடைசியில் தொழிற்சங்கவாதிகள் எங்களை ஏமாற்றி தோட்ட உரிமையாளருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். இவ்வளவு காலம் தொழிற் சங்கத்தில் இருந்தும் ஒரு பயனுமில்லை. எங்கள் நிலையை கடவுளிடம்தான் சொல்ல வேண்டும் என்றார்.


எஸ். ராஜசிங்கம் (48)

நான் வெளியில் வேலை செய்து நாளொன்றுக்கு 275 ரூபா முதல் 300 ரூபா வரையில் உழைத்து வருகிறேன். தோட்டத்தில் ஏழு வருடகாலம் வேலை செய்த போதிலும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.தனியார் தோட்டங்களில் நடக்கும் அநீதியை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது.


தமிழ் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இருந்தும் பயனில்லை. ஒரு கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களிடம் மூன்று மாதம் அலைய வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திக்கச் சென்றால் ஐயா குளித்துகொண்டு இருக்கிறார். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அல்லது செய்தி கேட்கிறார், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியான பதில்கள் தான் கிடைக்கின்றன என்றார்

இங்கிரிய மூர்த்தி


நன்றி- தினகரன்
சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயித்து தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதால் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தொழில் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் தொழிலாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னைய சம்பள அதிகரிப்பின்போதும் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான சம்பள உயர்வு வழங்கப்படாமையினாலும்,அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் தோட்டத் தொழிலாளர் நாளுக்கு நாள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தோட்டத்தொழிற்துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்துடன் தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணம் கூட அம்மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை ஓரளவாவது நிவர்த்திசெய்யும் வகையில் அரசாங்கத்தினதோ, முதலாளிமாரினதோ ஒத்துழைப்பு கிடைக்காது அவர்களது சம்பளத்தை சட்டபூர்வமாக அதிகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தொடர்ந்து பிற்போடுவது தோட்டத்தொழிற்துறைக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்குப்போதுமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருமாறு பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேயிலை, இறப்பர் தொழிற்துறை உற்பத்திகள் குறைந்தன. இதனால், தேசிய வருமானத்துக்கும் பாதிப்பேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். எனவே தான் இதனை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்கப் போராட்டம் 3 மாதங்களாகத் தொடர்ந்தன. அத்தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் 3.300 மில்லியன் நட்டமேற்பட்டதாக முதலாளிமார் தெரிவித்திருந்தனர்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் போதுமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாக இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் இதனை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் நிலையிலும் முதலாளிமார் அதனை தள்ளிப்போட்டு வருகின்றனர். தேயிலை வர்த்தகச் சந்தையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்துறை நல்ல நிலையிலேயே உள்ளது. தேயிலை ஒரு கிலோ 450 ரூபாவாகவும் இறப்பர் ஒரு கிலோ 250ரூபாவாகவும் உயர்ந்த விலையில் இருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதுவித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கச்செய்யாது சுமார் நான்கு இலட்சம் தோட்டத்தொழிலாளிகளுக்கு வாழ்க்கைக்குப்போதுமானளவு சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கும்படி முதலாளிமார் சம்மேளனத்தை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். இதற்காக அரசாங்க பிரதிநிதி என்ற வகையிலும் தொழில் தொடர்பு மற்றும் மனிதவள அமைச்சர் என்ற வகையிலும் நீங்கள் துரித தலையீடொன்று செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – நன்றி – தினக்குரல்

Monday, June 29, 2009

பசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா

பசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்
அடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படுமென இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் கெட்டேதென்ன என்னுமிடத்தில் கடந்த 27-06-2009 மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இரு பெண்கள் படுகாயமடைந்து காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில். ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பகுதி மக்களுக்கு மண்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரத்தினபுரி எல்லாவெல மகா வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள மலை சரிந்து வருவதாக எகலியகொடை பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக இந்த மலையின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதால். இப்பகுதியிலுள்ள சுமார் 14 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு எல்லாவெல மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா
மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவலையளிக்கிறது

பெருந் தோட்டத்துறைச் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரை காலமும் தீர்க்கப்படாமலிருப்பது கவலைதரக் கூடிய விடயமென ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் முதுகெலும்பான தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதில் எமக்குப் பங்குண்டு. அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டப்புற பகுதியிலுள்ள வெற்றுக் காணிகளையெல்லாம் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென அரசு வெள்ளையறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் தீர்மானமிக்க வளம் குறைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையொன்று உருவாகும். கடந்த 200 வருடங்களாக குளிரிலும் பலத்த காற்றின் மத்தியிலும் வேலை செய்து நாட்டின் வருமானத்தின் பிரதான தூண்களாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை முகவரி கிடையாத சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கோ,சுயநலனுக்காகவோ மூடி மறைக்கப்படாமல் பகிரங்கப்படுத்த என்றும் தயங்கக்கூடாது.
இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன்

சகல வாகனங்களுக்குரிய ரயர்களையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஏதுவாக 200 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையாக முன்வைப்பதாக தெரிவிதத்த கைத்தொழில் அமைச்சர் குமார்வெலகம
வருடாந்தம் ரயர் இறக்குமதிக்கென 3 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் 44 வீதம் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. 7 வீதம் அல்லது 9 வீதம் செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ரயர் உற்பத்தியை அதிகரிக்கும் போது வெளிநாட்டுக்குச் செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியுமென்ற நோக்கத்திலேயே உள்ளுரிலேயே ரயர் உற்பத்தி மேற்கொள்ளவும் இதற்கு நவீன தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்றார்













அப்புகஸ்தனை திபட்டன் தோட்டம்


காடு மண்டிய தோட்டம் தேயிலை மலையாவது எப்போது?



180 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் காடாகக் காட்சியளித்த இத்தோட்டம் இன்று காடு மண்டிக் கிடக்கிறது. 175 குடும்பங்கள் வாழ்ந்த இத் தோட்டத்தில் இன்று சில குடும்பங்களே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விடிவு எப்போது யாரால் வரும்?’
மஸ்கெலியா நகரிலிருந்து நோட்டன் வழியில் செல்லும்போது சுமார் 18 கி.மீற்றர் தூரத்தில் அப்புகஸ்தனை தோட்ட திபட்டன் பிரிவு இருக்கிறது. தனியார் துறைக்குச் சொந்தமான திபட்டன் பிரிவானது 180 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தேயிலைத் தோட்டமாகும். சுமார் 175 குடும்பங்கள் இத்தோட்டத்தில் வசித்து வந்தன. தேயிலை உற்பத்தியே பிரதான தொழிலாகும். சிறந்த முறையில் இயங்கி வந்த இத்தோட்டம் அப்புகஸ்தனையுடன் இணைக்கப்பட்டு அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
பெருந்தோட்டங்கள் மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தேயிலைச் செடிகளுக்கிடையே வாகை இன மரங்கள் நடப்பட்டன. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான வாகை கன்றுகள் நாட்டப்பட்டன. எஞ்சிய 80 ஏக்கர் நிலப்பரப்பில் தனியே தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்தன. எனினும் தேயிலையை உற்பத்தி செய்தவற்கான எந்தவொரு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலா காலத்திற்கேற்றவாறு உரமோ, மருந்துகளோ இடப்படாமல், சரியான முறையில் பராமரிக்காமல் தேயிலைக் கொழுந்தை மட்டும் எடுத்து வந்தது, புற்கள், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இன்னும் 10 வருட காலப்பகுதிக்குள் திபட்டன் தோட்டம் காடாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்து விட்டதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. பாரிய வாகை மரங்கள் வெட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்தால் தொழிலாளர்களாகிய எமது வாழ்வு சிறப்பாக அமையும். நிர்வாகத்திற்கு பெருமளவு இலாபம் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்றார் பெருமாள் ஜயசேகரன். தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரிசு நிலப்பகுதியில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நிர்வாகங்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை தேயிலைக் செடிகளுக்கு இடையே பாரியளவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மலைப்பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதால் அதிகளவு நீரை உறிஞ்சுவதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் இல்லாமல் போகலாம். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாத வகையில் தோட்ட நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயசேகரன்
அதே தோட்டத்தில் கீழ் பிரிவில் இருக்கும் அஜித்குமார், குடியிருப்புக்கள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்தை கடப்பதற்கான பாதை நீண்டகாலமாக கவனிப்பாரற்று குன்றும் குழியுமாக காட்சி தருகிறது. ஒரு நோயாளியை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று வரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தோட்ட நிர்வாகமும் எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார் புஷ்பகுமார். பெண் தொழிலாளியான சுசிலா, கருத்து தெரிவிக்கையில், தேயிலைச் செடிகள் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். புற்கள் தேயிலைச் செடிகளுக்கு மேலாக வளர்ந்து காடுகள் போல காட்சி தருகிறது. ஏனைய மூன்று நாட்களிலும் அப்புகஸ்தனை மேல் பிரிவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வேலைக்கு போனால் மாலை 6 மணிக்கு வீடு வந்து சேருகிறோம் என்றார்.
மழைக்காலங்களில் அட்டைக்கடியால் பெரிதும் சிரமப்படுவதாக புஷ்பவதி தெரிவிக்கிறார். தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. எமது தோட்டத்தில் வைத்தியசாலை இருந்தும் அங்கு வைத்தியர் ஒருவர் இல்லாததால் அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை நாடவேண்டியிருக்கிறது. தோட்ட வைத்தியர் மாலை 5 மணிவரை வைத்தியசாலையில் இருப்பார். நாங்களும் ஆறு மணியாவதற்குள் வீட்டுக்கு சென்றால்தான். அதன் பின்னர் தனியே செல்ல முடியாது பன்றி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது.
எமது தோட்டத்தினூடாக பிரதான வழியை சென்றடைவதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அல்வா லக்சபான தோட்ட மற்றும் மக்கள் இவ் வீதியையே பெரிதும் பபயன்படுத்துவதுண்டு. மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தோட்ட வழியாகச் செல்லும் ஆற்றை ஊடறுத்து பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தார். எனினும் 25 சதவீத வேலைகள் நடைபெற்று பாதியில் முடங்கிவிட்டது. நாளொன்று ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீதியையும் பாலத்தையும் பயன்படுத்துவதால் அதனை புனரமைப்புச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் புஷ்பவதி.
1987ம் ஆண்டில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோது எமது தோட்டப் பகுதியிலுள்ள ஒரு சமதரையான 40 ஏக்கர் காணியில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இறுதியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. திபட்டன் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் 16 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடியிருப்புக்கள் 150 வருடகால பழைமை வாய்ந்தவை. தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே அதில் வசித்து வருகின்றன. ஏனையோர் வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அக்குடியிருப்பின் கூரைத்தகடுகள் ஓட்டையாகி சல்லடைபோல தோன்றுகின்றன. மின்சார வசதியிருந்தும் மின் இணைப்பை பெறுவதற்கான போதிய பணமில்லாத நிலையில் வாழும் இத்தோட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது நமது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.


இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் லயன் காம்பராக்களை தகர்த்து புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொண்டுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்பதே தோட்ட மக்களின் அவாவாகும். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்கு கேட்பார்கள் நாங்களும் வாக்குகளை அளித்து அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகிறோம். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையென அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செ. தி. பெருமாள்
நன்றி- தினகரன்

Friday, June 26, 2009

1950 களின் பின் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளே மக்கள் இன்றும் அகதிகளாக உள்ளனர். – திஸ்ஸ விதாரண

இலங்கையில் 1950 களின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளே எமது மக்கள் அகதிகளாவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்று இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் பிரேரணை தொடர்பாக உரையாற்றிய விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையி;ல் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மலையக மக்களுக்கு இன்னும் அது பூரணமாக வழங்கப்படவில்லை என்பதும் அவர்கள் நாடற்ற பிரஜைகளாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். குடந்த காலங்கள் மறக்கப்பட வேண்டும். உடனடியாக அகதிகளாக இந்தியாவில் தங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் அழைத்து வரப்பட்டு அவர்கள் உரிமையுள்ள மக்களாக மாற்றப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையர் யாவரும் சமம். ஐக்கிய இலங்கை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுகின்றனர் என்ற செய்தியை நாம் உங்களுக்கு கூற வேண்டும். இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.
தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் மக்கள் தொடர்பில் அரசு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இதனுடன் இந்திய வம்சாவளி மக்களது பிரச்சினையையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இதன் மூலம் ஐக்கிய இலங்கையை உருவாக்க முடியும் என்றார்.
ஆவணங்களை பெற்றுகொள்ள மத்திய மாகாணசபையின் பங்களிப்பு வேண்டும்

பெருந்தோட்டத்துறை மக்களின் அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் மத்திய மாகாணசபை முழு பங்களிப்பை வழங்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சதாசிவம் மத்திய மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இம் மக்களுக்கு பிறப்புச்சான்றிதழ், அடையாள அட்டை, வாக்களார் இடாப்பில் பதிவு தொடர்பான பிரேரணையின் போது இதனை தெரிவித்தார். பெருந்தோட்டப் பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாமைக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லாமையே. இலங்கை பிரஜை என்றவகையில் இந்த அத்தியாவசிய ஆவணங்கள் கட்டாயமாகும். இம் மக்கள் இவ் ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான நடைமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்த அரசு முன் வர வேண்டும் என்றார்.
தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் இல்லை

பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கு கடந்த ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை என தபால் சேவகர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது தமது சொந்த சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர்.மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் 04 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 07 பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

Thursday, June 25, 2009

களுத்துறை மாவட்டத்தில சுமார் 5000 தோட்ட மக்கள் வாக்களிக்க முடியாத நிலை

களுத்துறை மாவட்ட தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை இல்லாததால் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் சுமார் 5000 தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை யை பெற்றுக் கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சேவையைப் போல் களுத்துறை மாவட்டத்திலும் மேற்கொண்டு அம் மாவட்ட தொழிலாளர்களுக்குப் இவற்றை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு அம் மக்கள் பதில் நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருந்த போதிலும் மாவட்டத்திலிருந்து பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் முகமாக 1,800 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்
சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை பிற்போடப்படுவதை அனுமதிக்க முடியாது

ஊவா மாகாணத் தேர்தலை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தைகள் பிற்போடப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி. சென்னன் தெரிவித்தார். மேலும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த் தைகளைப் பிற்போட்டு வருகின்றன. இதனால், தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் வெற்றுக்காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல், கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்களிடம் பண மோசடி செய்யும் கும்பல்

களுத்துறை, இங்கிரிய, ஹொரண, புளத்சிங்கள, இரத்தினபுரி, காவத்தை, இறக்குவானை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு காணி, காணிக்கான உறுதி பெற்றுக்கொடுத்தல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, வாகனச் சாரதிப் பத்திரம், வேலைவாய்ப்பு என்பவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களிடம் பெருமளவு பணத்தை மோசடி செய்துவருவதாக தெரிவிக்கின்றனர். இதில் தொழிற்சங்கவாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் இறக்குவானை பகுதியில் பிரபல தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மாவட்டப் பிரதிநிதியொருவர் தொழிலாளரிடம் இவ்வாறான கருமங்களை மிக எளிதாகவும் விரைவாகவும் செய்து தருவதாகக் கூறிப் பணத்தை வாங்கி தலை மறைவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆசாமி தோட்டத் தொழிலாளி ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியை விரைவில் பெற்றுக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து 20.000 ரூபாவை சன்மானமாகப் பெற்றுள்ளார். இவ்வாறானவர்கள் குறித்து தோட்டப்புற மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, June 24, 2009

நுவரெலியா மாவட்டத்தில் 33 மரண விசாரணை அதிகாரிகள் நியமனம்

நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு தமிழ் மரண அதிகாரிகள் 33 பேர் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் ஐவர் பெண்களாவர். இந் நியமனம் எதிர்வரும் 28-06-2009 அட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலய புதிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெறுகிறது.
பெருந்தோட்டத்துறை கங்காணிமார் மாநாடு

பெருந்தோட்டத்துறை கங்காணிமார்களுக்கான மாநாடொன்றினை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதிக் கல்வியமைச்சர் மு.சச்சிதானந்தன் முன்னெடுத்து வருவதாக அமைச்சரின் இணைப்பாளர் ஆசிரியர் கே.இராஜேந்திரன் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் கங்காணிமார்களுக்கான பிராந்திய செயலமர்வுகள் பசறை, பதுளை, அப்புத்தளை, வெலிமடையென பல்வேறு இடங்களில் இடம்பெற்று வந்தன. இதனையடுத்து எதிர்வரும் ஜூலை மாதமளவில் மாநாடொன்று இடம்பெறவுள்ளதுடன், அரிய சேவையாற்றிய கங்காணிமார்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன், கங்காணிமார்களின் தொழில்சார் சிறப்பம்சங்களான பாடல்கள், கதைகள் என்பனவும் சேகரிக்கப்படுவதுடன், ஓய்வுபெற்றுள்ள கங்காணிமார்கள் பலரும் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ளனர். இம்மாநாட்டின் போது பிராந்திய கருத்தரங்குகளில் கூறப்பட்ட உயர்வான கருத்துகள் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் தொழில்சார் இடர்பாடுகள், வாழ்வியல் அபிவிருத்திக்கான தொழிற்திறன் பற்றிய கருத்துகள், அபிலாசைகள் என்பனவும் ஆராயப்படவுள்ளன.
இக்கருத்தரங்கு தொடர்பாக பிரதிக் கல்வியமைச்சர் மு.சச்சிதானந்தன் தெரிவிக்கையில்; ஏறக்குறைய 175 வருடகால வரலாற்றைக் கொண்டவர்களான பெருந்தோட்டத் துறையினரின் சமூகவளர்ச்சிக்கு அன்று தொட்டு இன்றுவரை பல்வேறு வகைகளில் மிக உயர்வான பங்களிப்பினை கங்காணிமார்கள் வழங்கிவருகின்றனர். பல துறைகளிலும் பங்களிப்புச் செய்து வரும் கங்காணிமார்களின் சாணக்கியம் நிர்வாகத்துறையையும் தொழிலாளர் சமூகத்தை உள்ளடக்கிய பிணக்குகளுக்கு சுமுகமான முடிவுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் அடிகோலியுள்ளது. இவர்கள் அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றமையை பெருமைப்படுத்தவே மாநாடு நடத்தவுள்ளது.

Monday, June 22, 2009

மலையக தோட்டத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் -மலையக இடதுசாரி முன்னணி

மலையக தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மலையக இடதுசாரி முன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று உலகிலேயே மிகவும் கீழ் மட்ட நிலையில் வாழ்க்கை தரத்துடன் வாழும் மக்களில் மலையக சமூகம் ஒன்றாக உள்ளது. இம் மக்களின் வழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எத்தகைய வேலைத்திட்டங்களும் இன்றியே, மலையகத் தலைமைகள் உள்ளன. தமது சுகபோகத்திற்காக தொடர்ந்தும் மக்களை ஏமாற்றியே வருகின்றன.
தற்போது மலையக தொழிலாளர்களுக்கு நாளாந்த கூலியாக ரூபா 500 வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களில் பேசப்பட்டு வரப்படுகிறது. ஆட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் மலையக தலைவர்களும் இதைப் பற்றி பேசத்தொடங்கி உள்ளனர். இவர்களின் பேச்சை ஒருபோதும் மலையக மக்கள் நம்பமாட்டார்கள். நாளாந்த கூலி ரூபா 500 என்ற விடயத்தில் மலையகத் தலைவர்களும் பங்கு கொண்டால், நிச்சயம் அப்போராட்டம் சாகடிக்கப்படும் என்பது மலையக மக்களுக்கு நிச்சயம் தெரியும். ஏனென்றால் கடந்தகால வரலாறு அத்தகைய பாடத்தையே அவர்களுக்கு புகட்டியுள்ளது.
மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்பாக ஊடகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரில் உண்மையில் போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் உள்ளனர். போராட்டத்தை தொடரவிடாமல் ஏமாற்ற வேண்டும் என்ற கபட எண்ணத்துடன் செயற்படுபவர்களும் உள்ளனர். அனைத்து மலையக தலைமைகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று போராடினால் மலையக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூபா 500 ஆக உயர்த்த முடியும். ஆனால், இவர்கள் ஒரு போதும் ஒன்றுபட மாட்டார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மாய மானை மலையக மக்கள் மறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. உண்மையில் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் மூன்று மலையக தொழிற்சங்கங்கள் மாத்திரமே பங்கெடுதிருந்தன. ஒட்டுமொத்த மலையகத் தொழிலாளர்களுக்கும் இந்த மூன்று தொழிற்சங்கங்கள்தான் பொறுப்பு என்றால் ஏனைய தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? இவர்கள் அரங்கில் இருந்து வெளியேறிவிட்டனரா? அல்லது விலைபோய் விட்டனரா?
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறிப்பிட்ட காலவரையான சம்பள உயர்வு கோர முடியாது ஆனால் தேயிலை விலை ஏற்றம் ஏற்பட்டால் அதன் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இன்று வரை தொழிலாளர்களுக்கு அத்தகைய இலாபம் எதுவும் வழங்கப்படவில்லை. இதுபற்றி தொழிற்சங்க தலைமைகளிடம் கேட்டால் கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக பதில் அளிக்கின்றனர்.
தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்

கடந்த 11 வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம், தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய மாகாண சபையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் சம்பள உயர்வு தொடர்பான பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வலியுறுத்தியுள்ளார். 1998 இல் இருந்து கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து வருகிறோம். எமது மாகாணத்திலேயே தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே வருமானம் பற்றி கேட்க எமக்கு அதிகாரம் உண்டு. தொழிலாளருக்கு சம்பளம் போதாது. ஒரு நாள் சம்பளத்தினை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
5.74814 பேர் பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5.74814 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 1.17.000ஒரு இலட்சத்து பேர் தமிழ் வாக்காளர்கள். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர்களே, வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் 2007 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைவிட 15 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூஈற்று மூன்று வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதேவேளை, பெருந்தோட்டப் பகுதி தமிழ் வாக்காளர்களில் 14.700 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகளோ தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலான ஆவணங்களோ இல்லை. பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் கீழ்க்கண்ட வகையில் வாக்காளர்கள் (மகியங்கனை 85562, வியலுவை 48231, பசறை 60002, பதுளை 51468, ஆலி-எல 63124, ஊவாபரணகம 59472, வெலிமடை 68937, பண்டாரவளை 77312, அப்புத்தளை 60706 என்ற அடிப்படையில் 574814 பேர் வாக்காளர்களாகவுள்ளனர்.